Sunday, January 20, 2013

இது உங்க ஏரிகள்...உள்ளே வாங்க!

கூகுள் நிறுவன வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஏரிகளை சீரமைக்கும் பணிகளைச் செய்து வருகிறார் ஓர் இளைஞர்

                       
                                             
‘கூகுள் (GOOGLE) மாதிரி மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும்’ என்பதுதான் பெரும்பாலான இளைஞர்களின் கனவு. ஆனால், கூகுள் நிறுவன வேலையை ராஜினாமா செய்துவிட்டு சுற்றுச்சூழலைக் காக்க முழுநேரமும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு உழைக்கிறார் 25 வயதான அருண் கிருஷ்ணமூர்த்தி.

இதுவரை தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி என இந்தியா முழுக்க 12 ஏரிகளை மறுசீரமைப்பு செய்துள்ளார். இதற்காக யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், பள்ளி மாணவர்களை மட்டுமே திரட்டி, தன் சொந்த முயற்சியால் இதைச் செய்துவருகிறார் அருண். அண்மையில் இவருடைய இந்த முயற்சிகளைப் பாராட்டி, ஸ்விட்சர்லாந்தின் ரோலக்ஸ் நிறுவனம் விருது ஒன்றையும் கொடுத்து கௌரவித்துள்ளது.
                                     




எனக்கு சின்ன வயசிலேருந்தே பறவைகள்னா ரொம்பப் பிடிக்கும். அப்போ, சென்னையில நாங்க இருந்த பகுதியில கீழ்க்கட்டளைன்னு ஓர் ஏரி இருந்தது. பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதிக்கு முக்கியமான நீராதாரம் அதுதான். அந்தப்பகுதியில் ஏகப்பட்ட பறவைகளும், மீன்களும், ஆமைகளும் இருந்தன. ஆனால், இன்றைக்கு அந்த ஏரி பெரிய குப்பைக்கிடங்காக மாறிவிட்டது. அதையெல்லாம் மீட்கிற பணியில்தான் இப்போ மும்முரமாக இருக்கிறோம். அதைத்தான் இந்தியா முழுக்க செய்யத் தொடங்கியிருக்கிறோம்" என்று பேசத்தொடங்கினார் அருண்.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மைக்ரோ பயாலஜியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, ஐஐஎம்சியில் பட்டமேற்படிப்பையும் முடித்தார். படித்து முடிக்கவும் கூகுள் நிறுவனத்தில் நல்ல வேலையும் கிடைத்தது.

கூகுளில் வேலை பார்க்கும்போதே நண்பர்களோடு இணைந்து, ஆந்திராவில் இருக்கிற குருநாதன் செருவு என்கிற ஏரியை சக நண்பர்களின் உதவியோடு சுத்தம் செய்து முடித்திருக்கிறார். 2009ல் சென்னையில் இருக்கிற லட்சுமி புஷ்கரம் என்கிற ஏரியை சுத்தம் செய்திருக்கிறார்.

ஓர் ஏரியை சுத்தம் செய்வதென்பது அங்கிருக்கிற குப்பைகளை மட்டுமே எடுத்துப்போடுவது அல்ல. ஏரியைச் சுற்றி வேலி அமைத்தல், தூர்வாருவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது இதற்குமுன் அதைப் பற்றி சரியாக ஆய்வு செய்வது எனப் பெரிய வேலை. இதையெல்லாம் கண்காணித்து செய்வதற்கு என்னுடைய வேலையும் பணிச்சூழலும் மிகப்பெரிய தடையாக இருந்தது" என்கிற அருண், அதுவரை வெவ்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செய்துவந்த சேவைகளை தனியாகவே செய்ய முடிவெடுத்தார்.

ஒவ்வொரு பள்ளியிலும் சுற்றுச்சூழல் குறித்த ஆர்வத்தை வளர்க்கும் பொருட்டு, நிறைய நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தார். அதோடு, ஏரிகளை சுத்தம் செய்யும் ஆர்வமுள்ள மாணவர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.

                                             

2011ல் என்விரான்மென்டலிஸ்ட் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா (EFI) என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை தன்னந்தனியாகத் தொடங்கினார். இது தற்போது இந்தியாவின் மூன்று நகரங்களில் முழுவீச்சுடன் செயல்பட்டு வருகிறது. இதை நிர்வகிப்பவர்கள், பங்குபெறுபவர்கள், உரிமையாளர்கள் எல்லாமே மாணவர்கள் மட்டும்தான். அனைவருக்குமே வயது 20க்கும் கீழ்தான். இதுவரை 900 பள்ளி மாணவர்கள் அருண் கிருஷ்ணமூர்த்தியோடு இணைந்து, இந்த ஏரிகள் மறுசீரமைப்புக்கு உதவி வருகின்றனர்.

இந்த மாணவர்களைக் கொண்டு தெருக்கூத்து மூலமாக மக்களிடையே ஏரிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பேர்டு வாட்சிங் மூலமாக பறவைகளை அறிதல், இயற்கையைப் படம் பிடிப்பது என்று இந்த அமைப்பு எப்போதுமே செம பிஸிதான். அதோடு, இரண்டு டாகுமெண்ட்ரி படங்கள் எடுத்திருக்கிறார் அருண். அது சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வென்றுள்ளது.

எங்கள் நிறுவனத்துக்கு ஸ்பான்சர்கள் கிடையாது. நாங்கள் உதவி என்று கைநீட்டிக் காசு கேட்க மாட்டோம். கொடுத்தாலும் வாங்கவும் மாட்டோம். அதனால், என் செலவுகளுக்காகவும் இந்த அமைப்பை தொடர்ந்து நடத்தவும் ஒரு தகவல்தொடர்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன். இந்த நிறுவனத்தின் மூலம் கிடைக்கிற வருவாயில் பாதியை சமூக சேவைக்கும் மீதியை எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பிரித்துக்கொள்வேன்" என்று சொல்கிற அருணுக்கு சர்வதேச இளைஞர் சங்கமும் விருது கொடுத்து கௌரவித்துள்ளது.

தற்போது கிடைத்திருக்கும் ரோலக்ஸ் விருதுக்கான பரிசுத் தொகையை பணமாகத் தருவதற்குப் பதிலாக, சென்னையில் இருக்கிற கீழ்க்கட்டளை ஏரியை மறுசீரமைக்கத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைக் கேட்டிருக்கிறார் அருண். அந்த நிறுவனமும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. விரைவில் கீழ்க்கட்டளை ஏரியை சரிசெய்யும் பணி தொடங்கிவிடும்" என்கிறார் அருண்.

நன்றி-அதிஷா

3 comments:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது