Sunday, July 21, 2013

புதுமைப் பண்ணை


எந்தவொரு வேலையையும் முழு ஈடுபாட்டோடு செய்யும்போது, அதன் சூட்சுமங்கள் நமக்கு எளிதில் பிடிபட்டுவிடும். பாரதியும் இயற்கையை நேசித்து, விவசாயத்தை ஈடுபாட்டோடு செய்ததால் அதில் பல புதுமைகளையும் தொழில்நுட்பங்களையும் புகுத்தியிருக்கிறார்.

 ஜப்பானிய இயற்கை விஞ்ஞானி மசான ஃபுபுகோகு தன்னுடைய பண்ணையைப் பற்றி கூறுகையில், ஜப்பானிலே 25 ஆண்டுகளாக உழாமல் பயிரிடப்படும் பண்ணை என்னுடையது மட்டுமே. ஏனெனில், நான் இயற்கையோடு இணைந்தே விவசாயம் செய்கிறேன். காடுகளை யாரும் உழுவது இல்லை, மண்புழு தவிர. இலை, தழை தவிர அவற்றிற்கு வேறு உரங்கள் இல்லை. அதுபோலவே எனது பண்ணையையும் மண்புழுக்களே உழுகின்றன. இலை, தழைகளே உரமாகின்றன. ஆனாலும் மற்றவர்களைவிட நான் அதிக மகசூல் எடுக்கின்றேன்..." என்கிறார்.

அந்த ஜப்பானிய விவசாயியைப் போலவே இயற்கையோடு இணைந்த ஒரு பண்ணையை உருவாக்கியிருக்கிறார் பாரதி. திருவாலங்காட்டில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது இவரது இயற்கைப் பண்ணை. இயற்கையை நேசித்ததால், தான் நடத்திவந்த தொழிலகத்தை விட்டுவிட்டு, 2000-ஆம் ஆண்டில் துவங்கியதுதான் இந்தப் பண்ணை. பாரதியிடம் பேசியபோது, இப்போதெல்லாம் நமது பிள்ளைகள் ஹார்லிக்ஸ், பூஸ்ட் சாப்பிடாமல் வளர்வது இல்லை. ஆனால், எனது பிள்ளைகளுக்கு (இவர் தோப்பில் உள்ள மரங்களை பிள்ளை என்றே அழைக்கிறார்) யூரியா என்றால் என்ன, பொட்டாஷ் என்றால் என்ன என்றே தெரியாது. ஏனெனில், நான் பண்ணையை ஆரம்பித்த நாள் முதலே இயற்கை விவசாயம்தான் செய்து வருகிறேன். என்னிடம் மொத்தம் 20 மாடுகள், 300 ஆடுகள், 250 கோழிகள், 5 கழுதைகள், 1 ஒட்டகம், 2 குதிரைகள், 50 வாத்துகள், வான்கோழி, சண்டைக்கோழி, மயில் போன்றவை அடங்கிய ஒரு விலங்குகளின் சரணாலயம் உள்ளது.

பறவைகளை சுதந்திரமாக விட்டுவிடுகிறேன். அவற்றை நான் கூண்டுகளில் அடைப்பதில்லை. பண்ணை வேலைகளை அவைகளே செய்துவிடுகின்றன. ஆடு, மாடுகளை பண்ணைக்குள் ஓட்டிச் செல்லும்போது, அவை மேய்ந்து களைகளைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் கழிவுகளை அங்கேயே விட்டு விடுகின்றன. இதனால், தனியாக உரமிட வேண்டிய அவசியம் இல்லை. கோழிகளும் வாத்து மற்றும் மற்ற பறவைகளும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன. இப்படி முக்கிய வேலைகளை எல்லாம் அவைகளே பார்த்துக் கொள்வதால், பல ஏக்கர் பரப்பளவு உள்ள பண்ணையை இரண்டே பேர் மட்டுமே பார்த்துக் கொள்கிறோம். மாம்பழ அறுவடை காலங்களில் மட்டும் கூடுதல் ஆட்களை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறோம்..." என்கிறார்.

இவரது தோப்பில் செந்தூரம், அல்போன்சா, காளப்பாடி, ருமானி, இமாம் பசந்த், பங்கனப்பள்ளி, பத்தரசம், செருகுரசம், ஜவ்வாரி, நீலிசா, மல்லிகா, பெங்களூரா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மா வகைகள் மற்றும் சப்போட்டா, நெல்லி, கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற பழ வகைகளும் குமிழ், மகாகனி, செந்சந்தனம், தேக்கு, ரோஸ்வுட், ஈட்டி, ருத்ராட்சம், சந்தனம் போன்ற விலையுயர்ந்த 100 அரிய வகை மரங்களும் உள்ளன. தற்போது, மின்சாரம் மட்டுமே வெளியில இருந்து வருகிறது. அதற்கும் 5 ஹெச்.பி. மோட்டார் இயங்கக் கூடிய வகையில் சூரிய மின்கலன் ஒன்றை அமைத்துள்ளேன். இதை விரிவு செய்யும் திட்டமும் உள்ளது. அதை நிறைவேற்றும் பட்சத்தில் நாங்கள் வெளியில் இருந்து எதுவும் வாங்க வேண்டியிராது. ஆடு, மாடுகளுக்குத் தேவையான கோ-3, கோ-4, ஸ்டைலா, அகத்தியும் உள்ளேயே பயிரிடப்படுவதால் எங்கள் பண்ணை ஒரு தற்சார்புப் பண்ணை..." என்கிறார் இவர்.


தொடர்புக்கு: பாரதி - 99400 17635

Saturday, July 13, 2013

இஸ்லாமியப் பார்வையில் பெண்.

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ....

பெண்களை இஸ்லாம் அடிமைப்படுத்துகிறது என ஊடகங்களிலும்,
தினசரிகளிலும் அறியாதோர் ஆயிரம் கட்டுக்கதைகளும் எழுதினாலும்....
இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு அது ஒரு துளி அளவு கூட பாதிப்பை
ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனம்.....!!!!

முஸ்லிம்கள் பெண்களை மூடி வைத்து
கொள்கின்றனர் என விதண்டாவாதம் பேசுவோர்.....
மனிதனுக்கு அழகிய வழியை மட்டும் காட்டும் இஸ்லாம்
என்னும் அழகிய மார்க்கத்தில்,
ஒரு மனிதன் தன் தாய்க்கு பணி விடை செய்வதன் நல்ல முறையில்
நடந்து கொள்வதின் மூலமாக சொர்க்கம் செல்கிறான் என்ற நபிகளாரின் பொன் மொழியை படித்துப்பார்த்ததுண்டா...???

ஒரு பெண் குழந்தை பிறப்பில் இருந்து மரணிக்கும்வரை தன் வாழ்வில் அவளை நன்முறையில் நடத்தவேண்டும் எனவும் ....
அவர்களுடன் சரியான முறையில் நடந்துகொள்ளவில்லையென்றால்
அநீதம் இழைத்தால் அவன் அதை பற்றி கடுமையாக விசாரிக்கப்படுவான் என்று அச்சமூட்டி எச்சரித்த மார்க்கம் இஸ்லாம் தவிர வேறு ஏதும் உண்டா...???

ஒரு முஸ்லிம் ஆண்...தன் குடும்பத்தில் உள்ள பெண்களான
தாய்,சகோதரி,மகள்கள்,மனைவியிடம் நல்ல முறையில் நடந்து
கொள்வது அவனை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் காரியம் என
போதித்த மார்க்கம் இஸ்லாத்தை தவிர வேறு ஏதும் உண்டா....???

தாயைப்பற்றி அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்...

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”
அல் குர் ஆன் -31:13.

மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும்.
அல் குர் ஆன் -46:15.

இப்படிப்பட்ட தாயின் காலடியிலே சொர்க்கம் இருக்கிறது .
நசயீ- 3104,அஹ்மத்15475.
என அண்ணலார் கூறியுள்ளார்கள்.

எவருக்கு பெற்றோர்களில் இருவரோ அல்லது அவர்களில் ஒருவரோ  இருந்து,அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளவில்லையென்றால் அவர் நரகத்தில் நுழைவார்.மேலும்,அல்லாஹ் அவனைத் தனது அருளை விட்டு தூரமாக்கிவிடுவான்.தப்ரானீ-346....

இன்னொரு ஹதீஸில் பெற்றோரை பேணாதவனின்
மூக்கு மண்ணை கவ்வட்டும் என அண்ணலார் எச்சரித்துள்ளார்கள்.

நம்முடைய வாழ்நாளில் நாம் எத்தனையோ
உறவையும்,நட்புகளையும் கடந்து வந்தாலும் நம் தாய்....தாய்....
தாயை தவிர வேறு யாரும் நம்மை 10 மாதம் சுமக்கவில்லை .....!!!

20 வயது வரை இடி விழுந்தாலும் தூக்கத்தில் எழாத அப்பெண் திருமணமாகி குழந்தை பெற்ற பின்பு மழலையின் அழுகுரல் க்ரீச் என கேட்டதும் தூக்கிவாறிப்போட்டு எழுவாள் தெரியுமா.....அதுவே தாய்ப்பாசம்...

தன் தூக்கத்தை தியாகம் செய்து குழந்தையை தாலாட்டுவாள்....
தன்னை அலங்கரிக்க மறந்து குழந்தையை அலங்கரித்து
கண் குளிர்ச்சி அடைவாள்.......
பசி வரும் நேரம் குழந்தை அழுதால் தன் பசி மறந்து
குழந்தைக்கு அமுதூட்டுவாள்.....
தன் குழந்தையின் அசுத்தததை  முகம் சுளிக்காமல்
இரவும்,பகலும்  சுத்தம் செய்வாள்....

நமக்காக,....நமக்கே.....நமக்காக இத்தனை பணிவிடையும் செய்யும் சுயநலமில்லாத ஒரு நபர் இவ்வுலகத்தில் உண்டா........???

அல்லாஹ்வின் அன்பு 70 தாய்களின் அன்புக்கு சமமானது
என தாயின் அன்பையே உதாரணமாக கூறுகிறான் என்றால்....
சுபுஹானல்லாஹ்....சொல்ல வார்த்தைகளே இல்லை......

இத்தனை தியாகமும் நம் வாழ்நாளில் செய்யக்கூடிய ஒரே
மனுஷி தாய் மட்டுமே!!!

இந்த தாயிடமும்,தந்தையிடமும் எப்படி நடக்க 
வேண்டுமென அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்....!!!

இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை 
அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக;அல் குர் ஆன் -17:24.

ஆனால்,நாமோ.....ஆசிரியரிடம் கை கட்டி பணிவாக நிற்கிறோம்...
பெற்றோரிடம் அவ்வாறு பணிவோடு நடப்பதில்லை.....

ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள்;-

நான் கேட்டேன்:இறைவனின் தூதரே!!!பெண் மீது யாருக்கு
                                  அதிகமான உரிமை இருக்கின்றது?”

அண்ணல் நபிகளார் கூறினார்கள்: அவளுடைய கணவனுக்கு’.

நான் கேட்டேன்: ஆண் மீது யாருக்கு அதிகமான உரிமை இருக்கின்றது?’’

அண்ணல் நபிகளார் விடையளித்தார்கள்;அவனுடைய தாய்க்கு’’
ஹாகிம்-7244

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து,
இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள்.
புகாரி-5971.

அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். புகாரி-5975.

இதெல்லாம் தாயைப் பற்றி இஸ்லாம் கூறியுள்ள உயர்வான கருத்துக்கள்.

இன்னும் தாய்க்கு அடுத்து  ஒரு ஆண் தன் வாழ்க்கையில்
சந்திக்கும்  மிகவும் அதி முக்கியமான நபர்....மனைவி....

மனைவியின் அருமையை பற்றி குர் ஆன் கூறும் செய்தியை பார்ப்போமா???

நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்;
உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
அல் குர்ஆன்- 30:21.

மனைவியை பற்றி அல்லாஹ் மன அமைதி என்றும்
சிந்தித்து உணரக்கூடிய அத்தாட்சி எனக்கூறுகிறான்....

திருமணத்திற்கு முன் வரை விளையாட்டு பிள்ளையாய் இருக்கும்
பெண் திருமணம் செய்த பின் தன் சொந்த பந்தங்களை எல்லாம்
விட்டு விட்டு கணவனின் மீது உள்ள பாசத்தால் கசிந்துருகி
கணவனை மிக உயர்வான இடத்தில் இருத்தி அவனுக்காகவே தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறாள்....

அப்படிப்பட்ட பெண் ஏதேனும் சில விசயங்களில் கருத்து வேறுபாட்டுடன் நடந்தால் அம்மனைவியிடம் எப்படி நடக்க வேண்டும் என அல்லாஹ் கணவனுக்கு இடும் கட்டளையை பாருங்கள்....

அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.
அல்குர் ஆன் -4:19.

இன்னும்,இவ்வுலகத்தில் மனிதனுக்கு கிடைக்கும் மிக
சிறந்த பொக்கிஷமென அண்ணலார் கூறுவது நல்ல மனைவியை......

இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களில்
மிகவும் மேலானது நல்ல மனைவியே......
முஸ்லிம்-2911.

இரண்டு மனைவிகள் உடைய கணவனுக்கு
வல்லோன் இடும் கட்டளையை பாருங்களேன்....
பெண் மீது ஆண் கொடுமை இழைக்காதிருக்க இறைவன் அநியாயத்தின் அத்தனை வாசல்களையும் தன் வசனத்தின் மூலம் அடைத்து விட்டான்....

முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது; ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
அல் குர் ஆன் -4:129

இதைப்பற்றி அண்ணலார் கணவனுக்கு இடும்
எச்சரிக்கையை பாருங்களேன்....

யாருக்கேனும் இரண்டு மனைவியர் இருந்து,
அந்த இருவருக்கும் இடையே நேர்மையாக நடக்கவில்லையானால்,
ஒரு பக்கம் சாய்ந்தவனாக மறுமையில் வருவான்.
அபூதாவூத்,நஸயீ,இப்னுமாஜா.

இன்னும் மனிதர்களில் சிறந்தவர் யார் என அடையாளம்
காண அண்ணலார் சொல்லும்  அளவுகோல் என்ன தெரியுமா???
மனைவியடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமாம்....!!!..ஆம்..!!

உங்களில் எவர் தம் மனைவியிடம் நல்லவராக 
இருக்கின்றாரோ அவர்தாம் உங்களில் நல்லவர்.
திர்மிதீ-1195.

ஒரு ஆண் தன் நண்பர்களிடத்திலோ,வேலை பார்க்கும் இடத்திலோ நல்ல மனிதனாக காட்டிக்கொள்ள முடியும்....ஆனால்,மனைவி மட்டுமே அவனை சரியாக அளக்கும் அளவுகோல் என அண்ணலார் அருள்மொழி பகிர்ந்துள்ளார்கள்...

இன்னும் அவனுக்கு பிறக்கும் பெண் குழந்தையை
நற்செய்தி என்று சிறப்பித்து சொல்வதும்....
நேர்வழி காட்டும் இஸ்லாமே..................

இரண்டு பெண்மக்களை பெற்றவருக்கும்,மூன்று பெண்மக்களை பெற்றவருக்கும் அண்ணலார் கூறும் நற்செய்தி இதோ.................

 “எவர் இரு பெண் மக்களை வளர்த்து பரிபாலித்து வந்தாரோ,அவரும் நானும் இணைந்து  இந்த  இரு விரல்களைப் போல் சொர்க்கத்தில் நுழைவோம்”என்று நபி ஸல் அவர்கள் தமது இரு விரல்களை சுட்டிக்காட்டினார்கள்.
#திர்மிதி-191.

“எவருக்கு 3 பெண் மக்கள் அல்லது 3 சகோதரிகள் அல்லது 2 பெண் மக்கள் அல்லது 2 சகோதரிகள் இருந்து அவர்களை நன்முறையில் பராமரித்து அவர்களுக்குரிய கடமைகளில் அல்லாஹ்வை பயந்து நடந்தால்,அவருக்கு சொர்க்கம் கிடைக்கும்.
#திர்மிதீ-1916.

ஆண் பிள்ளைகளுடன் பெண் பிள்ளைகளை பாரபட்சம் காட்டும் ஆணுக்கு இஸ்லாம் கூறும் எச்சரிக்கை என்ன தெரியுமா....???

“எவருக்கு பெண்  குழந்தை பிறந்து அவர் அதை (அறியாமைக்காலத்தில்  செய்தது போல்)  உயிருடன் புதைக்காமல்,அதை இழிவாக கருதாமல்(அவர்களுடன்  பழகுவதில்) பெண் பிள்ளையை விட  ஆண் பிள்ளைக்கு முன்னுரிமை தராமல்,(மகனுடன் நடந்து கொள்வது போலவே மகளுடனும்) நடந்தார் என்றால்,மகளுடன் நடந்து கொண்ட முறைக்கு  பிரதிபலனாக  அல்லாஹுத்த ஆலா  அவரை சுவர்க்கத்தில் நுழைய வைப்பான்”
#ஹாகிம்-177.

எவரேனும் ஒரு முஸ்லிமுக்கு இரு பெண் மக்கள் இருந்து இவர் அவர்களுடன் நல்லமுறையில் நடந்து அவ்விருவரும் இவரிடத்தில் இருக்கும் வரை,அல்லது இவர் அவர்களிடத்தில் இருக்கும் வரை அவ்விரு பெண் மக்களும் இவரை நிச்சயம் சொர்க்கத்தில் நுழைய வைப்பார்கள்.
#இப்னு ஹிப்பான்- 207.

பெண் குழந்தையுடன் நல்ல முறையில் நடக்கும் ஆணுக்கு சொர்க்கம் என நற்செய்தி சொல்வது அழகிய மார்க்கமான இஸ்லாம் மட்டுமே ஆகும்...

இன்னும் ஒரு சகோதரியை பொறுப்பேற்றுக்கொள்ளவே யோசிக்கும் சுயநலமிக்க உலகத்தில் இரண்டு அல்லது மூன்று சகோதரிகளுக்கு உணவளித்து  பொறுப்பேற்று கொள்ளும் ஆணுக்கு சொர்க்கம்
என நற்செய்தி சொல்வதும் இஸ்லாம் மட்டுமே.............

இன்னும் தன் குடும்பத்திற்கு மட்டும் உழைக்கும் சுயநல ஆண்களுக்கு மத்தியில் விதவைப்பெண்ணுக்கும்,ஏழைக்கும் உதவி செய்யும் ஆணுக்கு
ஜிஹாதின் நன்மை கிடைக்கும் என ஆர்வமூட்டுவதும் இஸ்லாம் மட்டுமே...!!!

கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர் 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்' அல்லது 'இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார்.
புகாரி-6006

பெண் தாயாகவும்,மனைவியாகவும்,மகளாகவும் இருக்கும்போது அவளுக்கு கிடைக்க கூடிய உரிமைகள்,சலுகைகள் வேறு எந்த மதத்திலோ,இனத்திலோ
இல்லை....

இன்னும் அண்ணல் நபி ஸல் அவர்கள் தனது இறுதிப்பேருரையில் மிக மிக வலியுறுத்தி சொன்ன வாசகம் இவை.........

“பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அமானிதமாக அவர்களை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள்”.
                                             
ஆம்............ஆணுக்கு இறைவன் கொடுத்த  மிகச்சிறந்த சொத்து பெண்......
வாழ்க்கைத்துணை  ........கண் குளிர்ச்சியாம்.........
மகள் நற்செய்தி.........
சுபுஹானல்லாஹ்...........
பெண்ணை இதற்கு மேல் உயர்த்தும் சித்தாந்தம்
எங்கும் எங்கும் எங்குமே................ இல்லை....

ஆண் தன் தாய்க்கு சிறந்த மகனாக நடந்து
கொள்ளும்போது அவன் சொர்க்கம் செல்கிறான்.......

தான் பெற்ற மகளுடன் சிறந்த தகப்பனாக நடந்துகொள்ளும்போது
அவன் செயல் சொர்க்கம் செல்லும் சாதனமாக உதவுகிறது.....

இன்னும்,முஸ்லிமின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும்
பள்ளிவாசல்களில் உள்ள மிம்பர் பற்றிய ஆலோசனை சொன்னது
ஒரு பெண் என தெரியுமா........???

இன்று உலகெங்கும் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள மிம்பர்
ஒரு பெண்ணின் ஆலோசனையால் நபிகளாரால் அங்கீகரிக்கபட்டது
எனும் செய்தியை பாருங்கள்.......!!!

அந்த மிம்பர் படிகளின் மீது நின்றுதான் ஜும் ஆ உரை நிகழ்த்தப்படுகிறது...

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின்போது (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு மரம்... அல்லது பேரீச்ச மரத்தின்.... (அடிப்பாகத்தின்) மீது சாய்ந்த படி (உரையாற்றிய வண்ணம்) நின்றிருந்தார்கள். அப்போது ஓர் அன்சாரிப் பெண்மணி...., 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உங்களுக்கு ஓர் உரை மேடை (மிம்பர்) செய்து தரலாமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்)" என்று பதிலளித்தார்கள். அவ்வாறே அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு (மிம்பர்) உரை மேடை ஒன்றைச் செய்து கொடுத்தார்கள். ஜும்ஆ நாள் வந்தபோது நபி(ஸல்) அவர்கள் (உரை நிகழ்த்திட) உரைமேடைக்குச் சென்றார்கள்.
புகாரி-3584.

பெண்ணை அடிமைப்படுத்தும் மார்க்கம் இஸ்லாம் என சொல்லும்
மூடர்கள் பெண்ணை ஆண் சொர்க்கம் செல்லும் சாதனமாக ஆக்கி
பெண்ணை சிறப்பித்த இஸ்லாமிய மார்க்கத்தை அகக்கண் கொண்டு
படித்து நேர்வழி பெற வல்லோனை பிரார்த்திக்கிறேன்.