Sunday, January 20, 2013

இது உங்க ஏரிகள்...உள்ளே வாங்க!

கூகுள் நிறுவன வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஏரிகளை சீரமைக்கும் பணிகளைச் செய்து வருகிறார் ஓர் இளைஞர்

                       
                                             
‘கூகுள் (GOOGLE) மாதிரி மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும்’ என்பதுதான் பெரும்பாலான இளைஞர்களின் கனவு. ஆனால், கூகுள் நிறுவன வேலையை ராஜினாமா செய்துவிட்டு சுற்றுச்சூழலைக் காக்க முழுநேரமும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு உழைக்கிறார் 25 வயதான அருண் கிருஷ்ணமூர்த்தி.

இதுவரை தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி என இந்தியா முழுக்க 12 ஏரிகளை மறுசீரமைப்பு செய்துள்ளார். இதற்காக யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், பள்ளி மாணவர்களை மட்டுமே திரட்டி, தன் சொந்த முயற்சியால் இதைச் செய்துவருகிறார் அருண். அண்மையில் இவருடைய இந்த முயற்சிகளைப் பாராட்டி, ஸ்விட்சர்லாந்தின் ரோலக்ஸ் நிறுவனம் விருது ஒன்றையும் கொடுத்து கௌரவித்துள்ளது.
                                     




எனக்கு சின்ன வயசிலேருந்தே பறவைகள்னா ரொம்பப் பிடிக்கும். அப்போ, சென்னையில நாங்க இருந்த பகுதியில கீழ்க்கட்டளைன்னு ஓர் ஏரி இருந்தது. பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதிக்கு முக்கியமான நீராதாரம் அதுதான். அந்தப்பகுதியில் ஏகப்பட்ட பறவைகளும், மீன்களும், ஆமைகளும் இருந்தன. ஆனால், இன்றைக்கு அந்த ஏரி பெரிய குப்பைக்கிடங்காக மாறிவிட்டது. அதையெல்லாம் மீட்கிற பணியில்தான் இப்போ மும்முரமாக இருக்கிறோம். அதைத்தான் இந்தியா முழுக்க செய்யத் தொடங்கியிருக்கிறோம்" என்று பேசத்தொடங்கினார் அருண்.

சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மைக்ரோ பயாலஜியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, ஐஐஎம்சியில் பட்டமேற்படிப்பையும் முடித்தார். படித்து முடிக்கவும் கூகுள் நிறுவனத்தில் நல்ல வேலையும் கிடைத்தது.

கூகுளில் வேலை பார்க்கும்போதே நண்பர்களோடு இணைந்து, ஆந்திராவில் இருக்கிற குருநாதன் செருவு என்கிற ஏரியை சக நண்பர்களின் உதவியோடு சுத்தம் செய்து முடித்திருக்கிறார். 2009ல் சென்னையில் இருக்கிற லட்சுமி புஷ்கரம் என்கிற ஏரியை சுத்தம் செய்திருக்கிறார்.

ஓர் ஏரியை சுத்தம் செய்வதென்பது அங்கிருக்கிற குப்பைகளை மட்டுமே எடுத்துப்போடுவது அல்ல. ஏரியைச் சுற்றி வேலி அமைத்தல், தூர்வாருவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது இதற்குமுன் அதைப் பற்றி சரியாக ஆய்வு செய்வது எனப் பெரிய வேலை. இதையெல்லாம் கண்காணித்து செய்வதற்கு என்னுடைய வேலையும் பணிச்சூழலும் மிகப்பெரிய தடையாக இருந்தது" என்கிற அருண், அதுவரை வெவ்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து செய்துவந்த சேவைகளை தனியாகவே செய்ய முடிவெடுத்தார்.

ஒவ்வொரு பள்ளியிலும் சுற்றுச்சூழல் குறித்த ஆர்வத்தை வளர்க்கும் பொருட்டு, நிறைய நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தார். அதோடு, ஏரிகளை சுத்தம் செய்யும் ஆர்வமுள்ள மாணவர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.

                                             

2011ல் என்விரான்மென்டலிஸ்ட் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா (EFI) என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை தன்னந்தனியாகத் தொடங்கினார். இது தற்போது இந்தியாவின் மூன்று நகரங்களில் முழுவீச்சுடன் செயல்பட்டு வருகிறது. இதை நிர்வகிப்பவர்கள், பங்குபெறுபவர்கள், உரிமையாளர்கள் எல்லாமே மாணவர்கள் மட்டும்தான். அனைவருக்குமே வயது 20க்கும் கீழ்தான். இதுவரை 900 பள்ளி மாணவர்கள் அருண் கிருஷ்ணமூர்த்தியோடு இணைந்து, இந்த ஏரிகள் மறுசீரமைப்புக்கு உதவி வருகின்றனர்.

இந்த மாணவர்களைக் கொண்டு தெருக்கூத்து மூலமாக மக்களிடையே ஏரிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பேர்டு வாட்சிங் மூலமாக பறவைகளை அறிதல், இயற்கையைப் படம் பிடிப்பது என்று இந்த அமைப்பு எப்போதுமே செம பிஸிதான். அதோடு, இரண்டு டாகுமெண்ட்ரி படங்கள் எடுத்திருக்கிறார் அருண். அது சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வென்றுள்ளது.

எங்கள் நிறுவனத்துக்கு ஸ்பான்சர்கள் கிடையாது. நாங்கள் உதவி என்று கைநீட்டிக் காசு கேட்க மாட்டோம். கொடுத்தாலும் வாங்கவும் மாட்டோம். அதனால், என் செலவுகளுக்காகவும் இந்த அமைப்பை தொடர்ந்து நடத்தவும் ஒரு தகவல்தொடர்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினேன். இந்த நிறுவனத்தின் மூலம் கிடைக்கிற வருவாயில் பாதியை சமூக சேவைக்கும் மீதியை எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பிரித்துக்கொள்வேன்" என்று சொல்கிற அருணுக்கு சர்வதேச இளைஞர் சங்கமும் விருது கொடுத்து கௌரவித்துள்ளது.

தற்போது கிடைத்திருக்கும் ரோலக்ஸ் விருதுக்கான பரிசுத் தொகையை பணமாகத் தருவதற்குப் பதிலாக, சென்னையில் இருக்கிற கீழ்க்கட்டளை ஏரியை மறுசீரமைக்கத் தேவையான தொழில்நுட்ப உதவிகளைக் கேட்டிருக்கிறார் அருண். அந்த நிறுவனமும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. விரைவில் கீழ்க்கட்டளை ஏரியை சரிசெய்யும் பணி தொடங்கிவிடும்" என்கிறார் அருண்.

நன்றி-அதிஷா

Saturday, January 19, 2013

மாடே இல்லாமல் பால் உற்பத்தி!

தன்னால் முடியாத ஒரு காரியத்தைச் செய்துதரச் சொல்லி நச்சரிக்கிறவனைப் பார்த்து, ""காளை மாடு, காளை மாடு என்கிறேன், உழக்குப்பால், உழக்குப்பால் என்று கழுத்தறுக்கிறாயே'' என்று சீறுவார்கள். ஆனால், மாடே இல்லாமல் பாலை உற்பத்தி செய்கிற வித்தை சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் கைவந்த கலையாகிவிட்டது.

                                     

2008-ஆம் ஆண்டில் சீனா மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பால் மற்றும் குழந்தை உணவான பால் பொருள்களில் வேதிப்பொருள்கள் அதிக அளவில் கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அது, ""மாபெரும் பால் ஊழல்'' என்று பிரபலமானது.

ஏராளமான குழந்தைகள் உள்பட பலர் நோய்வாய்ப்பட்டதால் மேலை நாடுகள் சீனத்திலிருந்து பால் பொருள்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தன.

சீனா ஏற்றுமதிசெய்த பால் மற்றும் பால் உணவுகளில் "மேலமைன்' என்ற தொழிலியல் வேதி கலக்கப்பட்டிருந்தது. தீப்பிடிக்காத கூரை மற்றும் தடுப்புகளைத் தயாரிக்க உதவும் "மேலமைன் பார்மால்டிஹைடு' என்ற பிளாஸ்டிக் ரோசனத்தை உற்பத்தி செய்யத் தேவையான கச்சாப்பொருள் "மேலமைன்'. அதைப் பாலுடன் கலந்துவிட்டால் கூடுதலான புரதச்சத்து இருப்பதைப்போல முதல் கட்டச் சோதனைகளில் காட்டும். ஆனால், "மேலமைன்', சிறுநீரகத்திலும் சிறுநீர் உறுப்புகளிலும் சேதமேற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டதும் அதை உணவுப் பொருள்களில் சேர்ப்பது உலகளாவிய அளவில் தடை செய்யப்பட்டுவிட்டது.

சீனாவின் பால் ஊழல், 2008 ஜூலையில் வெளிச்சத்துக்கு வந்தது. அடுத்த நவம்பருக்குள் மூன்று லட்சம் பேர் "மேலமைன்' ஏற்படுத்திய கோளாறுகளால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. சிறுநீரகத்தில் கல் உருவாவது முதலான பல்வேறு சிறுநீரகக் கோளாறுகள் காரணமாகக் குறைந்தது ஆறு குழந்தைகள் மரணமடைந்ததாகவும் தெரியவந்தது.

எப்படியாவது ஏற்றுமதியைப் பெருக்க வேண்டும் என்ற வெறியுடனிருக்கிற சீனத் தொழில்துறை தாம் பயன்படுத்துகிற வேதிப்பொருள்கள் உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடும் என்பன போன்ற "அல்ப விஷயங்களுக்காக' அலட்டிக் கொள்வதில்லை!

நம் நாட்டுப் பால் உற்பத்தியாளர்களில் சிலர் உரத்தைப் போட்டு, தீவனம் வளர்த்து, அதைப் பசு மாட்டுக்கு ஊட்டி அதன் பிறகு பாலைக் கறந்து விற்பது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்ற விஷயம் என்று எண்ணியோ என்னவோ - நேரடியாக - யூரியா, உரம், காஸ்டிக் சோடா, சமையல் எண்ணெய், சலவை சோப்புத்தூள், தண்ணீர் ஆகியவற்றுடன் கொஞ்சம் பாலையும் கலந்து செயற்கைப் பாலை நேரடியாகவே தயாரித்து விட்டார்கள். அது பார்ப்பதற்கு இயற்கையான பாலைப் போலவே நிறமும், செறிவும், கொழுப்பு உள்ளடக்கமும் கொண்டிருக்கும்.

"பால்செறிவு மானி'யும் எளிதில் ஏமாந்துவிடும். உணவு ஆய்வகங்களில் முதல் நிலைச் சோதனைகளிலும்கூட அந்தச் "செயற்கைப் பால்' தேறிவிடும். ஆனால், அதைத் தொடர்ந்து பயன்படுத்துகிறவர்களுக்குப் பார்வைப்புலனும் செவிப்புலனும் பாதிக்கப்படுவதுடன் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புண்டு.

சிறிதுகூட மனிதாபிமானமோ, பசு அபிமானமோ இல்லாமல் காசு மட்டுமே குறி என்றிருக்கிற சில பால் உற்பத்தியாளர்களுக்கு "ஆக்சிடோசின்' என்ற வேதி கை கொடுக்கிறது. இயற்கையான ஆக்சிடோசின், விலங்குகளின் பிட்யூட்டரிச் சுரப்பியின் பின்பகுதியில் உற்பத்தியாகிச் சேமித்து வைக்கப்படுகிற ஒரு ஹார்மோன். அது பெண்களின் பிரசவத்திற்குப் பிறகு கருப்பையைச் சுருங்க வைப்பதற்கும் மார்பகத்திலிருந்து பாலை வெளிப்படச் செய்வதற்கும் உதவுகிறது. அந்த ஹார்மோன் செயற்கையாகவும் தயாரிக்கப்பட்டு விற்பனையாகிறது.

பிரசவத்துக்குப் பின் கருப்பையில் சிக்கல் ஏற்பட்டால் அவசர கால சிகிச்சைக்கு மருத்துவர்கள் அதைப் பயன்படுத்துவார்கள். அதைக் கவனக் குறைவாகப் பயன்படுத்தினால் கருப்பை சேதப்பட்டுக் கிழிந்து கூடப் போகலாம்.

கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படும் செயற்கை ஆக்சிடோசின் மிகவும் மலிவாக, ஒரு குமிழ் ஐம்பது பைசா விலையில் கிடைக்கிறது. பால் கறப்பதற்குச் சற்று முன் அதைப் பால் மடியில் ஊசி மூலம் செலுத்திவிட்டால் கூடுதலாகப் பால் கிடைக்கும் என்ற தவறான எண்ணம் பால்காரர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. ஆனால் உண்மையில் அது பால் காம்பிலுள்ள சுருக்குத் தசைகளைத் தளர்த்திவிட்டுப் பால் வேகமாக வெளிப்பட மட்டுமே செய்கிறது. அத்துடன் அது பசுவின் இனப்பெருக்க உறுப்புகளைச் சேதப்படுத்தவும் கூடும். பொன் முட்டையிடும் வாத்தை அறுத்தவன் கதை மாதிரி, நிறையப் பால் கிடைப்பதைப் போலத் தோன்றினாலும் இரண்டு மூன்று ஆண்டுகளில் பசு பால் தருவது குறைந்து மலடாகவும் ஆகிவிடும். அதன் பிறகு அதைக் "கோ-சாலை'க்கோ (பசுப் பாதுகாப்பு இல்லம்), கசாப்புக் கடைக்கோ அனுப்ப வேண்டியதுதான்.

"ஆக்சிடோசின்' செலுத்திக் கிடைத்த பாலைப் பருகும் மனிதர்களுக்கும் குறிப்பாகச் சிறு குழந்தைகளுக்கும் பலவிதமான உடலியல் கோளாறுகள் வரும். கருத்தரித்திருக்கும் தாய்மார்கள் அந்தப் பாலைப் பருகினால் பிரசவத்தின்போது கடுமையான உதிரப் போக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதில் தப்பிப் பிழைத்தாலும் குழந்தைக்குப் பாலூட்டுவதில் சிக்கல் ஏற்படலாம். பார்வைத் திறனும் கேட்கும் திறனும் பாதிக்கப்படுவதாயும் கண்டறியப்பட்டிருக்கிறது.

மாடுகளுக்கு மட்டுமின்றிக் காய்கனி உற்பத்தியிலும் ஆக்சிடோசின் பயன்படுத்தப்படுகிறது. பறங்கி, பூசணி, சுரை போன்ற காய்களில் ஆக்சிடோசினை ஊசி மூலம் செலுத்தினால் அவற்றின் பருமன் ஓரிரு நாள்களிலேயே இருமடங்காக அதிகரித்து விடுகிறது.

இவ்வாறு ஹார்மோன்கள் உணவுப் பொருள்களின் மூலம் உடலில் புகும்போது ஆண்மை மற்றும் பெண்மை பாதிக்கப்படும். சிறுமிகள் உரிய காலத்துக்கு முன்பே பருவமெய்தி விடும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

பால்காரர்களை மட்டும் பழிப்பதில் அர்த்தமில்லை. எல்லாருமே பணம் சம்பாதிப்பதற்குப் பேயாக அலைகிறார்கள். ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்ந்த பின்னரும் அடுத்த ஆயிரம் கோடி ரூபாயைச் சேர்க்க ஆலாய்ப் பறந்து எந்தவிதமான ஊழலிலும் ஈடுபடத் தயங்காதவர்களிருக்கிற நம்நாட்டில் சாதாரண வியாபாரிக்கு அந்த நாட்டம் இல்லாமலா போகும்?

சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூரிலிருக்கும் ஒரு பிரபலமான நகைக் கடையில் ஒரு சவரன் தங்க நாணயத்தை வாங்கினேன். சில மாதங்கள் கழித்து நகை செய்வதற்காக அதை உருக்கியபோது அதிலிருந்து ஒரு வட்டமான செப்புத் தகடு பிரிந்து வந்தது. நகைக் கடை முதலாளியிடம் கேட்டபோது, ""நான் என்ன செய்ய முடியும்? நானே சவரன் காசை இன்னொருவரிடம் வாங்கித்தானே விற்கிறேன்'' என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

இவ்வாறாக எல்லாப் பொருள்களின் விஷயத்திலுமே உற்பத்தியாளரிடமிருந்து புறப்பட்டுப் பல கைகள் மாறி நுகர்வோரைச் சென்றடையும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் கலப்படம் கூடிக் கொண்டே போகிறது.

அரிசியில் கல், மிளகாய்ப் பொடியில் செங்கல் தூள், மிளகில் பப்பாளி விதை, தேயிலையில் உளுந்துத் தோலி, மஞ்சள் பொடியில் நிறமேற்றப்பட்ட சுண்ணாம்புத் தூள், சர்க்கரையில் ரவை என்று ஜோடி சேர்ப்பதில் "முதுநிலை முனைவர்' பட்டம் பெறும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

அரிசியைப் போலவே, பருப்பைப் போலவே, உளுந்து பயிறைப் போலவே தோற்றமளிக்கும் கல் குருணைகளை உருவாக்கும் யந்திரங்களை வடிவமைத்து, அவற்றுக்கு அரசின் அனுமதியையும் பெற்று "தொழில்' செய்கிறார்கள்!

இவ்வாறான கலப்படப் பொருள்களைச் சற்று பொறுக்கினால் பிரித்தெடுத்துவிட முடியும். ஆனால் பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் மூலமாகத் தானியங்களுக்குள் பரவிவிடும் வேதிகளை எப்படி நீக்க முடியும்?

காய்-கனிகளுக்குக் கவர்ச்சி தரும் நிறங்களை ஏற்றவும், காய்கள் பழுக்காமலும் கனிகள் அழுகாமலும் தடுக்கவும் பயன்படும் வேதிகள், மரபியல் மாற்றம் செய்ய உதவும் வேதிகள் எனப் பல வேதிகளை நாம் உட்கொள்கிறோம். அதுமட்டுமின்றி உணவுப் பாக்கெட்டுகளில் அச்சிடப் பயன்படுத்தப்படும் சாய வேதிகளும் உணவில் கலந்து விடுகின்றன.

ஊறுகாய்களின் நிறத்தை மேம்படுத்தவும், டப்பியில் அடைக்கப்பட்டு வரும் காய்கறிகளின் பசுமை மாறாமல் தடுக்கவும் செப்பு வேதிகள் கலக்கப்படுகின்றன. தர்பூசணி, பட்டாணி, குட மிளகாய், கத்தரிக்காய் போன்றவை ஊசி மூலம் ஏற்றப்படும் வேதிகளால் மெருகேற்றப்படுகின்றன. ஆப்பிள் பழங்களுக்கு மெருகேற்றக் "காரீய ஆர்சனேட்' தெளிக்கப்படுகிறது.
மஞ்சள் பொடி மற்றும் மசாலாத் தூள்களில் "காரீய குரோமேட்' கலக்கப்படுகிறது. இவ் வேதிகள் ரத்த சோகை, குறைப் பிரசவம், முடக்குவாதம் போன்ற கோளாறுகளை உண்டாக்க வல்லவை.

இந்தியாவின் விவசாயிகள், ஐரோப்பிய விவசாயிகளைவிட 750 மடங்கு அதிகமான வேதி உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்துகிறார்கள். இதனாலேயே மேலை நாடுகள் இந்தியாவிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

இந்தியத் தாய்மார்கள் தரும் தாய்ப் பாலில் குளோரின் மற்றும் பாஸ்பேட் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் தென்படுவதை ஓர் ஆய்வு கண்டுபிடித்துள்ளது. முலைப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் முலைப் பாலில் மற்ற பெண்களின் முலைப் பாலில் உள்ளதைவிட அதிக அளவில் பூச்சிக் கொல்லிகளின் எச்சங்கள் காணப்படுவதும் கண்டறியப்பட்டது.

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜெர்மானிய மருந்தாய்வு நிறுவனம் கத்தரிச் செடியின் வேர்களின் மருத்துவ குணங்களைச் சோதிக்க விரும்பி இந்தியாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்தது. வழக்கப்படியே இந்திய ஏற்றுமதியாளர் கத்தரிச் செடி வேர்களுடன் கையிலகப்பட்ட காட்டுச் செடி வேர்களையும் கலப்படம் செய்து அனுப்பினார்.

ஜெர்மானிய நிறுவனம் அவர் அனுப்பிய கலப்பட வேர்களில் புற்றுநோயைத் தடுக்கும் வேதிகள் இருப்பதைக் கண்டு, கத்தரிச் செடி வேர் வேண்டாம், கலப்பட வேர்களை மட்டும் நிறையத் திரட்டி அனுப்பும்படி கோரியது.

இவ்வாறுதான் ரயில் பாதைகளில் கேட்பாரற்று மண்டிக் கிடந்த "நித்திய கல்யாணிச் செடி'யின் மகத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது.

எனக்குத் தெரிந்தவரை கலப்படத்தால் ஏற்பட்ட ஒரே ஒரு நன்மை இதுதான்!

நன்றி:-கே.என். ராமசந்திரன்

Sunday, January 13, 2013

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

குறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக
யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்...
மரம் வளர்க்க பல ஆண்டுகளாகும் நிலையில் 90 நாட்களில் மரம் வளர்க்கும் வித்தையை கண்டறிந்த பாராட்டுக்கும்,நன்றிக்கும் உரிய சமூக சேவகர்....
பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் இவரைப்பற்றி பதிவதில் நேர்வழி வலைதளம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி? 


‘பனை வைத்தவன் பார்த்துச் சாவான்’ என்பது கிராமத்து சொலவடை. அதாவது ஒரு மரம் தரும் பலனை, வைத்தவன் அனுபவிக்க முடியாது. அவனின் அடுத்த தலைமுறைக்குத்தான் மொத்த பலனும் என்பது அர்த்தம். மரம் வளர்ந்து தளைக்க அத்தனை ஆண்டுகள் ஆகும். இனி இதுபோல ஆண்டுக்கணக்கில் காத்திருக்க அவசியம் இல்லை. நட்ட மூன்றே மாதங்களில் மரம் ரெடி என்று நிரூபித்திருக்கிறார், நெல்லை இராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அர்ஜுனன். ‘செப்பறை வளபூமி பசுமை உலகம்’ அமைப்பின் தலைவர் இவர்.

என் சின்ன வயசில அப்பா, அம்மா இறந்திட்டாங்க. உடன் பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். வறுமை வாட்டி எடுத்தது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம். பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதற்கே நான் படாதபாடு பட்டேன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே அர்ஜுனன் கண்களில் சோகம் தெரிந்தது.

இது வெப்ப பூமி. வருஷம் முழுக்க உஷ்ணம்தான். அதிலேயும் கோடைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். பாலைவனம் மாதிரி தகிக்கிற வெயில்ல, வெளியில தலை காட்ட முடியாது. அப்படி வந்து வெளியில எட்டிப் பார்த்தீங்கன்னா, மருந்துக்குக்கூட மரத்தைப் பார்க்க முடியாது. பச்சையே எங்கேயும் இல்லாததால மழையும் இல்லை. நான் பாலாமடை அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். மரம் வளர்க்குறதுல ஆர்வம் வந்ததுக்குக் காரணம், என்னோட பள்ளித் தலைமையாசிரியர் முகம்மது கனி.

செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.

மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.


தொடர்புக்கு : 97903 95796
www.chepparaivalaboomigreenworld.com
நன்றி:சா. சின்னதுரை (புதிய தலைமுறை பயிற்சிப் பத்திரிக்கையாளர்)

Friday, January 11, 2013

மாசடைந்த குளம்....மீட்டெடுக்கும் மாணவர்கள்

உலகில் கிடைக்கும் நன்னீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது.நிலத்தடி நீர்,கண் காணாத தூரத்தில் அல்ல,போர்வெல் இயந்திரம் காணமுடியாத தூரத்துக்கு சென்றுவிட்டது.ஒரு குவளை தண்ணீருக்கு தவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை’என அச்சமூட்டுகின்றன,அறிவியல் ஆய்வுகள்.




எவ்வளவு அச்சமூட்டும் செய்திகள் கேட்டாலும் 
நமக்கு,செவிடன் காதில் ஊதிய சங்கு கதைதான்....!!!???

நிலத்தடி நீருக்கான ஆதாரம் அனைத்தையும் 
பூர்த்தி செய்வது...ஆறு,ஏரி,குளம்,குட்டைகள்தான்....
நம் வாழ்வின் ஆதாரம்,அடையாளம் எல்லாமே இவைதான்....

அரசாங்கமும் சரி...தனி மனிதர்களும் சரி....
இவற்றை பற்றி கவலைப்படாமல் கழிவுகளை 
நீ கொட்டுகிறாயா???நான் கொட்டவா???என போட்டி 
போட்டிக்கொண்டுசுற்றுப்புறத்தை கெடுத்துவைத்துள்ளோம்.....
இதற்காக நாம் தேடி வரவைத்த பரிசுதான் டெங்கு உள்ளிட்ட 
‘கொசு நோய்கள்’

இந்த சூழலில்‘தும்பை விட்டு வாலைப்பிடிப்பது’....
உச்சி மரத்தில் உட்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுவது’
என்கிற மனநிலையில் இருந்து வெளியேறி,இனிமேலாவது 
மாசடைந்த நீர்நிலைகளை சுத்திகரித்து பாதுகாக்க வேண்டும் 
என்ற உயரிய நோக்கத்தில் இந்த பணிக்கான ஆரம்ப விதையை விதைத்துள்ளார்கள்,திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்.மேல்நிலைப்பள்ளி 
மாணவர்கள்.

திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில்,நகரின் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள யாதவ மேட்டுராஜக்கப்பட்டி குளத்தை,அசோலாவைப் பயன்படுத்தி,தொடர்ந்து சுத்திகரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

 இதைப்பற்றி பள்ளியின் தாளாளர் கனகசபை கூறினார்.
திண்டுக்கல் பஸ் நிலையம்,கலெக்டர் ஆபிஸ்,மாவட்ட கண்காணிப்பாளர் இல்லம்,வருமான வரித்துறை குடியிருப்பு,
ஆயிரக்கணக்கான வீடுகள்,பல முக்கிய அலுவலகங்கள்,பள்ளிகளுக்கு
மத்தியில் அமைந்துள்ளது.

நகரில் உள்ள பெரும்பாலான கிணறு மற்றும் ஆள்துளைக்கிணறுகளுக்கு
இதுதான் நீர் ஆதாரம்.ஆனால்,இக்குளத்தை பாதுகாக்காமல் கழிவுகளை கொட்டும் குப்பை கிடங்காக மாற்றிவிட்டனர்.

சாக்கடைக்கழிவுகள்,பொதுக்கழிப்பிடக்கழிவுகள்,இறைச்சிக்கழிவுகள்,
மருத்துவக்கழிவுகள் என கொட்டி வைத்துள்ளார்கள்.
இதனால்,குளத்தின் தன்மை மாறி ,மாசடைந்து விட்டது.இதன் காரணமாக அருகில் உள்ள ஆழ்துளைக்கிணறுகளின் நீர்,சுவை,நிறம்
ஆகியவையும் மாறி விட்டன.

இந்நிலையில்,எங்கள் பள்ளியில் செயல்பட்டுவரும்
‘தேசியப்பசுமைப்படை’மூலமாக இக்குளத்தை சீர் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டோம்.முதல் கட்டமாக,நீரின் உள்ள
தனமையை அறிந்துகொள்ள நீர் மாதிரிகளை எடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீர் ஆய்வுப்பிரிவில் கொடுத்தோம்.அதன் முடிவுகள் அதிர்ச்சி தருவதாக இருந்தன.

‘நீரில் ரசாயனங்கள்,கழிவுகள்,கனிமங்களின் அளவு,சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக,ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது.நகர மக்களுக்கு ஏற்படும் தோல் வியாதிகள்,நுரையீரல்,கல்லீரல்,சிறுநீரகப்பிரச்சினைகள்,கால்சியம் சத்து மாறுபாட்டால்மூட்டு,பற்கள் பாதிக்கப்படுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இதுவே காரணமாக இருக்கக்கூடும்

கால்நடைகளுக்கு பல்வேறு நோய்களும்,சத்துக்குறைபாடுகளும்
ஏற்படும்.அதன் காரணமாக பாலின் அளவும்,தரமும் குறையும்’என அலற வைத்தது அந்த ஆய்வின் முடிவுகள்.

இறுதியாக அசோலா என்ற தாவரத்தை குளத்தில் வளர்த்து
சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.மேற்குறிப்பிட்ட பள்ளி மாணவர்கள்
குளத்தில் உள்ள கழிவை அகற்றிவிட்டு அசோலா மூலம் சுத்திகரிக்கும் பணியை செய்து வருகின்றனர்.

இதைப்பற்றி நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அலுவலர் 
பிரிட்டோ ராஜ்கூறியதாவது.....கழிவுகளால் மாசுபட்ட குளத்தை தாவர முறைப்படி சீரமைப்பதுஎங்களுக்கு தெரிந்து இந்தியாவில் இதுதான் முதல்முறை.கழிவுகளில்உள்ளவேதிப்பொருட்கள்,கனிமங்களால்,குளத்தின் தரைப்பகுதி கடினத்தகடு போல் இறுகிவிட்டது.

இதனால் ஆக்ஸிஜன் அளவு குறைந்து,நீர் மாசுபடுகிறது.
கெட்டுப்போன குளத்துக்கு வெள்ளை நிறப்பறவைகள் வராது.
நீர்க்காகம் போன்ற கருப்பு நிறப்பறவைகள் மட்டுமே இருக்கும்.
கால்நடைகள் தண்ணீர் குடிக்காது.துர்நாற்றம் வீசும்.இந்த அறிகுறிகள்
குளத்தில் காணப்பட்டன.

சுத்தப்படுத்த மாணவர்கள் அசோலாவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வாங்கி பள்ளியில் பாத்திகட்டி வளர்த்தனர்.
அதே நேரத்தில் குளத்தில் குப்பைகளை அள்ளும் வேலையும் நடந்தது.

குளம் முழுக்க அசோலாவை தூவினோம்.இப்போது அது நன்றாக வளர்ந்து வருகிறது.அசோலா கடினநீரை மென்னீராக மாற்றும் இயல்புடையது.இதனால் குளம் மீண்டும் நன்னீர்குளமாக மாறும்.இன்னும் சில மாதங்களில் நிலைமை சீரடைந்த பிறகு வெள்ளைப்பறவைகள் இங்கே வர ஆரம்பிக்கும்.

அதை வைத்தே குளம் சீரடைந்ததை அறிந்து கொள்ளலாம்.
இந்த முயற்சி வெற்றிபெற்றால் மாசுபட்டு கிடக்கும் திருப்பூர்
நொய்யல் ஆறு மற்றும் ஒரத்துப்பாளையம் அணை ஆகியவற்றை கூட
சீர்படுத்திவிடமுடியும்’’என்கிற ஆலோசனையும் முன் வைத்தார்.  

வருங்கால நம் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இது போன்ற செயல்களை செய்வது மிக அவசியம்.

Wednesday, January 9, 2013

கேன்சரை ஓட ஓட விரட்டுவேன்

வின்சென்ட் நாசரேத்

நீங்கள் மும்பைக்கு அடிக்கடி செல்பவராகவோ,அல்லது மும்பை வாசியாகவோ இருந்தால் மும்பை தெருக்களிலோ,ஹோட்டல்,மால்,ரயில் நிலையம் மாதிரியான இடங்களிலோ ஒரு வேளை இந்த மனிதரை சந்தித்திருக்ககூடும்.

இவர்தான் வின்சென்ட் நாசரேத்.சாதாரண குடும்பத் தலைவர்.புற்றுநோய்க்கு எதிரான இவரது போராட்டம் மும்பை முழுக்க மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.இத்தனைக்கும் வின்செண்ட் ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கொண்டோ கூட்டத்தை சேர்த்துக்கொண்டோ இதை செய்யவில்லை.


                                                      


எல்லாரையும் போல் நானும் ஒரு நல்ல வேலை,மனைவி,குழந்தை என்றுதான் வாழ்ந்துகொண்டிருந்தேன்.ஆனால்,என் செல்ல மகன் நெயில் புற்று நோயால் பாதிக்கப்பட்டபோதுதான் எனக்கு வாழ்வின் கறுப்பு பக்கங்கள் தெரிய ஆரம்பித்தன.அதுவும்,ஐந்து வயது பிஞ்சு குழந்தையாக இருந்த அவன் இந்த நோயால் தவித்த தவிப்பை வார்த்தைகளில் சொல்ல முடியாது.

பூ மாதிரியான குழந்தையை தூக்கிகொண்டு சிகிச்சைக்காக நானும் என் மனைவியும் ஓடுவோம்.வலி தாங்க முடியாமல் துடிக்கும் என் குழந்தையின் கதறல் மருத்துவமனையையே ரெண்டாக்கிவிடும்.

இது ஒருபுறம் என்றால் அந்த மருத்துவமனையில் வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர்களையும் டீன் ஏஜ் பையன்களையும் பார்த்த போது எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போனது.

வாய் மற்றும் தாடைப்பகுதி புற்று நோயால் விகாரமாக காட்சி அளிக்க....சாவை நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள்.இதற்கிடையே என் செல்ல மகனை பறி கொடுத்தேன்.

நடைபிணமாக வீட்டுக்குள்ளேயே நானும் என் மனைவியும் பல நாட்கள் முடங்கி கிடந்தோம்.திடீரென்று “ஏன் இனிமேல் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ளக்கூடாது”என்று தோன்றியது.அப்போது முதல் புற்றுநோய்க்கு எதிரான என் போரை ஆரம்பித்து விட்டேன்.பார்த்துக்கொண்டிருந்த அரசாங்க வேலையை விட்டேன்...

இளைஞர்களிடம் புற்றுநோய் உண்டாக காரணமாக இருக்கும் சிகரெட்,பான் மசாலா,குட்கா போன்ற போதைபொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்தை அன்று முதல் ஆரம்பித்தேன்’’என்கிற வின்சென்ட்டின் தினப்படி வேலை என்ன தெரியுமா?

மும்பையில் உள்ள ஒவ்வொரு ஹோட்டல் மற்றும் மால்களுக்கு சென்று
‘நோ ஸ்மோக்கிங்’போர்டு வைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை செய்வதுதான்.அப்படி வைக்கப்படாத கடைகளில் உரிமையாளர்களின் சம்மதத்தோடு இவரே‘நோ ஸ்மோக்கிங்’போர்டை மாட்டி விடுகிறார்.

இது மட்டுமல்ல,பள்ளிக்குழந்தைகளை இவரே புற்றுநோய் மருத்துவமனைக்கு 
அழைத்துச் செல்கிறார்.சிகரெட் பிடிப்பது,புகையிலை மெல்லுவது,பான் மசாலா போடுவது போன்றவற்றால் புற்றுநோய்களுக்கு ஆளான நோயாளிகளை அவர்களுக்கு காட்டுகிறார்.புகையிலையின் ஆபத்தையும் விளக்குகிறார்.

குழந்தைகளைக்கொண்டு புகையிலைக்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டமும் நடத்துகிறார்.மும்பையின் ரயில் நிலையங்களில் போலீஸ் உதவியுடன் தயாராக இருக்கிறார்.புகையிலை போட்டு பிளாட்பாமில் எச்சில் துப்பும் ஆட்களை கையும்,களவுமாக பிடிக்கிறார்.கையில் ரெடியாக வைத்திருக்கும் தண்ணீர் வாளியை அவர்களிடம் கொடுத்து அந்த இடத்தையே சுத்தம் செய்ய சொல்கிறார்.

வின்சென்டின் செயல்பாடுகளைப் பார்த்து ஆசியாவின் மிகச்சிறந்த மனிதராக தேர்ந்தெடுத்திருக்கிறது ஒரு மிகப்பெரிய அமைப்பு.அவர் முன்பு பார்த்த அரசாங்க வேலையின் மூலம் வரும் பென்சனைக் கொண்டுதான் வின்சென்டின் குடும்பமே ஜீவிக்கிறது.

ஆனால்,வின்சென்டோ புற்றுநோயால் பாதிக்கப்படாத வருங்கால சந்ததிகள் உருவாக போராடிக்கொண்டிருக்கிறார் தன்னந்தனியாக!!!!!!!!!!!!
இதைப்படிக்கும் ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் 
பகிர்ந்துகொள்ளுங்கள்.

அவர்களில் யாராவது ஒருவராவது மனம் மாறக்கூடும்....
மாற்றங்களை ஆரம்பித்து வைப்போமா...???

Saturday, January 5, 2013

பெண்ணுக்கு எதிரான அத்தனை வன்முறைகளும் தடுக்கப்பட .....

பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள்அதிகரித்துக்
கொண்டிருக்கும் சூழ்நிலையில்,பெண் சுதந்திரம் பேசுவோரும்,
அரசாங்கமும் பெண்களின் மீதான பாலியல் வன்முறை சம்பவிக்கும்
அத்தனை வாசல்களையும்,வழிவகைகளையும் அடைக்க கடமைப்பட்டுள்ளது.



ஆண்,பெண் கலக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்,
பெண் தனியே செல்லும் போதுதான் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றது என்பதையும் கவனிக்க வேண்டும்.

பெண்கள் தனியே பயணம் செய்ய பெண்களுக்கான 
தனி பஸ்களை அரசாங்கம் அதிகமாக்க வேண்டும.

இன்னும் பள்ளிக்கு சென்ற மாணவியர் ஆசிரியர் போர்வையில் இருக்கும் வெறி நாய்களின் பசிக்கு இரையாகும் செய்திகளை நாளேடுகளில் கண்டாலும் சிறப்பான கோச்சிங் என இன்னும் ஆண் ஆசிரியர்களிடம் டூயூசனுக்கு அனுப்பும் பெற்றோர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்...

ஆண்,பெண் கலந்து விடுவதை முற்றிலும் தவிர்த்து பெண்கள் மட்டும் படிக்கும் வகையில் பள்ளிகளை மாற்றி +2 வரை பெண் ஆசிரியைகளை கொண்டே பள்ளி நடைபெற வேண்டும்.பல இடங்களில் ஆசிரியைகளுக்கு சக ஆண் ஆசிரிய வெறி நாய்களின் மூலமாக பாதுகாப்பு இல்லை என்னும் போது மாணவிகளின் படும் பாட்டை சொல்லவா வேண்டும்.

பள்ளி செல்லும் மாணவ,மாணவியர் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்கள் ஏற்பட்டாலும் பல கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் பள்ளிகளில் சேர்க்கத்தான் செய்கின்றனர்.

ஸ்கூல் வேனில்,ஆட்டோவில் செல்லும் பள்ளிச்சிறுவர்,சிறுமியருக்கு அதன் ஓட்டுநர்களால் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும்,அடிக்கடி விபத்து ஏற்படும் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதால்தொலை தூரங்களில்
உள்ள பள்ளிகளில் படித்தால்தான் முன்னேறுவார்கள்
என்ற எண்ணத்தை மாற்றி அருகே உள்ள பள்ளிகளில்
அனுப்புவதே சிறந்தது.

பெண்களை போகப்பொருளாக சித்தரிக்கும் சினிமாக்கள்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கடுமையாக சென்சார் செய்ய வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது....அதை முற்றிலும் தடை செய்ய வேண்டியதை தவிர வேறு வழியில்லை.


இல்லையென்றால் சீரழிவைத்தரும் சின்னத்திரை,பெரிய திரை நிகழ்ச்சிகளை
வீட்டில் பார்க்கும் சூழ்நிலையை தடுக்க கேபிள் இணைப்பை துண்டித்தால் குடி முழுகிப் போய் விடாது.

ஆண்,பெண் உறவு காட்சிகளை மறைவாக பரிந்துரைக்கும் 9000 மேற்பட்ட காட்சிகள் மட்டும் ஓர் ஆண்டில் தொலைக்காட்சியில் மிக முக்கியமான நேரத்தில் காணக்கூடிய வாய்ப்பு ஒரு சராசரி தொலைக்காட்சி பார்வையாளருக்கு கிடைப்பதாக ஒரு கருத்தாய்வு கூறுகின்றது....

இது பத்தாண்டுகளுக்கு முன்னே உள்ள கருத்தாய்வு...
இப்பொழுது சொல்லவா வேண்டும்.....

அதுவும் சிறுவர்கள் கையில் ரிமோட்டை கொடுத்தும்,இன்னும் சில வீடுகளில் பெற்றோரை தொந்தரவு செய்யாமல் இருக்க சிறுவர்கள் மட்டும் பார்க்க குறைவான விலையில் அரசு தொலைக்காட்சி வாங்கி வைத்து  நன்றாக
பார்த்து கெட்டுப்போக துணைபுரிகிறார்கள்...

டிவியில் பெண்ணை மட்டரகமாக சித்தரிக்கும் விளம்பரங்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும்....ஒரு ஆண் புதிதாய் வந்த ஸ்பிரே அடித்துக்கொள்வதால் பெண்கள் அவன் பின்னே திரிகிறார்களாம் என்பதை விட பெண்ணை மோசமாக சித்தரிக்கும் விசயம் ஏதும் உண்டா....??

இத்தைகய விளம்பரங்களை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் பெண் என்பவள் மட்டமானவள் என்ற எண்ணம் அவர்களின் உள்ளத்தில் நாள்தோறும் சாக்கடை தண்ணீர் ஊற்றி வளர்க்கப்படுகிறது....

அதற்கு வடிகாலாக,பெண் தனிமையில் கிடைக்கும்போது தன் மிருக எண்ணங்களை வெளிப்படுத்த துணிகின்றனர்.

பெண்கள் நடத்தும் பெண்கள் மாத இதழ்களில் பெண்களை விளம்பர பொருளாக சித்தரிக்கும் வக்கிர விளம்பரங்களை தவிர்த்து ஆரோக்கியமான முறையில் விளம்பரம் செய்யலாமே....???

புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் நடக்கும் ஆண்,பெண் கூத்துகள் அதிகரித்து வரும் நிலையில் அதிலும் 9 வது படிக்கும் டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவி சமூக வலைதளம் மூலமாக ஐ.டி.துறையிலும்,ஹெச்.ஆர் துறையிலும்  இருக்கும் இருவரிடம்  பழக்கம் ஏற்பட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை பார்க்கும் போது ஏன் இத்தகைய கொண்டாட்டங்களை தடை செய்யக்கூடாது...????????????

டெல்லி பெண் வழக்கில்,புதுவை பள்ளி மாணவி வழக்கில் தாமதம் செய்த போலீசார்,பணி நீக்கம் செய்வதே இது போன்ற அஜாக்கிரதையாளர்களின்
செயல்கள் திருந்துவதற்கு சரியான வழியாகும்.

ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறி நிம்மதியாக வீடு வந்து சேர 
பெண் சுதந்திரம் பேணி பாதுக்காக்கப்பட பெண்ணுக்கு எதிரான அத்தனை 
வன்முறைகளும் தடுக்கப்பட .....

பெண்களுக்கென்று தனி பஸ்கள் அதிகப்படுத்துவதும்,
பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகள்,கல்லூரிகள் அதிகப்படுத்தி 
பெண் ஆசிரியர்கள் மட்டும் கற்றுக்கொடுக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி
பள்ளி,கல்லூரிக்கு வெகு தூரம் செல்லும் பயணங்களை தவிர்த்தும்,
பெண்ணை மட்டரகமாக சித்தரிக்கும் விளம்பரங்களை,சினிமாக்களை
தடை செய்தும்,புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் நடக்கும் கருமாந்திரங்களை,போதை பொருள்களை முற்றிலும் தடை செய்து
இது போன்ற சம்பவங்களை வேண்டும் என்றே தாமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுப்பதும்,இதையும் மீறி பெண்கள் மீது வன்புணர்வு செய்வோருக்கு மரணதண்டனை காலம் தாமதிக்காமல் உடனே கொடுப்பதும் மிக மிக அவசியமாகும்....

சே....பாவம்....அது எப்படி மரண தண்டனை கொடுக்கலாம்,30 வருட சிறை தண்டனை கொடுப்போம்  என வாதிடும் வறட்டு மூளை கொண்டவர்கள்
பொதுமக்களின் வரிகாசில் சோறு போடாமல்  தன் சொந்தக்காசில் 
சோறு போடுங்கள்.

சினிமாவில் என்ன தப்பு இருக்கிறது என கேட்கும் மூளை இல்லாதவர்களுக்கு 
இம்மாதிரியான வன்முறை சம்பவங்களில் எல்லாம் நடக்க 100 காரணங்கள் இருந்தால் அதில் 90காரணங்கள் சினிமா தான் வழிவகுக்கிறது.அவை அத்தனையும் நீங்கள் வெட்கமில்லாமல் வழிமொழிகிறீர்கள் என்று தான் அர்த்தம்....

Wednesday, January 2, 2013

சோறு போடும் சட்டம் வேண்டாம்... கடுமையான சட்டம் வேண்டும்....

ஒவ்வொரு நாளும் நாட்டில் நடக்கும் சம்பவங்களை,விபரீதங்களை
,பிரச்சினைகளைப் பார்க்கும் போது பாதிக்கப்பட்டவர் அதற்கு தீர்வு கிடைக்காமல் சிரமப்படுவதும்,அநீதி இழைத்தவர் ஜாமீனிலோ
அல்லது தண்டனை கொடுக்காமல் சிறையில் வைத்து விசாரிக்கிறேன்
என தாமதப்படுத்துவதும் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது உள்ள
நம்பிக்கையை முற்றிலும் இழக்க வைக்கிறது.

கர்நாடகாவில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தவனை
மக்களே கொலை செய்து தண்டனை கொடுப்பது இப்போது பரவலாகி வருகிறது.

அஸ்ஸாமில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஒன்று
கூடி தேயிலை தோட்ட உரிமையாளரையும்,அவரது மனைவியையும்
தீ வைத்துக்கொளுத்துவதை எல்லாம் பார்க்கும்போது  மக்கள் அரசை நம்பவில்லை என்பதே தெரிகிறது.

அது அல்லாமல் வினோதினி என்ற  அப்பாவி பெண்னின் முகத்தில் ஆசிட் வீசிய சுரேஷுக்கு இன்னும் கடும்தண்டனை கொடுக்காமல் இருப்பது டெல்லி பெண் வழக்கில் தவறு செய்தவர்களுக்கு30 வருடம் சிறை தண்டனையை அதுவும்  நம் வரிக்காசில் உட்கார வைத்து சோறு போடும் சட்டம் போடலாம் என ஏசி ரூமில் என சிலர் பேசிக்கொள்வதும் அரசின் மீது  இன்னும் நம்பிக்கையினைமையை அதிகப்படுத்ததான் செய்கிறது....

சென்னை பொறியாளர் ஜெயகாந்தனின் கழுத்தில் மாஞ்சா கயிறு சிக்கி துடிதுடித்து இறந்ததை நேரில் கண்ட அவர் மனைவி சம்பந்தபட்டவர்களுக்கு கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளாராம்....

ஆம்....சம்பந்தப்பட்டவர்களை தவிர வேறு யாராலும்
அவ்வாறு பேச முடியாது...டெல்லியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையையும்,வினோதினியின் தந்தையையும்,பொறியாளரின் மனைவியையும் கேட்டுப்பாருங்கள்...உயிரின் மதிப்பு எவ்வளவு என்று???

ஏசி ரூமிலும்,காரிலும் செல்லும் அரசியல்வாதிகளுக்கும்,அமைச்சர்களும் எங்கே தெரியும் இவர்களின் வேதனை....????

நாங்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது குற்றவாளிகளை
உட்காரவைத்து சோறு போடும் சட்டங்களை அல்ல...
இதே தவறு இனியும் நடக்காமல் இருக்க சட்டங்கள்
கடுமையாகவில்லை என்றால் மக்கள் அரசாங்கத்தை நம்பமாட்டார்கள்....
தன் கையிலே சட்டத்தை எடுத்துக்கொள்வார்கள்...