Follow by Email

Saturday, May 11, 2013

அழகிய உபதேசம்

அழகானதையே பேசுங்கள்....

நன்மையான விசயத்தில் உதவிக்கொள்ளுங்கள்.........

அண்டை வீட்டாரிடம் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள்.....

மக்களிடையே நல்லிணக்கத்தையே ஏற்படுத்துங்கள்........

சமாதானம் செய்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்...

பெற்றோருக்கு பணி விடை செய்யுங்கள்
                                

அநாதைகளை ஆதரியுங்கள்.....

கூச்சலிடாதீர்கள்.

உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள்...

ஏழைகளுக்கு உணவளியுங்கள்....
             
   

                                       

பிறர் தரும் தொல்லைகளை பொறுத்துக்கொள்ளுங்கள்....

உள்ளதை கொண்டு திருப்தி அடையுங்கள்.......

தனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்புதல்.....

தம்மை விட பிறரைக்கவனியுங்கள்............

தீய பேச்சை தவிர்த்துக்கொள்ளுங்கள்........

நன்மையான விசயங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள்....

பட்டப்பெயர் சூட்டாதீர்கள்..........

துருவி துருவி விசாரிக்காதீர்கள்.........

சந்தேகப்படாதீர்கள்.....

வாக்குறுதி தவறாதீர்கள்............

பயனற்ற பேச்சுகளை பேசாதீர்கள்........

உண்ணுங்கள்,பருகுங்கள்,வீண் விரயம் செய்யாதீர்கள்...


கஞ்சத்தனம் செய்யாதீர்கள்........

பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக நற்காரியம் செய்யாதீர்கள்.........


இதுவே அல்குர் ஆன் சொல்லும் அழகிய வாழ்க்கை முறை......

அல்குர் ஆனை தமிழில் படிக்க,இலவசமாக பெற்றுக்கொள்ள 

எம்மை தொடர்பு கொள்ளவும்.......

Wednesday, May 8, 2013

தேர்வில் தோல்வியா??? அல்லது மதிப்பெண்கள் குறைவா???

பள்ளிகளில் +2  தேர்வு முடிவு நாளை வர உள்ள சூழ்நிலையில் மாநில அளவில் மதிப்பெண் பெறும் மாணவர்களை இன்னும் சில நாட்களுக்கு
அனைத்து ஊடகங்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்....

ஆனால்.......அதற்கு மறுநாளில் தோல்வியடைந்த மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் என நாளிதழில் வரும்போது மிக மிக
வேதனையாக இருக்கும்........



தொலை தொடர்பு மற்றும் பத்திரிக்கை நிறுவனங்கள் 10,+2 மாணவர்களுக்கு
வாழ்ந்து காட்டுவோம்,ஜெயித்துக்காட்டுவோம் என பயிற்சி அரங்குகள் அடிக்கடி நடத்தும்போது குறைவான மதிப்பெண் எடுக்கும் நிலையில் உள்ள  மாணவர்களுக்கும்  ஊக்கப்படுத்தும் விதமாக பேசலாம்...

கணிதப்பாடத்தில் தோல்வி.....
10 ம் வகுப்பு மாணவி தற்கொலை....

தலைமை ஆசிரியர் கண்டித்ததால் 10 ம் வகுப்பு மாணவர்
தற்கொலை முயற்சி...

10ம் வகுப்பு தேர்வில் தோல்வி....
மாணவி வீட்டை விட்டு ஓட்டம்.....

+2 தேர்வில் தோல்வி......
விரக்தியில் மாணவன் தற்கொலை....

பி.எட் படித்த மாணவர் தேர்வில் தோல்வியால் தற்கொலை....

10 ம் வகுப்பு  மாணவர் தேர்வில் தோல்வி.......
விஷமருந்தி மாணவன் தற்கொலை........

தேர்வில் தோல்வி காரணமாக தற்கொலைக்கு
முயன்ற 3 மருத்துவ மாணவர்கள் .......

10ம் வகுப்பு தோல்வி சென்னை மாணவிகள் 2 பேர் தற்கொலை....

தற்கொலை செய்வதில் 10 வகுப்பு மாணவரில் இருந்து மருத்துவம்,பி.எட் படிக்கும் மாணவர்கள் வரை விதி விலக்கே இல்லை........

படிப்பு மட்டுமே உலகம் என நினைத்து கொண்டு படிக்கும்
மாணவர்களை அதிக அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள்  ..........
மாணவர்களை மார்க் எடுக்கும் மிஷின்களாக தயவு செய்து கருதாதீர்கள்.......

அதில் மதிப்பெண்கள் மட்டும் குறைவாக எடுக்கும் நிலையை அடைந்தால அதை தயவு செய்து தோல்வி என கூறாதீர்கள்.......

பள்ளிகளும்,கல்லூரிகளிலும் அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அறிவாளி.அதிக மதிப்பெண்கள் மட்டுமே  வாழ்வில் முன்னேற முடியும் என மதிப்பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மனப்பாடம் செய்யும் மாணவ சமுதாயத்தையே உருவாக்குகின்றனர்.....

இது மட்டுமல்லாமல்,தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுபவர்
மட்டுமே வாழ்வில் முன்னேற்றம் அடைவார் எனவும்......

மதிப்பெண் குறைவாக எடுத்தவரை அறிவுக்குறைவற்றவர்களாகவும்,
வாழத்தகுதியற்றவர்களாகவும் ஒரு போலியான மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய சமூகத்தில் மாணவர்களிடம் அவர்கள் பெற்றோரும்,ஆசிரியர்களும் மதிப்பெண்ணை மட்டும் எதிர்பார்த்து அவர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் போவதாலே இத்தகைய செயல்கள் நடைபெறுகிறது........

குறிப்பாக ஆசிரியர்கள் நன்றாக மனனம் செய்யும் மாணவர்களிடம் மட்டும் அக்கறையாக பேசுவதும்,மனன குறைபாடு உள்ளவர்களிடம் நீ எதற்கும் லாயக்கற்றவன் என்ற ரீதியில்  பேசுவது மிக தவறு என உணர வேண்டும்.....

இன்னும் பெற்றோர்கள் கல்வி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே....அதுவே வாழ்க்கை அல்ல என புரிந்து கொள்ள வேண்டும்....


உங்கள் பிள்ளைகள் தேர்வில் குறைவான மதிப்பெண்களோடு தேர்வு பெற்றிருந்தாலும் அதை மற்றவர்கள் முன் மட்டம் தட்டி பேசாதீர்.......

தனிமையிலும் தயவு செய்து எரிந்து விழாதீர்கள்.....

தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுப்பவர்கள் மறு தேர்வின் மூலம் அதிக மதிப்பெண் எடுக்கலாம் என உற்சாகமூட்டி சுற்று வட்டாரத்தில் தேர்வில் தோல்வியடைந்த எத்தனை பேர் வாழ்வில் வெற்றிக்கனி பறித்தார்கள் என உதாரணம் கூறலாம்........

எழுத்தாளர் சுஜாதா.....ஒரு கட்டுரையில் கூறியிருந்தார்........

பல வருடங்களுக்கு பிறகு தன்னுடன் படித்த மாணவர்களை பார்க்கும்போது..............

கிளாஸ் ஃபர்ஸ்டாக வந்த மாணவர்  உள்ளூரில் கவர்மெண்ட் ஆஃபிஸில் குமாஸ்தாவாக வேலை பார்த்தாராம்

சுஜாதா சுமாராக படிக்கும் மாணவராம்.....அவர் பெல்லில் மிக உயரிய பணியில் இருந்தாராம்.....

ஆனால்,அடிக்கடி தோல்வி அடைந்து மிக மோசமாக படிக்கும் மாணவன் ஒருவன் ஐ.நா சபையில் வேலை பார்க்கிறாராம்....

இன்னும் ஏன்....உலக பணக்காரர் பில்கேட்ஸ்
கல்லூரிக்கல்வியை நிறைவு செய்யவில்லை ...........
ஆனால்,அவர் வாழ்வில் அடைந்த இலக்கோ மிக பெரியது.........

சோர்வடையாமல் மீண்டும் முயற்சியுங்கள்....
சோர்வடையாதவன் கண்டிப்பாக வெற்றியடைவான்.... 

Thursday, April 11, 2013

வீடு கட்ட செங்கல் வேண்டாம் பிளாஸ்டிக் பாட்டில் போதும்!

சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிற பிளாஸ்டிக் கழிவுகளை, கட்டிடங்கள் கட்டப் பயன்படுத்த முடியும் என நிரூபித்துள்ளது, ‘சமர்ப்பண்’ என்கிற தொண்டு அமைப்பு. தில்லியைச் சேர்ந்த இந்தத் தொண்டு நிறுவனம், செங்கலுக்கு மாற்றாக பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு பசுமை வீடுகளை உருவாக்கி வருகின்றது.
                           
பிளாஸ்டிக் பாட்டில்களில் உருவாக்கப்படும் வீடுகள் மிகவும் பாதுகாப்பானவை. அதனைக் கொண்டு கட்டப்படும் கட்டிடங்கள் பல்லாண்டுகள்வரை எந்தச் சேதாரமில்லாமல் உறுதியாக இருக்கும் தன்மை கொண்டவை. பொதுவிழாக்கள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் போன்ற இடங்களிலிருந்து காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கிறோம்.
                                                 

   
சேகரித்த பாட்டில்களை அளவு வாரியாகப் பிரித்து, சாலையோரங்களில் கிடக்கும் வீணான மண்ணைக் கொண்டு நிரப்பி, பாட்டிலை உறுதியாக்குகிறோம். அதன் பின்னர் அதனை கட்டிடப் பணிக்கு பயன்படுத்துகிறோம். பாட்டிலில் மண்ணை நிரப்ப பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் எனப் பலதரப்பினர் எங்கள் அமைப்புக்கு உதவி செய்துவருகின்றனர்.
                                                 
பாட்டிலின் தட்டையான அடிப்பகுதியை வெளிப்புறம் மற்றும் தரைத்தளத்தில் இருப்பது போன்று பயன்படுத்தினால், சமநிலையில் இருக்கும். இந்த முறையில் பாட்டில்களை அடுக்கி, சுவரை சிமெண்ட் மூலம் எளிதாகப் பூச முடியும். இதனால், செங்கல் வாங்கும் செலவை முற்றிலுமாகக் குறைக்கலாம்.
                                               
ஒரு சதுர அடிக்கு 16 ஒரு லிட்டர் பாட்டில்கள் தேவைப்படும். மேலும் 15 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட ஒரு பசுமை வீடு கட்ட, சுமார் 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

இதை பற்றி மேலும் அறிய....அவசியம் இந்த வீடியோவை பார்க்கவும்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=QaFO95Ord_I


http://www.samarpanfoundation.org/website/index.php?option=com_content&view=article&id=95:house-construction-with-plastic-bottles&catid=52:delhi-projects&Itemid=66

                                            
செங்கல் பயன்படுத்துவதற்கு மாற்றாக பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் பள்ளிகள், மருத்துவமனை சுற்றுச்சுவர், நடைமேடைகள், பேருந்து நிறுத்தம் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் கட்டலாம்" என்று கூறுகிறார், ‘சமர்ப்பண்’ சென்னை திட்ட ஒருங்கிணைப்பாளர் ரோமினி.
                                            

 பிளாஸ்டிக் பாட்டில் மூலம் கட்டப்பட்டும் வீடுகள் மழை மற்றும் குளிர்காலத்தில் கதகதப்பாகவும், கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும்" என்கிறார் ரோமினி. இதுபோன்ற பசுமை வீட்டை, ‘சமர்ப்பண்’ தொண்டு அமைப்பு, தில்லியில் பள்ளிக் கட்டிடமாக கட்டிக்கொடுத்துள்ளனர்.


தற்போது செங்குன்றம் அருகே, பசுமை வீடு திட்டத்தினைச் செயல்படுத்த இந்த அமைப்பு சார்பாக பாட்டில்களை சேகரித்து வருகின்றனர். முதற்கட்டமாக அங்கு ஜெனரேட்டர் மேடை ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்டு, தளம் அமைப்பதற்கான ஆராய்ச்சிகளையும் ‘சமர்ப்பண்’ அமைப்பு தற்போது செய்து வருகின்றது.

என்.ஹரிபிரசாத்

Thursday, March 28, 2013

பால்கனியில் காய்கறிகள்!!!

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த லக்ஷ்மி தன் வீட்டு மாடியிலுள்ள பால்கனியை, பச்சைப்பசேல் என மினி தோட்டமாக மாற்றியுள்ளார். இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வீட்டிற்குத் தேவையான காய்கறிகள், பழங்களை இத்தோட்டத்திலிருந்தே பறித்தெடுத்துக் கொள்கிறார். மனமும் கொஞ்சம் இடமும் இருந்தால், எல்லோருமே இப்படி தோட்டம் போடலாம்" என்கிறார் உற்சாகமாக...

என் பாட்டிக்கு செடி, கொடிகள் என்றால் அலாதிப் பிரியம். குழந்தைப் பருவத்தில் அவருடன் கேரளாவில் வளர்ந்தேன். அவருடனே இருந்ததால், குழந்தையாக இருந்தபோதே தாவரங்களின் மேல் எனக்கும் அன்பு வந்துவிட்டது. பாட்டியும் நானும் பல வகையான செடிகளை வளர்ப்போம். தினமும் காலையில் எழுந்தவுடன் செடிகளிடம்தான் ஓடுவேன். அதற்கு தண்ணீர் ஊற்றுவது, அன்றைக்கு புதிதாகப் பூத்திருக்கும் பூக்களை, பச்சைப் பசேலென்று பிஞ்சு விட்டிருக்கும் காய்களைப் பார்ப்பது, எத்தனை பூக்கள், காய்கள் புதுசாக வந்திருக்கின்றன என்று எண்ணுவது இவையெல்லாம் வார்த்தையில் சொல்ல முடியாத மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களாக இருந்தன.

திருமணத்திற்குப் பிறகு சென்னைக்கு வந்துவிட்டேன். கேரளாவில் எங்கும் பசுமையாக இருக்கும். சென்னையில் அப்படியில்லை. ஆனாலும் செடிகளின் மேல் இருந்த ஆர்வம் மட்டும் குறையவில்லை. செடிகள் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. எதையோ பறிகொடுத்ததைப் போன்ற உணர்வு. அப்போதுதான் இந்த ஐடியா வந்தது. என் விருப்பத்தைப் புரிந்து கொண்ட கணவரின் உதவியுடன், என் வீட்டு பால்கனியில் சிறிய தோட்டம் அமைத்துக் கொண்டேன்.

பால்கனியில் சிறு சிறு தார்ப்பாய் பைகளிலும் மண் தொட்டிகளிலும் செம்மண், ஆற்று மண், தேங்காய் நார், ஆட்டுப்புழுக்கை, எரு, மக்கிய இலை மற்றும் தழைகள் போன்றவற்றை நிரப்பி, அதில் செடிகளை நட வேண்டும். செடியின் வேர்ப் பகுதியில் எப்போதும் நீரைத் தேக்கி வைக்க வசதியாக தேங்காய் நார்களை உபயோகிக்க வேண்டும்.

நாட்டுக் காய்கறிகளின் விதைகள், கீரை விதைகளை தொட்டியிலோ அல்லது பைகளிலோ விதைத்து விட்டால், 15 நாட்களில் முளைத்து விடும். அடுத்த 30வது நாளில் செடிகள் நன்கு வளர்ந்து, நமக்குத் தேவையான காய்கறிகளும் கீரையும் வந்துவிடும். ஒருநாள் விட்டு ஒருநாள் கீரை, காய்களைப் பறித்துக் கொள்ளலாம். 

என் வீட்டுத் தோட்டத்தில் முள்ளங்கி, லெமன் கிராஸ், பப்பாளி, தக்காளி, பஜ்ஜி மிளகாய், கத்திரிக்காய், காலிஃபிளவர், முருங்கை, கொத்தமல்லி, வல்லாரக்கீரை, அரைக்கீரை, காராமணி, பச்சை மிளகாய் போன்ற காய்கறிச் செடிகளை ஜாடிகள் மற்றும் பைகளிலும் குண்டு மல்லி, வெற்றிலை, பீர்க்கங்காய் மற்றும் புடலங்காய் போன்ற கொடி வகைகளை பந்தலமைத்தும் வளர்த்து வருகிறேன். இங்கு விளையும் காய்கறிகள் அனைத்துமே என் வீட்டிற்குப் போதுமானதாக உள்ளன. 

மேலும் அனைத்து செடிகளையும் இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த செலவில் நோயின்றி செழிப்பாக வளர்த்து வருகிறேன். குறிப்பாக, பூச்சித் தாக்குதலை தடுப்பதற்காக வசம்புப் பொடியை நீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் மாதம் இருமுறை தெளித்து விடுவேன். அவ்வப்போது பஞ்சகவ்யா, ஆட்டுப் புழுக்கை போன்றவற்றையும் உரமாகப் பயன்படுத்துகிறேன். 

இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால், சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் வராது. தவிர, வீட்டு பால்கனியில் இருப்பதால் நமக்கு சுகாதாரமான சூழலும் சுத்தமான காற்றும் கிடைக்கும். மாலையில் சிறிது நேரம் செடிகளுடன் இருக்கும்போது, அனுபவப்பூர்வமாக இதை உணரலாம்" என்கிறார், செடிகளை வாஞ்சையாக வருடியபடி.பலருக்கு தாவரங்களின் மேல் ஈடுபாடு இருக்கும். ஆனால், நகரச் சூழலில் எப்படி தோட்டம் போடுவது, பராமரிப்பது என்று வழிமுறை தெரியாமல் இருப்பார்கள். அவர்களுக்காக தற்போது லக்ஷ்மி தன் கணவருடன் சேர்ந்து, "GARDEN DEVELOPERS' என்ற நிறுவனத்தை நிறுவி வழிகாட்டுகிறார். தொடர்புக்கு: 94444 12111, 98401 20301.


-எல்லுச்சாமி கார்த்திக் 

Sunday, February 24, 2013

முட்டாள் தனத்தின் முன் மாதிரி .....

சாதனைகள் என்ற பெயரில் தன்னை துன்புறுத்தி கொண்டு 
மற்றவர்களையும் துன்புறுத்துபவர்களை ஊடகங்கள் 
பெருமையாக பிரபலப்படுத்துகின்றன.......
உண்மையில் அவை எல்லாம் வேதனை,கொடூரம் ...... 
சாதனை என்பது தனக்கும் தன் சுற்றத்திற்கும் பின் வரும் 
சமுதாயத்திற்கும் பயன்படுவதே ஆகும் ....

ஓவியர் ஹுசைனி தன் இரத்தம் மற்றும் மற்ற வீரர்களின் இரத்தத்தை 
வீண்விரயம் செய்ததை சாதனை என தினத்தந்தி பாராட்டியுள்ளது மிகப்பெரும் 
அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. 

அதிர்ச்சியான அச்செய்தி ...............
ரத்தத்தை உறைய வைத்து உருவாக்கப்பட்ட 
ஜெயலலிதா சிலை வில்வித்தை வீரர் ஹுசைனி சாதனை




11 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா சிலையை உருவாக்கி வில்வித்தை வீரரும், சிற்பியுமான ஹுசைனி சாதனை படைத்துள்ளார்.இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்கு ஹுசைனி நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

65–வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானத்தை வலியுறுத்தியும், வில்வித்தை கழகத்துக்கு முதல்–அமைச்சர் அளித்து வரும் உதவிக்கு நன்றி கூறும் வகையிலும், முதல்–அமைச்சரின் 65–வது பிறந்த நாளை முன்னிட்டும் ரத்தத்தை உறைய வைத்து அதில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை உருவாக்கியுள்ளேன்.இதற்காக 8 ஆண்டுகள் எனது உடலில் இருந்து 24 பாட்டில் ரத்தம் எடுத்து அதைப் பாதுகாத்து வந்தேன். அத்துடன் வில்வித்தை வீரர்கள், வீராங்கனைகள் 32 பேரும் ரத்தம் கொடுத்து உதவியுள்ளனர். ஆண்டுக்கு 100 மில்லி லிட்டர் வீதம், முதல்–அமைச்சரின் 65–வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் எனது 6½ லிட்டர் ரத்தத்தையும், வில்வித்தை மாணவ, மாணவியரின் 4½ லிட்டர் ரத்தத்தையும் சேர்த்து மொத்தம் 11 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து இந்த சிலையை உருவாக்கியுள்ளேன்.உறைய வைத்த ரத்தத்தில் உருவச் சிலையை படைத்திருப்பது உலகில் இதுவே முதல்முறையாகும்.

தமிழ்நாடு முழுவதும் இந்தச் சிலையை 15 நிமிடம் மட்டுமே வெளியே வைத்திருக்க முடியும். அதற்கு மேல் வைத்திருந்தால் சிலை உருகிவிடும். இந்த சிலையை, பிரத்யேக ஏ.சி. வாகனத்தில் டெல்லி எடுத்துச் சென்று அங்குள்ள லலித்கலா அகாடமியில் காட்சிக்காக வைக்க இருக்கிறேன்.அதன்பின்னர் முதல்–அமைச்சரின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் விதத்திலும், ரத்ததானத்தை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்படும்.

இதற்கு முன்பு 1994–ம் ஆண்டு எனது கைகளில் 101 கார்களை ஏற்றியும், 5 ஆயிரம் ஓடுகளையும், ஆயிரம் செங்கல்களையும் உடைத்தேன். அப்போது எனது கைகளில் இருந்து கொட்டிய ரத்தத்தைக் கொண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஓவியம் வரைந்தேன். 2004–ம் ஆண்டு முதல்–அமைச்சரின் 57–வது பிறந்த நாளை முன்னிட்டு, எனது ரத்தத்தால் முதல்–அமைச்சரின் 57 ஓவியங்களை வரைந்தேன்.சென்னையில் தேசிய வில்வித்தை போட்டி நடத்துவதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் எனக்கு ரூ.50 லட்சம் வழங்கினார். அப்போது முதல்–அமைச்சர் கூறுகையில், ‘இனிமேல் எனது ரத்தத்தால் அவரது ஓவியங்களையோ, சிலைகளையோ வடிக்கக்கூடாது’’ என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டார். 8 ஆண்டுகளாக உருவாக்கியுள்ளதால் இந்த சிலை திறப்புக்குப் பிறகு முதல்–அமைச்சரின் உருவத்தை ரத்தத்தால் இனிமேல் உருவாக்கமாட்டேன் என்று நானும் முதல்–அமைச்சரிடம் உறுதி அளித்தேன்.

தமிழக மக்கள் மீது மிகுந்த அன்பு வைத்துள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதாவைக் குறிக்கும் வகையில் இந்த சிலைக்கு ‘தமிழ்த்தாய்’ என்று பெயர் சூட்டியுள்ளேன்.

ஆபத்தான நேரத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பலருக்கு 
இரத்தம் தேவைக்காக  உறவினர்கள் அல்லாடிக்கொண்டிருக்கும் போது  
இது போன்ற பைசா பிரயோஜனமில்லாத செயல்கள் சமூக அக்கறையின்மையையும்,பிரபலமாவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யும் மோசமான மனநிலையை   வெளிச்சம் போட்டு காட்டுகிறது......

இதே போன்று சென்ற வருடம் போலீஸ் கான்ஸ்டபில் ஒருவர்
சாதனை என்ற பெயரில் தன் உயிரை மாய்த்துக்கொண்டதும்
மனைவியும்,பிள்ளைகளும் கதறி அழுதது இன்னும்
மறக்கமுடியாத சம்பவம் ....

இது போன்று தன்னை துன்புறுத்தும் சாகசங்களை
அரசாங்கம் தடை செய்வதே சாலச் சிறந்ததாகும்.....  

ஊட்டி: ஊட்டியில் நடந்த குடியரசு தின விழாவில், பல ஆயிரம் மக்கள் முன்னிலையில் வீர சாகசம் புரிந்த போலீஸ் கான்ஸ்டபிள், திடீரென நிலை தடுமாறி தலைகுப்புற விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவத்தை நேரில் கண்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட விளையாட்டு அரங்கில், குடியரசு தின நிகழ்ச்சிகள் நேற்று காலை நடந்தன. போலீசார் சார்பில் பைக் சாகச நிகழ்ச்சி நடந்தது. ஆயுதப்படை கான்ஸ்டபிள் பாண்டியன், பைக்கில் பறந்து சாகசங்களை செய்து, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். பின்னர், ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியை அரங்கேற்றினார். கராத்தேயில், "பிளாக் பெல்ட்' பெற்ற இவர், ஓடுகளை காலால் உதைத்து தூள் தூளாக்கினார். அதன் பின், தரையில் மாணவர்களை வரிசையாக படுக்கச் செய்து, அவர்களைத் தாண்டி சாகசம் புரிந்தார். முதலில் ஐந்து மாணவர்களை படுக்க வைத்து தாண்டி பல்டி அடித்தார். பின், மாணவர்கள் எண்ணிக்கையை 11 ஆக உயர்த்தி பல்டி அடித்தார். பிறகு, 13 மாணவர்களை படுக்க வைத்து அவர்களைத் தாண்டி பல்டி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.


மாணவர்களைத் தாண்டி சாகசத்தை முடிக்கும் தறுவாயில், பாண்டியன் நிலை தடுமாறி, "மேட்' மீது தலை குத்திய நிலையில் விழுந்தார்; அவரால் எழ முடியவில்லை. ஏதோ நடந்துவிட்டதென உஷாரடைந்து பலரும் ஓடி வந்து அவரை மீட்டனர். எழுந்து நிற்க முடியாத அளவுக்கு, நிலை குலைந்து, கண்கள் மேல் நோக்கிய நிலையில் மயக்கமடைந்திருந்தார். அருகிலிருந்தவர்கள், அவரை உடனடியாக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


மனைவி கதறல்: தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த பாண்டியனுக்கு சத்யா என்ற மனைவியும், ஏழு வயதான ஸ்ரீவர்ஷிணி என்ற மகளும், 11 மாத சுஜித் பாண்டியன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். ஆயுதப்படை பிரிவில் டிரைவராக பணியாற்றி வந்தார். பாண்டியனின் உடலுக்கு, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், எஸ்.பி., நிஜாமுதீன் ஆகியோர், அரசு மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தினர். சக போலீசார், பாண்டியன் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். அப்போது, அருகிலிருந்த பாண்டியனின் மனைவி கதறியதைப் பார்த்து பலரும் கண்ணீர் விட்டனர்.


பார்வையாளர்கள் அதிர்ச்சி: விபத்தின் போது மைதானத்தில் இருந்த ஊட்டியைச் சேர்ந்த பிரதாப் கூறுகையில், "பாண்டியன், ஆரம்பம் முதலே மிகவும் துல்லியமாக சாகசம் புரிந்தார். மாணவர்களை வரிசையாக தரையில் படுக்க வைத்து சாகசம் செய்த போது, தான் தாண்ட வேண்டிய இடைவெளியை சரியான முறையில் கடக்க முடியாமலோ அல்லது தவறான கணிப்பின் காரணமாகவோ, தரை விரிப்பின் முன்புறமாக விழுந்து பல்டி அடிக்க முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது தலை, உயரமான தரை விரிப்பின் மீது நேரடியாக மோதி சம்பவம் நேரிட்டுவிட்டது. ஆரம்பத்தில், அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என்றே கருதினோம். அவர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததும் அதிர்ச்சியில் உறைந்தோம். பல ஆயிரம் பேரின் முன்னிலையில், கைதட்டலுக்கு இடையே அவரது மரணம் நிகழ்ந்துவிட்டது, வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்' என்றார்.

Thursday, February 21, 2013

நீர்நிலைகளைக் காப்போம்.... கண்ணீர் எதற்கு???? தண்ணீர் இருக்கு!!!!

இந்த வருடம் பருவ மழை பொய்த்துப்போனதால் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்கிறது.அதிலும் மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி விவசாயிகளின் கதி இன்னும் மோசம்.

மானவாரி நிலங்கள் அதிகமுள்ள பகுதிகளில் மழை பொய்க்கும் போதெல்லாம் பயிர்கள் கருகுவதும், கருகிய பயிர்களைப் பார்த்து விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடிப்பதும் வழக்கம். ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சவேரியார்பட்டினம் என்ற கிராமத்து விவசாயிகள் ‘பண்ணைக் குட்டைகள்’ (FARM POND) என்ற புதிய மாற்றுவழியால் மழை பொய்த்தாலும் ஆண்டு தோறும் லாபகரமாக விவசாயம் செய்துவருகின்றனர்.

பண்ணைக்குட்டைகள் இரண்டாம்தர நீர்த்தேக்கம் என அழைக்கப்படுகின்றன. தன் நிலத்தில் விழும் நீரை விவசாயியே பண்ணைக்குட்டை மூலம் தன் நிலத்திற்குள்ளேயே தேக்கிவைக்க முடியும். தற்போது கிராமங்களில் கண்மாய்கள் இருந்தாலும் நீர்வரத்துக் கால்வாய்கள் பெரும்பாலானவை ஆக்கிரமிப்புகளாலும், பராமரிப்பின்றியும் சேதமடைந்துள்ளன. இவற்றின் மூலம் கண்மாய் நிரம்பும் என்பது நடக்காத காரியம். எனவே, மானாவாரி விவசாயிகளுக்கு பண்ணைக்குட்டைகள் ஒரு சிறந்த மாற்று.

வழக்கமாக மானாவாரி நிலங்களில் மழை பெய்தவுடன் விவசாயம் தொடங்கிவிடும். பயிர் ஓரளவிற்கு வளர்ந்து, அறுவடைக்குத் தயாராகும் கடைசி நேரத்தில் மழை பொய்த்து, பயிருக்குப் பாய்ச்ச நீரின்றி பயிர்கள் கருகும் அவலம் நிகழும். ஆனால் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்ட நிலத்தில் பயிர்கள் கருகும் நிலை ஏற்படாது. நிலத்தின் ஒரு மூலையில் வெட்டப்படும் செவ்வகக்குழி போன்ற அமைப்பு கொண்ட பண்ணைக்குட்டைகள் முதல் மழை பெய்ததும் நிரம்பி விடும். பின்னர் மழை பெய்யாமல் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் பண்ணைக்குட்டைகளில் உள்ள நீர், பயிருக்கு அளிக்கப்பட்டு முழு விளைச்சல் உறுதி செய்யப்படும்.

இரண்டரை ஏக்கர் நிலத்தில் சுமார் 1,000 முதல் 1,500 கன மீட்டர் நீர் தேங்க 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், 1.5 மீட்டர் ஆழம் கொண்ட பண்ணைக்குட்டை அமைக்க வேண்டும். ஆழத்தை தேவைக்கேற்ப அதிகரித்துக்கொள்ளலாம். பண்ணைக்குட்டை நிலத்தில் எந்தப் பகுதி தாழ்வாக உள்ளது எனக் கண்டறியப்பட்டு, அங்கு வெட்டப்படுகிறது. ஒரு பண்ணைக்குட்டை அமைக்க, தற்போதைய சூழலில் ஒரு கன மீட்டருக்கு 35 முதல் 38 ரூபாய் வரை செலவாகிறது. நீர் ஆவியாகாமல் இருக்க, செவ்வக வடிவில் அமைக்கப்படும் பண்ணைக்குட்டைகளை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரித்தால் போதும்.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியிலிருந்து சுமார் 14 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சவேரியார்பட்டினம் கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தக் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளின் எண்ணிக்கை 360. தானம் அறக்கட்டளையின் வழிகாட்டுதல் மற்றும் நிதி உதவியுடன் 2000ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது அக்கிராம மக்களின் பொருளாதாரத்தை வெகுவாக முன்னேற்றியுள்ளது.தானம் அறக்கட்டளையினர் பண்ணைக்குட்டைகளின் அவசியம் குறித்து எடுத்துக் கூறும்போது கிராம மக்கள் யாரும் உடன்படவில்லை. நிலம் வீணாகும், மண் அள்ள முடியாது என மறுத்தார்கள். முதல் ஆளாக நான் முன்வந்து, என் நிலத்தில் 2002ம் ஆண்டு நபார்டு மற்றும் தானம் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் நானும் சிறிது பணம் போட்டு, பண்ணைக்குட்டை அமைத்தேன். சரியாக அந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் மற்ற விவசாயிகளின் நிலத்தில் நீர்ப் பற்றாக்குறையால் பயிர்கள் கருகின. ஆனால், பண்ணைக்குட்டைகளின் உதவியால் நான் நல்ல விளைச்சல் எடுத்தேன்" என மகிழ்ச்சியுடன் கூறினார், சவேரியார்பட்டினம் கிராம விவசாயியான சூசை மாணிக்கம்.

பண்ணைக்குட்டை வந்த பிறகு, தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதில்லை. பயிர்கள் கருகியதும் இல்லை" என்கிறார், பண்ணைக்குட்டையால் பயனடைந்த மற்றொரு விவசாயியான மைக்கேல்.

இக்கிராம மக்கள் பண்ணைக்குட்டைகள் அமைத்த பிறகு ஏக்கருக்கு 30,000 ரூபாய் வரை நிகர வருமானம் ஈட்டிவருகின்றனர். அதிலும் மிளகாய் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கின்றனர்.

மழை நன்றாகப் பெய்யும் காலங்களில் பண்ணைக்குட்டையிலுள்ள நீர் பயன்படாது. அந்தச் சமயங்களில் மீன் வகைகளை அவற்றில் வளர்க்கலாம். இன்னும் சில விவசாயிகள் பண்ணைக்குட்டையில் உபரி நீர் இருக்கும்போது, பருத்தி போன்றவற்றை பயிரிட்டுக் கொள்கின்றனர். மொத்தத்தில் பண்ணைக்குட்டைகள் ஒரு குட்டிப் பொருளாதார மண்டலம்" என்கிறார், தானம் அறக்கட்டளையின் முதுகுளத்தூர் பகுதி மூத்த திட்ட நிர்வாகி வெள்ளையப்பன்.

தானம் அமைப்பினரின் தொடர்பு எண்: 0452-2601673.

எம்.செந்தில்குமார்

Sunday, February 17, 2013

நோய்களைத் துரத்தும் மூலிகை உணவகம்

தமிழகத்தின் முதல் இயற்கை உணவகம் சிவகாசியில் இயங்கி வருகிறது


சிவகாசி தலைமை தபால் நிலையத்தை தாண்டிச் சென்றபோது கண்ணில் பட்டது, தாய்வழி இயற்கை உணவகம்!


இங்கே மாறன்ஜி என்பவர், கடந்த 6 வருடங்களாக முளைகட்டிய தானியங்கள்,கற்றாழைப் பாயசம்,நெறிஞ்சிமுள் சாறு, துளசி டீ போன்ற எண்ணற்ற மூலிகைத் தாவரங்களைக்கொண்டு 18 வித நோய்களுக்கான உணவுகளைத் தயாரித்து, மிகக் குறைந்த விலையில் கொடுத்து வருகிறார். சுகாதாரமாக இருப்பதாலும் நோய்கள் குணமாவதாலும் எந்நேரமும் இங்கு கூட்டம் அலைமோதுகிறது. சிவகாசி மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்களும் இந்த இயற்கை உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, மாறன்ஜியிடம் ஆலோசனைகளையும் கேட்டுச் செல்கிறார்கள்.மேலும் தமிழகத்திலேயே நோய்களைக் குணமாக்க ஆரம்பிக்கப்பட்ட முதல் இயற்கை உணவகம் இதுதான் என்பது சிறப்பு.

எனக்கு சொந்த ஊரு சிவகாசிதான். பிளாஸ்டிக் கம்பெனி வச்சு, நல்ல லாபம் பார்த்துக்கிட்டு இருந்த நான், நோய்களுக்கேற்ற இயற்கை உணவகத்தை நடத்த முக்கியக் காரணம் என்னோட அம்மா சந்திராதான். சில வருஷத்துக்கு முன்னாடி, அம்மாவுக்கு கடுமையான மூட்டுவலி இருந்துச்சி. ஹாஸ்பிட்டல்ல காட்டுனப்ப, ஆபரேஷன் பண்ணாத்தான் சரிப்படுத்த முடியும்னு டாக்டருங்க சொன்னதால, ஆபரேஷன் பண்ண அட்வான்சா ஒரு மாசத்துக்கு முன்னாடியே 25 ஆயிரம் ரூபாய் கட்டிட்டோம்.இடைப்பட்ட நாளுல தெரிஞ்சவங்க சிலர், முடக்கத்தான் தழையைப் பறிச்சு அம்மாவுக்கு ரசம் வச்சுக் கொடுத்தா வலி குறையும்னு சொன்னாங்க. அவங்க சொல்படியே ஆபரேஷன் நாள் வர்ற வரைக்கும் முடக்கத்தான் ரசம் வச்சுக் கொடுக்க ஆரம்பிச்சோம். ஒரு மாசத்துலேயே அம்மாவுக்கு மூட்டுவலி சுத்தமா போயிடுச்சு. முழுமையா குணமானதால, நாங்க ஆபரேஷனுக்குப் போகல. அதுக்காகக் கட்டுன பணம் தான் வேஸ்டா போச்சு. அப்போதான் பாரம்பரியமிக்க இயற்கை உணவுகளை சாப்பிட்டாலே நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நோய்களை அண்டவிடாம மருத்துவச் செலவுகளைக் குறைக்கலாம்னு புரிஞ்சிக்கிட்டேன்.

மூலிகைகளின் மகிமையை உணர்ந்ததால, மருத்துவ உணவகத்தை நாமே ஏன் ஆரம்பிக்கக்கூடாதுன்னு யோசனை வந்துச்சு. அதோட விளைவுதான் கடந்த 6 வருஷமா நோய்களுக்கான இயற்கை உணவகத்தை வெற்றிகரமா நடத்திக்கிட்டு வர்றேன். இதுக்காக ஒரு வருஷம் இயற்கை மருத்துவம் மற்றும் யோகக்கலை அறிவியல் படிச்சது மட்டுமில்லாம, சிவகாசியை சுற்றியுள்ள கிராமங்கள்ல வசிக்கும் பாட்டிகளிடம் போய்க் கேட்டு இயற்கை தாவரங்களில் உள்ள மருத்துவக் குணம் என்னென்ன என்பதையும் ஆராய்ச்சி பண்ணினேன். ஆரம்பத்துல துளசி டீ, நிலவேம்புக் கஷாயம், டயாபட்டிக் கண்ட்ரோல் ஜூஸ், கறிவேப்பிலைக் கீர் போன்றவற்றை மட்டும் செஞ்சு, மொபட்ல எடுத்துக்கிட்டுப் போய் பட்டாசுத் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொடுத்தேன். அன்று தன்னம்பிக்கையோடு கஷ்டப்பட்டது வீணாகல. இன்னிக்கு என்னோட ஹோட்டலுக்கு ஒரு நாளைக்கு 450 பேருக்கும் மேல நோய் குணமாகும் என்ற நம்பிக்கையோடு வருகிறார்கள்" என்கிறார் மாறன்ஜி.

வங்கியில இருந்து 75 ஆயிரம் ரூபாய் லோன் வாங்கித்தான் இந்த ஹோட்டலை தொடங்கி இருக்கிறார் இவர். நாள் ஒன்றுக்கு வேலையாள் கூலிபோக ஹோட்டல் மூலமா 5,000 ரூபாய் வரைக்கும் லாபம் வருவதாகத் தெரிவிக்கிறார். எள்ளு,கொள்ளு,கேழ்வரகு, வரகு,தினை,கம்பு,பயறு வகைகள்,கோதுமை போன்ற தானியங்களையும் கற்றாழை, நெருஞ்சி முள், கீழாநெல்லி போன்ற 20 வகையான மூலிகைத் தாவரங்களையும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்தும், ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களைப் போட்டு விவசாயம் செய்யும் இயற்கை விவசாயிகளிடமிருந்து மட்டுமே தேவையானவற்றை நேரடியாகப் போய் வாங்கி வருகிறாராம். மேலும் பலருக்கு மாடிவீட்டு மூலிகைத் தோட்டம் அமைத்துக் கொடுத்து, அவர்களிடமிருந்தும் மூலிகைகளைப் பெற்றுக் கொள்கிறார்.

உடம்பு இளைக்க அருகம்புல் சாறு, மலச்சிக்கல் மற்றும் மூளைச்சூட்டை தணிக்க நெருஞ்சிமுள் சாறு, முடி உதிர்தலை தவிர்க்க கறிவேப்பிலைக் கீர், சிறுநீர் கல் அடைப்பைப் போக்க வாழைத்தண்டுச் சாறு, ஞாபக சக்திக்கு வல்லாரை சூப், ஆரோக்கியத்திற்கு தினைமாவு லட்டு, நவதானிய லட்டு, முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணிவரையும் பிற்பகல் 3 மணிக்கு மேல் முளைகட்டிய பயறு மற்றும் சுண்டல் வகைகள், சர்க்கரை நோயைக் குறைக்க வெந்தயக்களி,நெல்லிக்காய் ரசம், மூட்டு வலிக்கு முடக்கத்தான் ரசம், ரத்தசோகைக்கு பீட்ரூட் சூப், சளி, இருமலை போக்க துளசி டீ என்று 18 வகை நோய்களுக்கான இயற்கை உணவுகளையும் சூப்களையும் இங்கு தயாரித்து வருவது இந்த உணவகத்தின் சிறப்பு.

இன்டர்நேஷனல் நேச்சுராலாஜி அமைப்பின் (INO) மூலமாக மத்திய அரசின் சிறந்த இயற்கை உணவகம் என்ற விருதைப் பெற்றுள்ளது, மாறன்ஜியின் இந்தத் தாய்வழி இயற்கை உணவகம்.

தொடர்புக்கு: மாறன்ஜி 93674 21787

பூ.சர்பனா