Sunday, July 21, 2013

புதுமைப் பண்ணை


எந்தவொரு வேலையையும் முழு ஈடுபாட்டோடு செய்யும்போது, அதன் சூட்சுமங்கள் நமக்கு எளிதில் பிடிபட்டுவிடும். பாரதியும் இயற்கையை நேசித்து, விவசாயத்தை ஈடுபாட்டோடு செய்ததால் அதில் பல புதுமைகளையும் தொழில்நுட்பங்களையும் புகுத்தியிருக்கிறார்.

 ஜப்பானிய இயற்கை விஞ்ஞானி மசான ஃபுபுகோகு தன்னுடைய பண்ணையைப் பற்றி கூறுகையில், ஜப்பானிலே 25 ஆண்டுகளாக உழாமல் பயிரிடப்படும் பண்ணை என்னுடையது மட்டுமே. ஏனெனில், நான் இயற்கையோடு இணைந்தே விவசாயம் செய்கிறேன். காடுகளை யாரும் உழுவது இல்லை, மண்புழு தவிர. இலை, தழை தவிர அவற்றிற்கு வேறு உரங்கள் இல்லை. அதுபோலவே எனது பண்ணையையும் மண்புழுக்களே உழுகின்றன. இலை, தழைகளே உரமாகின்றன. ஆனாலும் மற்றவர்களைவிட நான் அதிக மகசூல் எடுக்கின்றேன்..." என்கிறார்.

அந்த ஜப்பானிய விவசாயியைப் போலவே இயற்கையோடு இணைந்த ஒரு பண்ணையை உருவாக்கியிருக்கிறார் பாரதி. திருவாலங்காட்டில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது இவரது இயற்கைப் பண்ணை. இயற்கையை நேசித்ததால், தான் நடத்திவந்த தொழிலகத்தை விட்டுவிட்டு, 2000-ஆம் ஆண்டில் துவங்கியதுதான் இந்தப் பண்ணை. பாரதியிடம் பேசியபோது, இப்போதெல்லாம் நமது பிள்ளைகள் ஹார்லிக்ஸ், பூஸ்ட் சாப்பிடாமல் வளர்வது இல்லை. ஆனால், எனது பிள்ளைகளுக்கு (இவர் தோப்பில் உள்ள மரங்களை பிள்ளை என்றே அழைக்கிறார்) யூரியா என்றால் என்ன, பொட்டாஷ் என்றால் என்ன என்றே தெரியாது. ஏனெனில், நான் பண்ணையை ஆரம்பித்த நாள் முதலே இயற்கை விவசாயம்தான் செய்து வருகிறேன். என்னிடம் மொத்தம் 20 மாடுகள், 300 ஆடுகள், 250 கோழிகள், 5 கழுதைகள், 1 ஒட்டகம், 2 குதிரைகள், 50 வாத்துகள், வான்கோழி, சண்டைக்கோழி, மயில் போன்றவை அடங்கிய ஒரு விலங்குகளின் சரணாலயம் உள்ளது.

பறவைகளை சுதந்திரமாக விட்டுவிடுகிறேன். அவற்றை நான் கூண்டுகளில் அடைப்பதில்லை. பண்ணை வேலைகளை அவைகளே செய்துவிடுகின்றன. ஆடு, மாடுகளை பண்ணைக்குள் ஓட்டிச் செல்லும்போது, அவை மேய்ந்து களைகளைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் கழிவுகளை அங்கேயே விட்டு விடுகின்றன. இதனால், தனியாக உரமிட வேண்டிய அவசியம் இல்லை. கோழிகளும் வாத்து மற்றும் மற்ற பறவைகளும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன. இப்படி முக்கிய வேலைகளை எல்லாம் அவைகளே பார்த்துக் கொள்வதால், பல ஏக்கர் பரப்பளவு உள்ள பண்ணையை இரண்டே பேர் மட்டுமே பார்த்துக் கொள்கிறோம். மாம்பழ அறுவடை காலங்களில் மட்டும் கூடுதல் ஆட்களை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறோம்..." என்கிறார்.

இவரது தோப்பில் செந்தூரம், அல்போன்சா, காளப்பாடி, ருமானி, இமாம் பசந்த், பங்கனப்பள்ளி, பத்தரசம், செருகுரசம், ஜவ்வாரி, நீலிசா, மல்லிகா, பெங்களூரா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மா வகைகள் மற்றும் சப்போட்டா, நெல்லி, கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற பழ வகைகளும் குமிழ், மகாகனி, செந்சந்தனம், தேக்கு, ரோஸ்வுட், ஈட்டி, ருத்ராட்சம், சந்தனம் போன்ற விலையுயர்ந்த 100 அரிய வகை மரங்களும் உள்ளன. தற்போது, மின்சாரம் மட்டுமே வெளியில இருந்து வருகிறது. அதற்கும் 5 ஹெச்.பி. மோட்டார் இயங்கக் கூடிய வகையில் சூரிய மின்கலன் ஒன்றை அமைத்துள்ளேன். இதை விரிவு செய்யும் திட்டமும் உள்ளது. அதை நிறைவேற்றும் பட்சத்தில் நாங்கள் வெளியில் இருந்து எதுவும் வாங்க வேண்டியிராது. ஆடு, மாடுகளுக்குத் தேவையான கோ-3, கோ-4, ஸ்டைலா, அகத்தியும் உள்ளேயே பயிரிடப்படுவதால் எங்கள் பண்ணை ஒரு தற்சார்புப் பண்ணை..." என்கிறார் இவர்.


தொடர்புக்கு: பாரதி - 99400 17635

3 comments:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது