Sunday, January 13, 2013

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

குறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக
யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்...
மரம் வளர்க்க பல ஆண்டுகளாகும் நிலையில் 90 நாட்களில் மரம் வளர்க்கும் வித்தையை கண்டறிந்த பாராட்டுக்கும்,நன்றிக்கும் உரிய சமூக சேவகர்....
பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் இவரைப்பற்றி பதிவதில் நேர்வழி வலைதளம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி? 


‘பனை வைத்தவன் பார்த்துச் சாவான்’ என்பது கிராமத்து சொலவடை. அதாவது ஒரு மரம் தரும் பலனை, வைத்தவன் அனுபவிக்க முடியாது. அவனின் அடுத்த தலைமுறைக்குத்தான் மொத்த பலனும் என்பது அர்த்தம். மரம் வளர்ந்து தளைக்க அத்தனை ஆண்டுகள் ஆகும். இனி இதுபோல ஆண்டுக்கணக்கில் காத்திருக்க அவசியம் இல்லை. நட்ட மூன்றே மாதங்களில் மரம் ரெடி என்று நிரூபித்திருக்கிறார், நெல்லை இராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அர்ஜுனன். ‘செப்பறை வளபூமி பசுமை உலகம்’ அமைப்பின் தலைவர் இவர்.

என் சின்ன வயசில அப்பா, அம்மா இறந்திட்டாங்க. உடன் பிறந்தவர்கள் மொத்தம் 13 பேர். வறுமை வாட்டி எடுத்தது. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம். பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதற்கே நான் படாதபாடு பட்டேன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே அர்ஜுனன் கண்களில் சோகம் தெரிந்தது.

இது வெப்ப பூமி. வருஷம் முழுக்க உஷ்ணம்தான். அதிலேயும் கோடைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். பாலைவனம் மாதிரி தகிக்கிற வெயில்ல, வெளியில தலை காட்ட முடியாது. அப்படி வந்து வெளியில எட்டிப் பார்த்தீங்கன்னா, மருந்துக்குக்கூட மரத்தைப் பார்க்க முடியாது. பச்சையே எங்கேயும் இல்லாததால மழையும் இல்லை. நான் பாலாமடை அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். மரம் வளர்க்குறதுல ஆர்வம் வந்ததுக்குக் காரணம், என்னோட பள்ளித் தலைமையாசிரியர் முகம்மது கனி.

செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.

மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.


தொடர்புக்கு : 97903 95796
www.chepparaivalaboomigreenworld.com
நன்றி:சா. சின்னதுரை (புதிய தலைமுறை பயிற்சிப் பத்திரிக்கையாளர்)

16 comments:

 1. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.......இவரின் இந்த நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
 2. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.......இவரின் இந்த நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள் . மாஷா அல்லாஹ்

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி:)

   Delete
 3. கோடை வெப்பத்தை தவிர்க்க குளிர்ச்சியான செய்தி.

  இவரின் கண்டுபிடிப்பு பாராட்டத்தக்கது.

  ReplyDelete
  Replies
  1. உண்மையிலேயே மிக மிக பாராட்டுக்குறிய விசயமே தான் சகோ...
   கருத்துக்கு நன்றி சகோ...:)

   Delete
 4. சலாம் சகோ.ஆஷா பர்வீன்,
  மிகவும் அருமையான யோசனைகள். சிறப்பான நோக்கம்.
  பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

  'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'---முஹம்மத் நபி (ஸல்...) அவர்கள் -அறிவிப்பவர்:நபித்தோழர் அனஸ்(ரலி...)அவர்கள்.
  ஆதாரம்:சுனன் திர்மதி 1398


  "எவர் ஒருவர் மரம் ஒன்றை நட்டு, அம்மரத்தில் இருந்து எத்தனை பழங்கள் உற்பத்தியாகுமோ, அவைகளின் அளவுக்கு இறைவன் மரத்தை நட்டவருக்கு நன்மை எழுதுவான்."---முஹம்மத் நபி (ஸல்...) அவர்கள் ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்-415.


  "நாம் ஒருவர். நமக்கு நால்வர்"(!?) / "We Want more & more GREEN"
  http://pinnoottavaathi.blogspot.com/2010/10/we-want-more-more-green.html

  நாம் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே...! ப்ளீஸ்...! Plant more plants to save our Planet..!

  ReplyDelete
 5. வ அலைக்கும் சலாம் சகோ....
  கண்டிப்பாக மரம் வளர்ப்பது மிக அவசியம் என்பதை வலியுறுத்தவே இதைப்போன்ற பதிவுகளை பதிகிறேன்...
  தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி :)

  ReplyDelete
 6. மாஷா அல்லாஹ் அருமையான ஊக்கப் பதிவு.. மரம் வளர்க்க அனைவரும் இனி இந்த எளிமையான முறையை கையாளுவோம் இன்ஷா அல்லாஹ்..

  ஜசக்கல்லாஹ் ஹைரன் சிஸ்டர்...

  ReplyDelete
 7. Good work fine,keep it up
  by,
  N.S.Prabaharan
  Thanjavur

  ReplyDelete
 8. நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 9. Congrats, "Action is the magic word" you proved that by your great deed.

  ReplyDelete
 10. முதலில் ஒரு இடத்தை வாங்குவோம் ..பிறகு ..மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.

  ReplyDelete
 11. www.informationtamil.blogspot.in
  you r great

  ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது