Friday, January 11, 2013

மாசடைந்த குளம்....மீட்டெடுக்கும் மாணவர்கள்

உலகில் கிடைக்கும் நன்னீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது.நிலத்தடி நீர்,கண் காணாத தூரத்தில் அல்ல,போர்வெல் இயந்திரம் காணமுடியாத தூரத்துக்கு சென்றுவிட்டது.ஒரு குவளை தண்ணீருக்கு தவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை’என அச்சமூட்டுகின்றன,அறிவியல் ஆய்வுகள்.




எவ்வளவு அச்சமூட்டும் செய்திகள் கேட்டாலும் 
நமக்கு,செவிடன் காதில் ஊதிய சங்கு கதைதான்....!!!???

நிலத்தடி நீருக்கான ஆதாரம் அனைத்தையும் 
பூர்த்தி செய்வது...ஆறு,ஏரி,குளம்,குட்டைகள்தான்....
நம் வாழ்வின் ஆதாரம்,அடையாளம் எல்லாமே இவைதான்....

அரசாங்கமும் சரி...தனி மனிதர்களும் சரி....
இவற்றை பற்றி கவலைப்படாமல் கழிவுகளை 
நீ கொட்டுகிறாயா???நான் கொட்டவா???என போட்டி 
போட்டிக்கொண்டுசுற்றுப்புறத்தை கெடுத்துவைத்துள்ளோம்.....
இதற்காக நாம் தேடி வரவைத்த பரிசுதான் டெங்கு உள்ளிட்ட 
‘கொசு நோய்கள்’

இந்த சூழலில்‘தும்பை விட்டு வாலைப்பிடிப்பது’....
உச்சி மரத்தில் உட்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுவது’
என்கிற மனநிலையில் இருந்து வெளியேறி,இனிமேலாவது 
மாசடைந்த நீர்நிலைகளை சுத்திகரித்து பாதுகாக்க வேண்டும் 
என்ற உயரிய நோக்கத்தில் இந்த பணிக்கான ஆரம்ப விதையை விதைத்துள்ளார்கள்,திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்.மேல்நிலைப்பள்ளி 
மாணவர்கள்.

திண்டுக்கல்-சிலுவத்தூர் சாலையில்,நகரின் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள யாதவ மேட்டுராஜக்கப்பட்டி குளத்தை,அசோலாவைப் பயன்படுத்தி,தொடர்ந்து சுத்திகரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

 இதைப்பற்றி பள்ளியின் தாளாளர் கனகசபை கூறினார்.
திண்டுக்கல் பஸ் நிலையம்,கலெக்டர் ஆபிஸ்,மாவட்ட கண்காணிப்பாளர் இல்லம்,வருமான வரித்துறை குடியிருப்பு,
ஆயிரக்கணக்கான வீடுகள்,பல முக்கிய அலுவலகங்கள்,பள்ளிகளுக்கு
மத்தியில் அமைந்துள்ளது.

நகரில் உள்ள பெரும்பாலான கிணறு மற்றும் ஆள்துளைக்கிணறுகளுக்கு
இதுதான் நீர் ஆதாரம்.ஆனால்,இக்குளத்தை பாதுகாக்காமல் கழிவுகளை கொட்டும் குப்பை கிடங்காக மாற்றிவிட்டனர்.

சாக்கடைக்கழிவுகள்,பொதுக்கழிப்பிடக்கழிவுகள்,இறைச்சிக்கழிவுகள்,
மருத்துவக்கழிவுகள் என கொட்டி வைத்துள்ளார்கள்.
இதனால்,குளத்தின் தன்மை மாறி ,மாசடைந்து விட்டது.இதன் காரணமாக அருகில் உள்ள ஆழ்துளைக்கிணறுகளின் நீர்,சுவை,நிறம்
ஆகியவையும் மாறி விட்டன.

இந்நிலையில்,எங்கள் பள்ளியில் செயல்பட்டுவரும்
‘தேசியப்பசுமைப்படை’மூலமாக இக்குளத்தை சீர் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டோம்.முதல் கட்டமாக,நீரின் உள்ள
தனமையை அறிந்துகொள்ள நீர் மாதிரிகளை எடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீர் ஆய்வுப்பிரிவில் கொடுத்தோம்.அதன் முடிவுகள் அதிர்ச்சி தருவதாக இருந்தன.

‘நீரில் ரசாயனங்கள்,கழிவுகள்,கனிமங்களின் அளவு,சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக,ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது.நகர மக்களுக்கு ஏற்படும் தோல் வியாதிகள்,நுரையீரல்,கல்லீரல்,சிறுநீரகப்பிரச்சினைகள்,கால்சியம் சத்து மாறுபாட்டால்மூட்டு,பற்கள் பாதிக்கப்படுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இதுவே காரணமாக இருக்கக்கூடும்

கால்நடைகளுக்கு பல்வேறு நோய்களும்,சத்துக்குறைபாடுகளும்
ஏற்படும்.அதன் காரணமாக பாலின் அளவும்,தரமும் குறையும்’என அலற வைத்தது அந்த ஆய்வின் முடிவுகள்.

இறுதியாக அசோலா என்ற தாவரத்தை குளத்தில் வளர்த்து
சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.மேற்குறிப்பிட்ட பள்ளி மாணவர்கள்
குளத்தில் உள்ள கழிவை அகற்றிவிட்டு அசோலா மூலம் சுத்திகரிக்கும் பணியை செய்து வருகின்றனர்.

இதைப்பற்றி நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அலுவலர் 
பிரிட்டோ ராஜ்கூறியதாவது.....கழிவுகளால் மாசுபட்ட குளத்தை தாவர முறைப்படி சீரமைப்பதுஎங்களுக்கு தெரிந்து இந்தியாவில் இதுதான் முதல்முறை.கழிவுகளில்உள்ளவேதிப்பொருட்கள்,கனிமங்களால்,குளத்தின் தரைப்பகுதி கடினத்தகடு போல் இறுகிவிட்டது.

இதனால் ஆக்ஸிஜன் அளவு குறைந்து,நீர் மாசுபடுகிறது.
கெட்டுப்போன குளத்துக்கு வெள்ளை நிறப்பறவைகள் வராது.
நீர்க்காகம் போன்ற கருப்பு நிறப்பறவைகள் மட்டுமே இருக்கும்.
கால்நடைகள் தண்ணீர் குடிக்காது.துர்நாற்றம் வீசும்.இந்த அறிகுறிகள்
குளத்தில் காணப்பட்டன.

சுத்தப்படுத்த மாணவர்கள் அசோலாவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வாங்கி பள்ளியில் பாத்திகட்டி வளர்த்தனர்.
அதே நேரத்தில் குளத்தில் குப்பைகளை அள்ளும் வேலையும் நடந்தது.

குளம் முழுக்க அசோலாவை தூவினோம்.இப்போது அது நன்றாக வளர்ந்து வருகிறது.அசோலா கடினநீரை மென்னீராக மாற்றும் இயல்புடையது.இதனால் குளம் மீண்டும் நன்னீர்குளமாக மாறும்.இன்னும் சில மாதங்களில் நிலைமை சீரடைந்த பிறகு வெள்ளைப்பறவைகள் இங்கே வர ஆரம்பிக்கும்.

அதை வைத்தே குளம் சீரடைந்ததை அறிந்து கொள்ளலாம்.
இந்த முயற்சி வெற்றிபெற்றால் மாசுபட்டு கிடக்கும் திருப்பூர்
நொய்யல் ஆறு மற்றும் ஒரத்துப்பாளையம் அணை ஆகியவற்றை கூட
சீர்படுத்திவிடமுடியும்’’என்கிற ஆலோசனையும் முன் வைத்தார்.  

வருங்கால நம் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இது போன்ற செயல்களை செய்வது மிக அவசியம்.

1 comment:

  1. assalamu alaikkum........ உங்களை இன்று வலைச்சரத்தில் குறிப்புட்டு பெருமை கொள்கிறோம் ,நன்றி .நேரம் இருந்தால் இங்கே வந்து பாருங்கள் …………..
    http://blogintamil.blogspot.com/2013/01/2521.html

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது