Sunday, August 25, 2013

செயல் வீரர்கள்!

ஏற்றுக்கொண்ட பதவியில் எதிர்வருகிற எத்தனையோ சவால்களை துணிச்சலாக எதிர்கொண்டு, போற்றப்படும் விதத்தில் செயல்பட்டு வருவது சாதாரண விஷயமல்ல. ஆனால் அது சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார், மதுரை மாவட்டம் திரளி ஊராட்சி மன்றத் தலைவி சந்திரா.
                   
அப்படி என்ன செய்துவிட்டார் சந்திரா?
கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் எந்த அரசியல் கட்சியையும் சாராமல், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட பல வரிகளை 100 சதவிகிதம் அரசுக்குச் செலுத்தும் முன்மாதிரி கிராமமாக மாற்றினார்.
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியிருந்த 50 ஏக்கர் அரசு நிலத்தை துணிச்சலாக மீட்டு, மக்களுக்கும் பஞ்சாயத்துக்கும் வருவாய் வரும்படியாக செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்.
அரசின், ‘பெண்கள் சுகாதாரத் திட்டம்’ என்ற திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி, மதுரை மாவட்டத்திலேயே சிறந்த சுகாதாரக் கிராமம் என்ற பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

இவை மட்டுமல்ல, சந்திராவின் சாதனைப் பட்டியல் இன்னமும் நீள்கிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ளது திரளி ஊராட்சி. அங்கு நேரில் சென்றபோது,

‘இந்த அலுவலகம் மக்களுக்காக 24 மணிநேரமும் செயல்படும்’ என்று பஞ்சாயத்து சுவர்களில் எழுதப்பட்டிருந்தது. ஆச்சரியப்பட்ட நம்மை புன்னகையோடு வரவேற்ற சந்திரா, தனது வெற்றிப்பயணத்தை விவரிக்கிறார்:

அச்சம்பட்டி, பச்சக்கோப்பன்பட்டி, காட்ராம்பட்டி, சுந்தரராஜபுரம் புதூர், திரளி இந்த 5 கிராமங்களையும் உள்ளடக்கிய, எங்க திரளி பஞ்சயாத்துல 2,500-க்கும் மேற்பட்ட குடும்பங்க குடியிருக்கோம். நான் 10 -ஆவது வரைக்கும் படிச்சிருக்கேன். எங்க வீட்டுக்காரர் பிச்சை, முன்னாள் ராணுவ வீரர். அவரு நாட்டுக்காக உழைச்சவர்ங்கறதால சமூகப் பிரச்சினைகள் மீதான ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் எனக்குள் உண்டாக்கியது. படிக்காத முதியோர்களுக்கும் படிக்கற பிள்ளைகளுக்கும் இலவசமா தினமும் நைட்ல டியூஷன் சொல்லித் தந்தேன். இதுமட்டுமில்லாம உதவித்தொகை, ஜாதிச் சான்றிதழ், வருமானவரிச் சான்றிதழ் வாங்கித் தர்றதுன்னு யாருக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் தயங்காம எழுதித் தந்து அரசு அலுவலகங்கள் வரைக்கும் கூடவே போய் வாங்கித் தருவேன்.

இப்படி நான் உதவி செஞ்சதைப் பார்த்த கிராமவாசிங்க என்னை வந்து சந்திச்சு, ‘அடிப்படை வசதி கூட இல்லாம ஊர் சீரழிஞ்சு கிடக்குது. இதுக்கு முன்னாடியிருந்த ஊராட்சி மன்றத் தலைவருங்க எங்களுக்குன்னு எந்த நல்லதும் செய்யல. நீங்க தலைவரா வந்தா, இந்தப் பஞ்சாயத்துக்கே விடிவு காலம் பிறக்கும். வர்ற 2011-ஆம் ஆண்டு ஊராட்சிமன்றத் தேர்தல்ல போட்டியிடுங்க, நாங்க உறுதுணையா இருக்கோம்’னு என் கையப் பிடிச்சு கேட்டாங்க. அவங்க அன்புக்கு முன்னாடி என்னால மறுப்பு சொல்ல முடியாததால ஒத்துக்கிட்டேன். 1949-ஆம் ஆண்டுல இருந்து எங்க ஊர்ல பஞ்சாயத்துத் தேர்தல் நடந்திட்டிருக்கு. இதுவரைக்கும் ஊராட்சி மன்றத் தலைவரா இருந்தவங்கல்லாம் கட்சி சார்ந்தே போட்டியிட்டிருக்காங்க. கட்சி சார்பாக போட்டியிட எனக்கு விருப்பமில்லை. சுயேச்சையா நின்னு வெற்றி பெறணும்னு முடிவெடுத்து, நம்பிக்கையோட வேட்புமனு தாக்கல் செஞ்சேன். கடுமையான போட்டிக்கிடையே வெற்றி பெற்றேன். ஜெயிச்சதுக்கப்புறம் பல கட்சிக்காரங்க என்னை, அவங்க கட்சியில சேர்ந்து ஊராட்சி மன்றத் தலைவரா செயல்படச் சொன்னாங்க. எதையும் காதுல வாங்காம இருந்தேன்.

ஊராட்சிமன்றத் தலைவரானதும் நான் செஞ்ச முதல் வேலை இத்தனை வருஷமா மூடியே கிடந்த, எங்க பஞ்சாயத்து அலுவலகத்தைத் திறந்து, ‘இந்த அலுவலகம் உங்களுக்காக 24 மணிநேரமும் செயல்படும்’னு சுவர் முழுக்க எழுதி, என்னை நம்பி ஓட்டுப் போட்ட மக்களுக்கும், பல நலத் திட்டங்கள் வழங்கிவரும் அரசிற்கும் உண்மையா உழைக்கணும்னு உறுதியோட செயல்பட ஆரம்பிச்சேன். எங்க ஊரு கிராமப் பகுதிங்கறதால சரியான வேலைவாய்ப்பு கிடையாது. மக்களுக்கு ஏதாவது வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரணும்னு தீவிரமா யோசிச்சேன். அந்தச் சமயத்துலதான் ஊர்க்காரங்க சிலர், அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிச்சிருக்கறதா தகவல் வந்தது. பஞ்சாயத்தோட மேப் எடுத்துப் பார்த்தப்போ, 50 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிச்சிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனோம்.

புறம்போக்கு நிலத்துல வீடு கட்டி, விவசாயமும் செய்ததோட, ஒருத்தரு ஒரு ஏரியையே விவசாய நிலமா மாத்தி வச்சிருந்தாரு. இவர்களிடமிருந்து அரசு நிலத்தைக் கைப்பற்றி, கிராமத்துக்கு உபயோகமா பயன்படுத்த தீர்மானம் போட்டோம். நிலத்தை மீட்க, திருமங்கலம் பிடிஓ அலுவலகத்திடமும் அனுமதி வாங்கி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு மாசத்துக்குள்ள நிலத்தை ஒப்படைக்க டைம் கொடுத்தேன். இந்த நடவடிக்கையால மதுரையில் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களிடமிருந்து எனக்கு நிறைய மிரட்டல்கள் வந்துச்சு. எதுக்கும் பின் வாங்காம உறுதியா இருந்தேன்.

சொன்னபடியே குறிப்பிட்ட தேதியில அரசு அதிகாரிகள் மற்றும் 20 போலீஸ்காரர்கள் துணையுடன் புறம்போக்கில் கட்டியிருந்த வீடுகளை பொக்லைன் மூலம் அகற்றி, விவசாயம் செய்திருந்த 50 ஏக்கர் நிலத்தை மீட்டு, பஞ்சாயத்துக் கட்டுப்பாட்டிலேயே கொண்டுவந்தேன். அதில் 4 ஏக்கர்ல மழை நீரை சேமிக்க குளமும், 2 ஏக்கர்ல ஊராட்சிக்கு வருவாய் வர பண்ணைக்குட்டையும் மீன்குட்டையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கேன்.அதுமட்டுமில்லாம, எங்க பஞ்சாயத்தைச் சேர்ந்த காட்ராம்பட்டி கிராமத்துக்குப் போக 7 கிலோமீட்டர் சுத்தித்தான் போகணும். இவ்ளோ தொலைவைக் குறைக்க, நான் மீட்ட நிலத்துலயிருந்து ஒண்ணரை கிலோமீட்டருக்கு புதுசா சாலை அமைச்சுக் கொடுத்திருக்கேன்.

கிராம சபை மூலமா பிரச்சினைகளை நேரடியா விவாதிக்கறதோட, வருஷந்தோறும் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையா கட்டணும்னு மக்களுக்கு விழிப்புணர்வையும் உண்டாக்கினேன். அதோட பலன்தான் கடந்த ரெண்டு வருஷமா மதுரை மாவட்டத்துல எங்க ஊரு 100 சதவிகித வரி செலுத்தும் கிராமம் என்று அதிகாரிகளோட பாராட்டுக்களைப் பெற்றிருக்கு. நான் செயல்படுத்திய பல திட்டங்கள் மூலமா பஞ்சாயத்துக்கு வருஷத்துக்கு 10 லட்சம் ரூபாய் வருமானம் வருது. அந்தப் பணத்தைக்கொண்டு ஊரின் அடிப்படைத் தேவைகளை நிறைவேத்திக்கிட்டிருக்கேன்" என்று விரிவாகப் பேசி முடித்தார் சந்திரா.

பெண்கள் கழிவறைக்கான அரசின், ‘பெண்கள் சுகாதாரத் திட்டம்’ என்ற திட்டம் திரளியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருப்பதற்காக அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம், மாவட்டத்திலேயே சிறந்த சுகாதார வளாகம் திரளி என்று பாராட்டியிருக்கிறார். மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவிடமிருந்து 2013-ஆம் ஆண்டிற்கான சிறந்த மகளிர் விருதையும் பெற்றிருக்கிறார் சந்திரா.

மக்களின் பார்வையில்...

ராமுத்தாய்:

இதுவரைக்கும் கிராம சபை கூட்டம்னா எங்களுக்கு என்னன்னே தெரியாது. சந்திராம்மா மாசம் தவறாம கிராம சபையில எல்லாரையும் ஒண்ணாக் கூட்டி, பஞ்சாயத்தின் ஒவ்வொரு திட்டத்தோட வரவுச் செலவுக் கணக்கை எங்ககிட்ட நேரடியா சொல்றது மட்டுமில்லாம, பஞ்சாயத்துக்கு எவ்ளோ நிதி வந்திருக்குன்னு எல்லோருக்கும் நோட்டீஸ் அடிச்சு, கைல கொடுத்துடுவாங்க. மேலும் ஊருக்கு என்னென்ன தேவைகள் இருக்குன்னு கருத்துக் கேட்டு குறைகளை உடனுக்குடனேயே நிவர்த்தியும் பண்ணிக் கொடுக்கறாங்க."
ஜெயந்தி:

திரளி கிராமப்புறம்ங்கறதால எல்லா வீடுகள்லயும் டாய்லெட் கிடையாது. கழிவறை இல்லாததால பெண்களும், இளவயசுப் பிள்ளைகளும் சொல்ல முடியாத பல கஷ்டங்களுக்கு ஆளாகி வந்தோம். சந்திராம்மா, நாங்க படுற கஷ்டத்தைப் புரிஞ்சிக்கிட்டு 8 லட்சம் ரூபாய் செலவுல பெண்கள் சுகாதாரத் திட்டக் கழிவறையும், குளியலறையும் கட்டி விட்டிருக்காங்க. மேலும் 3 மாசத்துக்கு ஒருமுறை உடல் ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வு முகாம்களையும் நடத்துறாங்க."

பூ. சர்பனா

1 comment:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது