Monday, August 19, 2013

முகநூலை இப்படியும் பயன்படுத்தலாம்


மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும், நகராட்சி எடுக்கும் முடிவுகளில் மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அறிவதற்கும் முகநூலை ஓர் கருவியாகப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து வருகிறார், அதிமுகவைச் சேர்ந்த தேவகோட்டை நகராட்சித் தலைவர் சுமித்ரா ரவிக்குமார்.

இவர் எப்படியெல்லாம் முகநூலைப் பயன்படுத்துகிறார்?
                           



              
தேவகோட்டை தினசரி மார்க்கெட்டின் பின்புறமாக, புதிதாக பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட் கட்டுவதற்கு நகராட்சி முடிவு செய்தது. அதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே, புதிய மார்க்கெட் அமைப்பது குறித்து மக்களின் கருத்துக்களை முகநூல் மூலமாகக் கேட்கிறார் நகராட்சித் தலைவர். தண்ணீர் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, பொதுசுகாதாரம் போன்றவை தொடர்பான தகவல்களை முகநூலில் பகிர்ந்துள்ளார். பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வுத் தகவல்களையும், பிளாஸ்டிக் ஒழிப்புக்கான நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்த செய்திகளையும் பகிர்ந்துள்ளார்.

பொது சுகாதாரம் உட்பட நகராட்சி தொடர்புடைய பிரச்சினைகளை உட்கார்ந்த இடத்தில் இருந்தே நகராட்சித் தலைவருக்குப் புகார் அளிக்க முடிகிறது. அந்தப் புகார் மீது நகராட்சித் தலைவர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தேவகோட்டை தியாகிகள் சாலையில் ஓர் இடத்தில் மணல் மற்றும் கற்கள் கொட்டப்பட்டுக் கிடந்தன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது மட்டுமல்லாமல், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பலர், இடறி விழும் அபாயமும் இருந்தது. இது பற்றி நகராட்சித் தலைவரின் முகநூலில் காலை 7 மணி அளவில் புகார் செய்தேன். அதற்கு, 9.30 மணிக்கு நகராட்சித் தலைவர் பதில் அளித்திருந்தார். ‘உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளிக்கிழமைக்குள் அங்கிருந்து மணல் மற்றும் கற்கள் அகற்றப்படும்’ என்று தலைவர் கூறியிருந்தார். உடனடியாக அவர் பதிலளித்தது எனக்கு மன நிறைவை அளித்தது.சொன்னபடியே நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அலைந்து திரியாமல், அலைக்கழிக்கப்படாமல் என் கோரிக்கை நிறைவேறிவிட்டது" என்கிறார், தேவகோட்டையைச் சேர்ந்த மோகன்குமார்.

பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் புகார்களை முகநூலில் பதிவு செய்துவருகின்றனர். முகநூலில் மட்டுமின்றி, செல்பேசி எண்களைத் தொடர்பு கொண்டும் பொதுமக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். குடிநீர், தெருவிளக்கு, குப்பைகள் என ஒவ்வொரு புகாருக்குமான தனித்தனி செல்பேசி எண்கள் முகநூலில் தரப்பட்டுள்ளன (Chairman of Devakottai என்ற பெயரில் கணக்கு உள்ளது).



இதற்குமுன் நான் முகநூலை அதிகமாகப் பயன்படுத்தியது இல்லை. ஆனால், அதன் பயன்பாடுகள் குறித்து நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே, நகராட்சி தொடர்புடைய செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கும், அவர்களின் குறைகளைக் கேட்டறிவதற்கும் முகநூலைப் பயன்படுத்தலாம் என்ற யோசனை வந்தது. கடந்த டிசம்பர் 25 அன்று முகநூல் கணக்கைத் தொடங்கினேன். இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது" என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார், சுமித்ரா ரவிக்குமார்.

-ஆ.பழனியப்பன்

2 comments:

  1. சுமித்ரா ரவிக்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது