Sunday, November 25, 2012

காணாமல் போன ஊருணிகள்

தண்ணீர் மனிதனின் அன்றாடத்தேவைகளில் மிக மிக அவசியமானது...தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்கும் இடங்களில்
மக்கள் அதிகமாக வசித்தனர்....நம்முடைய முன்னோர்கள் தகவல் தொழில்நுட்பம் இல்லாத காலங்களிலும் கூட பின் வரும் சந்ததிகளுக்காக பாதுகாப்பாகவும்,வசதியுடனும் வாழ்வதற்கும்
நீர் நிலைகளையும்,சாலைகள் எங்கும் மரங்களையும் நட்டனர்.....

தகவல் தொழிநுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் உள்ள நம்மை விட
பின் வரும் சமூகத்திற்காக மிகுந்த பயன் தரும் செயலை செய்த
அவர்களே அறிவாளிகள்....

நீர்க்கரைகள் மனித வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை...
நாமும் இத்தனை நாட்களாக நதிகளை ஒன்றிணைப்போம் என
பேசிக்கொண்டிருக்கிறோமே தவிர அரசாங்கமோ,அரசியல் கட்சிகளோ
ஏன் இணையதளங்களில் வாய்ச்சொல்வீரர்களாக இருக்கும் நாம் கூட 
அதை பற்றி சிந்திப்பதில்லை....

நாம் உண்டு...நம் வேலை உண்டு....என சுயநலம் மிகுந்த சமுதாயமாகஇருக்கிறோம்.....இப்படியே இருந்தால் 
நம் பிள்ளைகள் காணாமல் போன தண்ணீர் 
என்ற பதிவு எழுத வேண்டி இருக்கும்....



நம் முன்னோர்கள் பார்த்து பார்த்து வெட்டி வச்ச ஊருணிகள் 
எல்லாம் இப்பொழுது குப்பை கிடங்காக மாறி உள்ளது...எங்கள் ஊர் பரமக்குடியில் எனக்கு விபரம் தெரிந்து 2 ஊருணிகள் 
குப்பை  கிடங்காக இருந்து இப்போது ஊருணி இருந்த இடமே தெரியவில்லை....

ஒரு ஊருணி சிறுவர் பூங்காவாகவும்,இன்னொரு ஊருணி
பள்ளிக்கூடமாகவும் மாற்றப்பட்டுவிட்டது...
நீர்க்கரைகள் அனைத்தும்  ஊரில் மிக பள்ளமாக அமைக்கப்பட்டு
மழைநீர் தானாகவே ஓடி வருவது போல அமைக்கப்பட்டு இருந்தது...

ஊருணி தற்போது மூடப்பட்டதால் மெயின் ரோடுகளில் மழைத்தண்ணீர் தேங்கி நின்று  பள்ளிக்கூடத்தில் இருந்து வரும்போது சாக்கடையும்,மழைத்தண்ணீரும் கலந்த நீரில் முழங்கால் 
வரை நனைந்துவீடு வந்து சேருவோம்....

சென்ற வருடம் விகடன் குழுமத்தில் இருந்து வெளியாகும் பசுமை விகடன் இதழில் ஒரு விவசாயி தண்ணீருக்கு அரசாங்கத்தை நம்பாமல்
தன் நிலத்திற்குள் தானே ஒரு சிறிய குளம் வெட்டி,மழை நீரை சேமித்து வருடம் முழுதும் தண்ணீர் கிடைக்கிறது,எதற்கு நதிநீரை இணைக்கலைன்னு கவலைப்படணும்னு கேட்டிருந்தார்...
உண்மைதான்....சரியான கேள்வி....

குளம்,ஊருணி மூலமாக நிலத்தில் தண்ணீர் சேமித்து \
வைக்கப்பட்டுதண்ணீரும் சுவையுள்ளதாக மாறுகிறது...
யாரையும் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை...
தன் கையே தனக்கு உதவி...!!!

சென்னைக்கு அருகே திருக்கழுக்குன்றம் பக்கத்தில் 
இருக்கும் எடையூர் கிராமத்தில் ஜெர்மனியில் இருந்து 
வந்த டிர்க் வால்த்தர் என்னும் 
நீர் மேலாண்மை பட்டதாரி தண்ணீர் வளத்தை அதிகப்படுத்த
நம் முன்னோர்கள் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வந்த ஊருணி,குளங்களுக்கு சுத்தப்படுத்தி உயிர் கொடுக்கிறார் ....
இவருக்கு உதவியாக இருப்பது அண்ணா பல்கலைக்கழக
சுற்று புற சூழல் துறைதான்.....
அக்கம் பக்கத்து கிராமங்களான எடையூர்,கீரப்பாக்கம்,
பட்டிக்காடு என மூன்று கிராமங்களில் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்ட ஊருணி திட்டம்
தற்போது 2ஆண்டுகளை தாண்டி வெற்றிகரமாக 
கை கொடுத்து கொண்டிருக்க
அடுத்து தமிழகம் முழுதும் இத்திட்டத்தை நீட்டிக்கும் 
வகையில் ஏற்பாடு நடைபெறுகிறது ....


நம் முன்னோர்களால் தோண்டப்பட்ட ஊருணியின் பயன்கள்:-

சாதாரண ஊர்க்குளம். இதைப்போல ஒரு லட்சம் குளங்கள் தமிழகம் எங்கும் இருக்கும். பல பயனின்றி அழிந்துபோயிருக்கும். ஆனால், இந்த ஊருணிகள் கட்டப்பட்டபோது, மிகத் தெளிவான ஒரு முறை இருந்திருக்கிறது.

ஊருணியின் வடிவமைப்பு. அதாவது அதன் ஆழம், அதன் நீள, அகலங்கள். இது சில கணிப்புகளை உள்ளடக்கியது. அந்தப் பகுதியின் மழை எவ்வளவு, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர்த் தேவை எவ்வளவு? இதைக் கொண்டுதான் இந்த வடிவமைப்பு இருக்கும்.


ஊருணியில் ஓரிடத்தில் ஒரு கிணறு இருக்கும். மழை குறைவாக இருக்கும்போது ஊருணி முழுவதும் வற்றிவிட்டாலும் அந்தக் கிணறிலிருந்து நீர் கிடைக்கும். அவ்வப்போது ஊருணி வற்றவேண்டும். அப்போதுதான் அதில் படர்ந்திருக்கும் பாசிகளை நீக்கிச் சுத்தம் செய்ய முடியும்.

நீர்ப் பிடிப்புப் பகுதி. ஊருணி என்பது ஊறும் நிலத்தடி நீரைக் கொண்டதல்ல. அது வான் மழை நீரைக் கொண்டது. அதாவது ரெயின் வாட்டர் ஹார்வெஸ்டிங்:-) ஒரு பெரும் நிலப்பரப்பில் பொழியும் மழை நீரைச் சேமித்து ஊருணிக்குக் கொண்டுசெல்லவேண்டும். அதற்கு ஏற்றார்போல ஊருணி இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும். 

மழை நீர் ஓடிவந்து சேரும் பாதைகளை உருவாக்கவேண்டும்.
இந்த மழை நீர்ச் சேகரிப்புப் பகுதியில் அசுத்தங்கள், முக்கியமாக மனிதர்களும் கால்நடைகளும் மலம், சிறுநீர் கழிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

இந்த மழைநீர் அப்படியே ஊருணிக்குள் செல்லாமல் ஒரு வடிகட்டி வழியாகச் செல்லவேண்டும். இந்த வடிகட்டியில் பல நிலைகள் இருக்கும். நாம் சிறு வகுப்பில் படிக்கும் முறைதான். பெரிய கற்கள், சிறிய கற்கள், பெரிய மணற்துகள், நன்கு சலிக்கப்பட்ட சிறிய மணற்துகள். இதையெல்லாம் தாண்டி நீர் உள்ளே வந்தால் பெரும்பாலான அழுக்குகள் நீக்கப்பட்டுவிடும்.

மனித உடலுக்குத் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகள் பரவாமல் இருக்க ஊருணியின் அமைப்பே உதவும். ஊருணியின் ஒரு முனையிலிருந்து நீர் உள்ளே வருகிறது. மறுமுனையிலிருந்து நீர் வெளியே எடுக்கப்படுகிறது. இடப்பட்ட தூரத்தைக் கடப்பதற்குள் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் இறந்துவிடுகின்றன.

ஊருணியில் யாரும் கால் வைக்கமாட்டார்கள். குளிக்க, துவைக்கமாட்டார்கள். ஆடு மாடுகள் செல்லாதவாறு பார்த்துக்கொள்வார்கள். முன்காலங்களில் எப்படி இதனைச் செய்தார்களோ, ஆனால் இப்போது நான் பார்த்த இடத்தில் நல்ல சுற்றுச் சுவர் எழுப்பி, பூட்டு கொண்டு பூட்டிவைத்துள்ளனர்.

அருகில் இருக்கும் மரங்களில் வசிக்கும் பறவைகள், விலங்குகள் ஊருணி நீரில் அசுத்தம் செய்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. பெரும்பாலும் வடிகட்டிகள் வழியாக நீர் வெளியே வரும்போது இவற்றின் தாக்கம் ஏதும் இருக்காது.....இப்படிப்பட்ட பயன்களைத்தரும் .


இந்த பதிவு எல்லோரும் படித்துவிட்டு போக அல்ல...
ஏன் நாமும் இதை செய்யக்கூடாது...??
பேசுவதற்கும்,எழுதுவதற்கும் லட்சம் பேர் இருக்கலாம்....
செயலில் இறங்குபவர் சில பேரே....
நாமும் அதில் ஒரு ஆளாக இறங்கி பணி செய்வோமா???

நம் ஊரில் உள்ள ஊருணிகளை,குளங்களை ஊர் மீது அக்கறையும், 
நல் உள்ளம் கொண்ட மனிதர்களோடு சுத்தம் செய்வதற்கு 
ஆயத்தம் செய்வோமா???
அல்லது அதற்கான பொருளாதார உதவிகளை 
செய்ய ஒரு குழு அமைப்போமா???

முன்னேற்றத்தை நோக்கி அது எவ்வளவு சிறியதாக 
இருந்தாலும் அடியெடுத்து வையுங்கள் .....!!!


 நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள் ...
1.ஒருவர் தான் கற்ற கல்வியை மற்றவருக்கு கற்பித்து பரப்ப செய்தல் ,
2.தான்  விட்டு சென்ற நல்ல பிள்ளைகள் 
3.அனந்தரசொத்தாக விட்டு சென்ற குர் ஆன் 
4.தான் கட்டிய பள்ளிவாசல் 
5.தான் கட்டிய வழிபோக்கர்கள் தங்கும் விடுதி 
6.தான் அமைத்த ஆறு 
7.மரணித்த பின்பும் நன்மைகள் கிடைக்க தன் வாழ்நாளில் ஆரோக்கியமான நிலையில் 
செய்த தான தர்மம்  ஆகியவை ஒரு மூமின் மரணித்த பின்பும் 
அவருக்கு நன்மைகளை சேர்க்கும் ..
#இப்னுமாஜா -242.

5 comments:

  1. மாஷா அல்லாஹ் :) ... ஜெர்மனியரை சேர்ந்தவரை பாராட்டநும் ... :)

    ReplyDelete
  2. சகோ.சுல்தான் மைதீன் தங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  3. பொது நலச்சேவையில் தன்னை ஈடுபடுத்தி மக்களுடைய குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் விதமாக இந்த ஜெர்மன் காரர் செய்திருப்பது வரவேற்க்கத்தக்கது. மாஷா அல்லாஹ். அல்லாஹ் அவருக்கு நேர்வழியையும் காட்டுவானாக.

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் மக்களின் குடி நீர் தேவைக்காக தன்னை ஈடுபடுத்தி உதவிபுரியும் இவருடைய சேவை பாராட்டுதலுக்குறியது.

    ReplyDelete
  5. // முன்னேற்றத்தை நோக்கி அது எவ்வளவு சிறியதாக
    இருந்தாலும் அடியெடுத்து வையுங்கள் .....!!! //

    ரொம்ப சரியா சொன்னீங்க.. தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை நம்புவதை விட நாமே வழிகளை ஆராய்வது நல்லது... நல்ல பகிர்விற்க்கு நன்றி..

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது