Tuesday, November 20, 2012

விசைப்பலகை வீரர்கள்


புதிய ஊடகங்களின் செயல்பாடுகள் கருத்துச் சுதந்திரமா, கண்ணியமான நடத்தையா என்கிற கேள்வியை அண்மையில் எழுப்பியுள்ளன


கடந்த சில ஆண்டுகளாக செய்திகளை முந்தித் தரும் ஊடகமாக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் உருவெடுத்து வருகின்றன. 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைப் பற்றிய செய்திகள், மற்ற ஊடகவியலாளர்கள் தங்கள் கேமராவுக்கு பேட்டரி போடுவதற்கு முன்பாக, ட்விட்டர் இணையதளத்திலும், படங்கள் ஃப்ளிக்கர் இணையதளங்களிலும் வெளிவந்து உலகை அதிரவைத்தன. குண்டுவெடிப்புகளையும், துப்பாக்கிச்சூடுகளையும் நேரடியாகப் பார்த்தவர்கள் அது குறித்த செய்திகளை இணையத்தைப் பயன்படுத்தி மொபைல் போன் மூலமாக சுடச்சுடப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்கள். அப்போது ஐந்து நொடிகளுக்கு சராசரியாக எழுபது ட்விட்டர் செய்திகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.


பின்லேடனின் மரணத்தைக்கூட முதன்முதலாக உலகுக்கு அறிவித்தது அமெரிக்க அரசாங்கமல்ல. பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு ட்விட்டர். ஷோயப் அக்தர் என்கிற அவர், ஒபாமா இருந்த நகரத்தில் வசித்தார். இரவு ஒரு மணிக்கு அம்மோதாபாத் நகரில் ஹெலிகாப்டர் பறப்பது விசித்திரமாக இருக்கிறது என்று முதல் ட்விட்டை இட்டவர், அடுத்தடுத்து அங்கே என்ன நடக்கிறது என்பதை ட்விட்டர் வாயிலாக உலகுக்கு வெளிப்படுத்தினார்.


தகவல் பரிமாற்றத்தில் சமூக வலைத்தளங்கள் ஒரு புது வெள்ளம்போல் பாய்ந்திருக்கின்றன. ஆனால் அவை செய்திகளை மட்டும் சொல்வதில்லை, செய்திகளோடு கருத்துக்களையும் சேர்த்துச் சொல்கின்றன. சில சமயம் கருத்துக்களையே செய்திகளைப்போலச் சொல்கின்றன. சில நேரம் விரைவாகச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில் வதந்திகளையும் செய்திகளைப்போலச் சொல்கின்றன.


சாண்டிப் புயல் நியூயார்க்கைத் தாக்கியபோது, வீதிகளில் ஓடிய வெள்ளத்தில் திமிங்கலங்கள் நீந்தி வருவதைப் போலவும், அங்குள்ள சுதந்திர தேவி சிலைக்குமேல் பயங்கர மேகங்கள் கவிந்திருப்பதைப் போலவும் கிராபிக் வேலை செய்யப்பட்ட அச்சுறுத்தும் படங்கள் வலையேற்றப்பட்டன.


அதேபோல கூடங்குளம் அணுமின் நிலைய முற்றுகைப் போராட்டத்தின்போது, போலீஸ் தாக்குதலில் ஒரு கைக்குழந்தை இறந்துவிட்டதாகச் சொல்லி, யாரோ ஒருவர் ஏதோ ஒரு குழந்தையின் போட்டோவை ஃபேஸ்புக் தளத்தில் ஏற்றினார். அதைக் கண்டவுடனே ஆயிரக்கணக்கானவர்கள் வேறு எந்த விசாரணையும் சரிபார்த்தலுமின்றி அந்தப் படத்தை தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தனர். இது லட்சக்கணக்கானவர்களை உடனடியாக சில நிமிடங்களில் உசுப்பேற்றத் தொடங்கியது. உண்மையில் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை.


லட்சக்கணக்கானவர்கள் இந்த சமூக ஊடகங்களைச் செலவின்றி பார்க்கிறார்கள் (சிலர் பார்ப்பதையே வேலையாக வைத்திருக்கிறார்கள்) என்பதாலும் பார்த்த /படித்தவுடன் கருத்துச் சொல்ல முடிகிறது (கருத்துக்குக் கருத்துக்கு கருத்து என ஒரு சங்கிலித் தொடரும் சாத்தியம்) என்பதாலும் கவனம் பெறத் துடிக்கும் கருத்துக் கந்தசாமிகள் இந்த ஊடகங்களில் ஏராளமாக உலவுகிறார்கள். அவர்கள் நோக்கம் செய்திகளை/தகவல்களைப் பகிர்ந்துகொள்வதல்ல. மற்றவர்களின் கவனத்தைப் பெற்று, ‘பிரபலமாகி’ விட வேண்டும் என்ற தவிப்புதான்.பெண்கள் கல்லூரி வழியாகப் போகும் சிட்டி பஸ்ஸில், ஃபுட்போர்டில் தொங்கிக் கொண்டு போகும் விடலைகளைப்போல அல்லது பெரியவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் வீட்டிற்கு வந்த விருந்தினர்களின் கவனத்தை ஈர்க்க விரும்பும் குழந்தைகளைப்போல சிலர், ‘வீர தீரத்துடன்’ இந்த ஊடகங்களில் கருத்துக்களை உதிர்ப்பதுமுண்டு. இந்த ஊடகங்களில் வீர பராக்கிரமத்தைக் காட்டுவதற்கு பெரிய முயற்சிகள் தேவையில்லை. ஒரு கணினியும் விசைப்பலகையும் இருந்தால்போதும், அவர்கள் பெயரைக்கூட மறைத்துக் கொண்டு விமர்சனங்களை வீசலாம். எவ்வளவுக்கு எவ்வளவு கடுமையாக அல்லது கொச்சையாக கருத்துக்கள் இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கவனம் திரும்பும் என்பது சில வி.வீ.க்களின் நம்பிக்கை.


இதைக் கருத்து சுதந்திரம் என்று முலாம் பூசும் விசைப்பலகை வீரர்கள், இணையம் கட்டற்ற சுதந்திரம் கொண்ட ஊடகம் என்றும் வாதிடுகிறார்கள். உண்மையில் சமூக ஊடகங்கள் கட்டற்ற சுதந்திரம் கொண்டவைதானா?


சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்கள் நியாயமாக பயப்பட பல விஷயங்கள் இருக்கின்றன. ஐ.டி. சட்டப்பிரிவு 66 திருத்தத்தின்படி ஒருவரது மனம் புண்படும் வகையில் இயங்குபவர்களுக்கு தண்டனை கொடுக்க முடியும். இந்த மனம் புண்படுதல் என்பதற்கு சரியான வரையறை இல்லை என்பதுதான் பிரச்சினை. 66-ஏ சட்டப்பிரிவின்கீழ் வழக்கு தொடுக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும். கவனக்குறைவால் ஒருவரின் உயிரைப் பறித்தவர்களுக்கும் இதுதான் தண்டனை எனும்போது, இச்சட்டம் எவ்வளவு கடுமையானது என்பதை உணர்ந்து சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்கள் கவனமாக இயங்க வேண்டும். வலைத்தளங்களில் அவதூறாக எழுதப்பட்டிருப்பதாகக் கருதப்பட்டால் ஐ.டி. சட்டப்பிரிவில் மட்டுமின்றி, இந்திய தண்டனைச் சட்டத்தின் மற்ற பிரிவுகளிலும் (அவதூறு வழக்கு, பெண் வன்கொடுமை, உயிருக்கு அச்சுறுத்தல் மாதிரி பிரிவுகள்) வழக்கு தொடுக்க முடியும்" என்கிறார், வழக்கறிஞர் பி.சுந்தரராஜன்.


அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக காவல்துறைக்கு வந்த இரு புகார்கள் இணையத்தில் தனிநபர்கள் மீது இஷ்டத்திற்குக் கருத்துக்களை வாரி இறைக்கக் கூடாது என்பதை உணர்த்துகின்றன. பின்னணிப் பாடகி சின்மயி சமூக வலைத்தளங்களில் தன்னை அவதூறு செய்ததாக சிலர் மீது புகார் கொடுத்து, இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அளித்த ஒரு புகாரின் காரணமாக, புதுச்சேரியில் ஒரு ட்விட்டர் கைது செய்யப்பட்டார்.


இவை தங்களுடைய ‘கட்டற்ற சுதந்திரத்திற்கு’ ஆபத்து ஏற்படுத்தும் முயற்சி, கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்கள் போர்க்கொடி எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.


இந்த விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும் பொது இடத்தில் கண்ணியமாக நடந்துகொள்வது, அதுவும் தனிநபர்கள் பற்றி கருத்துச் சொல்லும்போது கண்ணியம் காப்பது எல்லோருக்கும் நல்லது.


ஒரு விஷயத்துக்கு நாம் கருத்தோ, பதிலோ சொல்ல நினைக்கும்போது, ‘பளிச்’சென்று மூளையில் உதிப்பது முதல் சிந்தனை. அதை எழுத சில வினாடிகள்தான் செலவாகும். சிந்தனை கொஞ்சம் தன்னை சுயபரிசோதனை செய்துகொண்டு, எது சரி - எது தவறு என ஒரு சில விநாடிகளில், முன்னோட்டம் பார்த்துக்கொள்ளும். பின்னர் எழுத்துக்குப் போவது நெறிப்படுத்தப்பட்ட இரண்டாவது சிந்தனை. ஆனால் இங்கே கட்டற்ற சுதந்திரம் கொண்ட இணைய உலகில், விரல் நுனிகள் எப்போதும் பரபரப்பாக வில்லில் பூட்டப்பட்ட அம்புகள்போலவே இருக்கின்றன. இரண்டாவது சிந்தனைக்கு வழியே இல்லை. நமக்கே நாமே நம்மை நெறிப்படுத்திக் கொள்வதுதான் நமக்கிருக்கும் ஒரே வழி" என்கிறார், ட்விட்டரில் இயங்கும் பத்திரிகையாளரான ஜி.கௌதம்.


என்னைப் பொருத்தவரை தனிப்பட்ட விமர்சனங்கள்தான் இம்மாதிரி தொல்லைக்குள் நம்மைத் தள்ளும். நாம் செய்யும் விமர்சனத்தையே நம்மை நோக்கி யாராவது வைத்தால் நம்மால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பதை எல்லையாக வைத்துக்கொள்வது ஓர் எளிய வழி. அதே நேரம் அரசியல் விமர்சனங்கள் நமது உரிமை. ஒருவகையில் குடிமகனாக நமது கடமையும்கூட. இந்த விமர்சனங்கள் தனிநபர் தாக்குதலாய் மாறாதவரையில் பிரச்சினை இல்லை" என்கிறார், வழக்கறிஞர் சுந்தரராஜன்.


சமூக வலைத்தளங்கள் இருமுனைக்கத்தி. அவற்றை காய் நறுக்கப் பயன்படுத்துகிறோமா அல்லது ஆளைக் குத்தப் பயன்படுத்துகிறோமா என்பது அதைப் பயன்படுத்தும் விரல் வீரர்களின் தேர்வு.

விசைப்பலகை வீரர்களுக்கு 6 கட்டளைகள்!


சென்னை சைபர் க்ரைம் தடுப்புப் பிரிவும் ட்விட்டர் இணையதளத்தில் இயங்குகிறது. சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்கள் பாதுகாப்பாக இயங்க பாயிண்டுகளை பட்டியலிடுகிறார்கள்.


இணையங்களில் வாசிக்கும் எதையும் ஆராயாமல் நம்பிவிடாதீர்கள்.
விஷயம் தெரியாமல் எதையாவது டவுன்லோடு செய்துவிடாதீர்கள். சில சாஃப்ட்வேர்கள் மூலமாக உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் அனைத்தையுமே உளவு பார்க்க முடியும்.

உங்களுக்கு சம்பந்தமில்லாத இமெயிலோ, தனிச் செய்தியோ வந்தால் அதற்கு பதிலளிக்காதீர்கள்.

செய்திகளைப் பகிர்வதில் கவனம் தேவை. நீங்கள் பகிர்வதை உலகமே பார்க்கும் என்கிற எண்ணத்தோடு செயல்படுங்கள்.

சண்டைகளில் ஈடுபடாதீர்கள். நேரடி வாழ்வில் நாம் பயன்படுத்தாத சொற்களை இணையச் சண்டைகளில் பயன்படுத்துகிறோம். உங்களோடு யாரேனும் மோசமாக சண்டையிட்டாலும் அவர்களை சட்டை செய்யாதீர்கள்.

இணையத்தில் நீங்கள் எதைச் செய்தாலும் அதை திரும்பப்பெறவே முடியாது. அழித்தாலும் அது சர்வரில் இருக்கும். ஏதோ அவசரத்தில் நீங்கள் பகிரும் படமோ, செய்தியோ, கருத்தோ பத்தாண்டுகள் கழித்தும் இணையத்தில் இருக்கப்போகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்
.
நன்றி:புதிய தலைமுறை.

2 comments:

  1. //அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக காவல்துறைக்கு வந்த இரு புகார்கள் இணையத்தில் தனிநபர்கள் மீது இஷ்டத்திற்குக் கருத்துக்களை வாரி இறைக்கக் கூடாது என்பதை உணர்த்துகின்றன. பின்னணிப் பாடகி சின்மயி சமூக வலைத்தளங்களில் தன்னை அவதூறு செய்ததாக சிலர் மீது புகார் கொடுத்து, இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அளித்த ஒரு புகாரின் காரணமாக, புதுச்சேரியில் ஒரு ட்விட்டர் கைது செய்யப்பட்டார்.//

    தாங்கள் கூறும் கருத்து சின்மயி விவகாரத்தில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் புதுச்சேரி ட்விட்டர் விவகாரத்தில் அல்லது தானே பெண் ஷாகீன் தாடா பேஸ்புக் விவகாரத்தில் தங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த இரு சம்பவங்களையும் அரசியல் சட்டத்திற்குட்பட்ட தனி மனித பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அதிகார வர்க்கத்தின் அடக்கு முறையாகவே நான் பார்க்கிறேன். சில தவறுகள் சமூக வலைத்தளங்களில் நடந்திருக்கலாம். சிலர் செய்யும் தவறுகளுக்காக அடிப்படை சுதந்திரத்தின் மீது கை வைப்பது தவறு. புலனாய்வு பத்திரிக்கைகளைவிட இவர்கள் ஒன்றும் பெரிதாக சேற்றினை வாரி இறைத்துவிடவில்லை.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது