Sunday, February 17, 2013

நோய்களைத் துரத்தும் மூலிகை உணவகம்

தமிழகத்தின் முதல் இயற்கை உணவகம் சிவகாசியில் இயங்கி வருகிறது


சிவகாசி தலைமை தபால் நிலையத்தை தாண்டிச் சென்றபோது கண்ணில் பட்டது, தாய்வழி இயற்கை உணவகம்!


இங்கே மாறன்ஜி என்பவர், கடந்த 6 வருடங்களாக முளைகட்டிய தானியங்கள்,கற்றாழைப் பாயசம்,நெறிஞ்சிமுள் சாறு, துளசி டீ போன்ற எண்ணற்ற மூலிகைத் தாவரங்களைக்கொண்டு 18 வித நோய்களுக்கான உணவுகளைத் தயாரித்து, மிகக் குறைந்த விலையில் கொடுத்து வருகிறார். சுகாதாரமாக இருப்பதாலும் நோய்கள் குணமாவதாலும் எந்நேரமும் இங்கு கூட்டம் அலைமோதுகிறது. சிவகாசி மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்களும் இந்த இயற்கை உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, மாறன்ஜியிடம் ஆலோசனைகளையும் கேட்டுச் செல்கிறார்கள்.மேலும் தமிழகத்திலேயே நோய்களைக் குணமாக்க ஆரம்பிக்கப்பட்ட முதல் இயற்கை உணவகம் இதுதான் என்பது சிறப்பு.

எனக்கு சொந்த ஊரு சிவகாசிதான். பிளாஸ்டிக் கம்பெனி வச்சு, நல்ல லாபம் பார்த்துக்கிட்டு இருந்த நான், நோய்களுக்கேற்ற இயற்கை உணவகத்தை நடத்த முக்கியக் காரணம் என்னோட அம்மா சந்திராதான். சில வருஷத்துக்கு முன்னாடி, அம்மாவுக்கு கடுமையான மூட்டுவலி இருந்துச்சி. ஹாஸ்பிட்டல்ல காட்டுனப்ப, ஆபரேஷன் பண்ணாத்தான் சரிப்படுத்த முடியும்னு டாக்டருங்க சொன்னதால, ஆபரேஷன் பண்ண அட்வான்சா ஒரு மாசத்துக்கு முன்னாடியே 25 ஆயிரம் ரூபாய் கட்டிட்டோம்.இடைப்பட்ட நாளுல தெரிஞ்சவங்க சிலர், முடக்கத்தான் தழையைப் பறிச்சு அம்மாவுக்கு ரசம் வச்சுக் கொடுத்தா வலி குறையும்னு சொன்னாங்க. அவங்க சொல்படியே ஆபரேஷன் நாள் வர்ற வரைக்கும் முடக்கத்தான் ரசம் வச்சுக் கொடுக்க ஆரம்பிச்சோம். ஒரு மாசத்துலேயே அம்மாவுக்கு மூட்டுவலி சுத்தமா போயிடுச்சு. முழுமையா குணமானதால, நாங்க ஆபரேஷனுக்குப் போகல. அதுக்காகக் கட்டுன பணம் தான் வேஸ்டா போச்சு. அப்போதான் பாரம்பரியமிக்க இயற்கை உணவுகளை சாப்பிட்டாலே நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நோய்களை அண்டவிடாம மருத்துவச் செலவுகளைக் குறைக்கலாம்னு புரிஞ்சிக்கிட்டேன்.

மூலிகைகளின் மகிமையை உணர்ந்ததால, மருத்துவ உணவகத்தை நாமே ஏன் ஆரம்பிக்கக்கூடாதுன்னு யோசனை வந்துச்சு. அதோட விளைவுதான் கடந்த 6 வருஷமா நோய்களுக்கான இயற்கை உணவகத்தை வெற்றிகரமா நடத்திக்கிட்டு வர்றேன். இதுக்காக ஒரு வருஷம் இயற்கை மருத்துவம் மற்றும் யோகக்கலை அறிவியல் படிச்சது மட்டுமில்லாம, சிவகாசியை சுற்றியுள்ள கிராமங்கள்ல வசிக்கும் பாட்டிகளிடம் போய்க் கேட்டு இயற்கை தாவரங்களில் உள்ள மருத்துவக் குணம் என்னென்ன என்பதையும் ஆராய்ச்சி பண்ணினேன். ஆரம்பத்துல துளசி டீ, நிலவேம்புக் கஷாயம், டயாபட்டிக் கண்ட்ரோல் ஜூஸ், கறிவேப்பிலைக் கீர் போன்றவற்றை மட்டும் செஞ்சு, மொபட்ல எடுத்துக்கிட்டுப் போய் பட்டாசுத் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொடுத்தேன். அன்று தன்னம்பிக்கையோடு கஷ்டப்பட்டது வீணாகல. இன்னிக்கு என்னோட ஹோட்டலுக்கு ஒரு நாளைக்கு 450 பேருக்கும் மேல நோய் குணமாகும் என்ற நம்பிக்கையோடு வருகிறார்கள்" என்கிறார் மாறன்ஜி.

வங்கியில இருந்து 75 ஆயிரம் ரூபாய் லோன் வாங்கித்தான் இந்த ஹோட்டலை தொடங்கி இருக்கிறார் இவர். நாள் ஒன்றுக்கு வேலையாள் கூலிபோக ஹோட்டல் மூலமா 5,000 ரூபாய் வரைக்கும் லாபம் வருவதாகத் தெரிவிக்கிறார். எள்ளு,கொள்ளு,கேழ்வரகு, வரகு,தினை,கம்பு,பயறு வகைகள்,கோதுமை போன்ற தானியங்களையும் கற்றாழை, நெருஞ்சி முள், கீழாநெல்லி போன்ற 20 வகையான மூலிகைத் தாவரங்களையும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்தும், ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களைப் போட்டு விவசாயம் செய்யும் இயற்கை விவசாயிகளிடமிருந்து மட்டுமே தேவையானவற்றை நேரடியாகப் போய் வாங்கி வருகிறாராம். மேலும் பலருக்கு மாடிவீட்டு மூலிகைத் தோட்டம் அமைத்துக் கொடுத்து, அவர்களிடமிருந்தும் மூலிகைகளைப் பெற்றுக் கொள்கிறார்.

உடம்பு இளைக்க அருகம்புல் சாறு, மலச்சிக்கல் மற்றும் மூளைச்சூட்டை தணிக்க நெருஞ்சிமுள் சாறு, முடி உதிர்தலை தவிர்க்க கறிவேப்பிலைக் கீர், சிறுநீர் கல் அடைப்பைப் போக்க வாழைத்தண்டுச் சாறு, ஞாபக சக்திக்கு வல்லாரை சூப், ஆரோக்கியத்திற்கு தினைமாவு லட்டு, நவதானிய லட்டு, முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணிவரையும் பிற்பகல் 3 மணிக்கு மேல் முளைகட்டிய பயறு மற்றும் சுண்டல் வகைகள், சர்க்கரை நோயைக் குறைக்க வெந்தயக்களி,நெல்லிக்காய் ரசம், மூட்டு வலிக்கு முடக்கத்தான் ரசம், ரத்தசோகைக்கு பீட்ரூட் சூப், சளி, இருமலை போக்க துளசி டீ என்று 18 வகை நோய்களுக்கான இயற்கை உணவுகளையும் சூப்களையும் இங்கு தயாரித்து வருவது இந்த உணவகத்தின் சிறப்பு.

இன்டர்நேஷனல் நேச்சுராலாஜி அமைப்பின் (INO) மூலமாக மத்திய அரசின் சிறந்த இயற்கை உணவகம் என்ற விருதைப் பெற்றுள்ளது, மாறன்ஜியின் இந்தத் தாய்வழி இயற்கை உணவகம்.

தொடர்புக்கு: மாறன்ஜி 93674 21787

பூ.சர்பனா

4 comments:

  1. 'இயற்கை உணவகம்" வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. களிப்பிரண்டை
    http://www.tamilkadal.com/?p=1880
    இதனால் குருதிமூலம் ஒழியும் குன்மம் கால் உளைச்சல் நீங்கும். பிரண்டை வடகத்தை உணவு முறையாலேனும் மருத்துவ வகையாலேனும் உட்கொள்ள கப நோய்களும் செரியாமையும் நீக்கும்.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது