Sunday, October 21, 2012

நான் கற்ற பாடம்

நான் கற்ற பாடம்பிரச்சினையா ?  அசௌகரியமா ?


பல வருடங்களுக்கு முன்பு ஓர் ஆங்கில மாத இதழில் படித்த ஒரு கட்டுரை இன்றும் என் நினைவில் இருக்கிறது. அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர், ’நான் கற்ற பாடம்’ என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதியிருந்தார்.


அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது. நடுக்கடலில் இருந்த  கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வேலைப்பளு அதிகம் இருந்த ஒரு நாள், வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ... அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தியிருக்கிறார். ‘முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை.

 இப்போது கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை (problem) தருகிறீர்களே? எப்படி என்னால் வேலை பார்க்க முடியும்? ‘ என்கிற ரீதியில் சுமார் கால் மணி நேரம் விடாமல் பொரிந்து தள்ளியிருக்கிறார். அவர் பேசியதில் ’பிரச்சினை’ என்ற சொல் பல முறை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.


எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னாராம்:‘நீ பேசும்போது பிரச்சினை’ என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய். பிரச்சினை  என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? உனக்கு முதுகுத்தண்டு முறிந்து போய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது பிரச்சினை. உன் வீடு எரிந்துபோய், இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நீ நடுத்தெருவில் நின்றால் அது பிரச்சினை... ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே  பிரச்சினை. இதுபோன்ற பிரச்சினைகள் மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம்.


மற்றபடி நீ பிரச்சினை என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே அசௌகரியங்கள் (inconveniences). இதுபோன்ற அசௌகரியங்கள் வாழ்க்கையில் நிறைய வரும். அந்தந்தச் சமயத்தில் இவை பெரிதாகத் தோன்றும். ஆனால் மணிக்கணக்கிலோ, நாட்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை. பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அவை, அற்ப விஷயங்களாகத் தோன்றும். இப்போது ஆத்திரப்படும் உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில் இது அவ்வளவு பெரிய விஷயமாய் தோன்றாது. நான் சொல்வதை நன்றாக நினைவு வைத்துக்கொள். நமது வாழ்க்கை முழுவதும் எல்லாக் கட்டங்களிலும் இதுபோன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது‘ என்று மிகவும் அமைதியாக அறிவுரை கூறியிருக்கிறார்.


அவர் சொன்னது மிகப் பெரிய பாடமாக எனக்கு இருந்தது. அன்றிலிருந்து நான் எனக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் அது உண்மையான பிரச்சினையா,  இல்லை அப்போதைய அசௌகரியமா என்று என்னையே கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன். நம் வாழ்க்கையில் அசௌகரியங்களைத்தான் அதிகம் சந்திக்கிறோம் என்றும் உண்மையில் அவை அவ்வளவு பெரிய விஷயங்கள் அல்ல என்றும் புரிய ஆரம்பித்தது. கோபம், வருத்தம் எல்லாம் குறைய ஆரம்பித்து பொறுமையும், அமைதியும் என்னில் பெருக ஆரம்பித்தது" என்று அனுபவபூர்வமாகச் சொல்லியிருந்தார்.நீங்களும் நிதானமாக யோசியுங்கள்-உங்கள் பிரச்சினை உண்மையில் பிரச்சினைதானா, இல்லை தற்போதைய அசௌகரியமா என்று!


இக்கட்டுரையை சமீபத்தில் ஒரு வார இதழில் படித்தேன்...
உண்மையில் படிப்பினை பெற வேண்டிய விசயம் தான்....சில வாரங்களுக்கு முன்னதாக நான் சொல்லாத விசயத்தை சொன்னதாக யாரிடமோ சொல்லி அது என் காதுக்கு வந்ததும் எனக்கு வருத்தமாக இருந்தது...நாம சொல்லவேயில்லயே....எப்படித்தான் இப்படியெல்லாம்யோசிக்கிறாங்களோனு ஒரே ஃபீலிங்....


காரைக்காலில் என் அறிவாளி தோழி ஒருவர் உள்ளார்...
அவரிடம் சொல்லி என்ன பண்ணலாம்னு கேட்டேன்...
இவ்ளோதானா மேட்டர்னு சிரிச்சிட்டு எனக்கு அவங்க
லைஃப்ல நடந்த ஒரு சம்பவத்தை சொன்னாங்க....


அவங்களுக்கு மேரேஜ் நடந்த புதிதில் அவங்க மாமியா
எதுக்கெடுத்தாலும் குறை சொல்வாங்களாம்...
அவங்களுக்கு ஒரே வருத்தமா இருக்குமாம்.
அவங்க தாய்மாமா ஒருத்தர் பெரிய ஜீனியஸ்ஸாம்...


அந்த தாய்மாமாட தான் சொன்னாங்களாம்,
‘என் மாமியா நான் என்ன பண்ணுனாலும்
குறை சொல்றாங்கனு சொன்னாங்களாம்’
நாம் என்ன சொல்வொம்....உங்க வீட்டுக்காரர்ட  சொல்லுனு
சொல்வொம்..அவர் என்ன சொன்னார் தெரியுமா???


"உள்ளதைதானே சொல்றாங்கனு சொன்னாராம்....இதுக்கு ஏன் கவலைப்படறனு'' கேட்டாங்களாம்....


என் தோழி மறுபடியும் சொன்னாங்களாம்.....
''நான் செய்யவே இல்லாத காரியத்தை செஞ்சேனு சொல்றாங்களே,
அதுக்கு என்ன பண்ணனு கேட்டாங்களாம்...''

''நீ செய்யாததைதானே சொல்றாங்க....,இதுக்கு போய் கவலைப்படலாமானு கேட்டாங்களாம்''


என் தோழிக்கு உண்மை புலப்பட்டதாம்...
அந்த 2 வரி ஃபார்முலாவைத்தான் தான்
இப்பொழுது ஃபாலோவ்பண்ணுவதாக கூறினார்....
எனக்கும் அதே ஃபார்முலாவை ஃபாலோவ் பண்ணுமாறு
அன்புக்கட்டளையிட்டார்...
எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது...:-)


நம்மை சில பேர் ஆபிஸ்லயோ,வீட்டிலயோ எப்பவும் குறை
சொன்னால் நாம் இந்த பார்முலாவை நினைவு வச்சுகிட்டோம்
என்றால் நோ டென்சன் தான்....நோ பிபி தான்.....
நான் கற்ற பாடம்....இது.....
இதெல்லாம் பிரச்சினையே இல்லை....
அசௌகரியமே என உணர்ந்து கொண்டேன்....
மீண்டும் சந்திப்போம்..

Tuesday, October 9, 2012

தொலைந்து போன மழலைப் பருவம்

தற்போது பேஸ்புக் பக்கங்களிலும்,சமூக வலைதளங்களிலும்
காமெடி,ஜாலி,ஃபன் என்ற பெயரில் ஏதாவது சில புகைப்படங்களைப்
பதிந்து  அதில் உள்ளவர்கள் பேசுவது போலவே இவர்களாக வசனங்கள்

எழுதி லைக்,கமெண்ட்,ஷேர்  செய்து கொள்வார்கள்.
ஏதோ அரசியல்வாதிகளையும்,மத வியாபாரிகளையும் தான்
செய்கிறார்கள் என்று பார்த்தால் பிஞ்சு குழந்தைகளையும்
விட்டு வைப்பதில்லை....பிஞ்சிலேயே பழுக்க வைப்பது போல்
பெரியமனுசத்தனமான வசனங்கள்.

மழலைகள் சிகரெட் பிடிப்பது போன்ற போட்டோசாப் செய்யப்பட்ட
புகைப்படங்கள்......

குழந்தைகளை அவர்களுடைய இயல்பை விட்டும் திசை திருப்பும்
இத்தகைய போட்டோகளுக்கும் நாமும்,லைக்,ஷேர் பண்ணுகிறோம்...

என்ன கொடுமை?????
இப்ப உள்ள மழலைகளும் நெஞ்சில் நஞ்சை ஊட்டும் சினிமா பாட்டுகளை
கேட்டு வளர்வதாலும்,காமெடி என்ற பெயரில் பெற்றோரால்
பார்க்க சலுகை அளித்து அனுமதிக்கப்படும்  இரட்டை அர்த்த வசனங்கள்
கொண்ட  காட்சிகளைப் பார்ப்பதால் வயதுக்கு மீறிய பேச்சுகளை
எல்லா வீடுகளிலும் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது....



இதன் விளைவு.....
இப்படிப்பட்ட பின் விளைவுகளும் நம் பிள்ளைகள் சந்திக்க நேர்கிறது....
ஓடி ஆடி வியர்வை சிந்திய நம்முடைய பிள்ளைப் பருவம் எங்கே???

மழையில் நனைந்த நம் மழலைப்பருவம் எங்கே???
இப்ப உள்ள பசங்களை மழையில் நனைய விடாமல்
கொடுமைப் படுத்துகிறோம்....
காரணம் காய்ச்சல் வருமாம்.....
மழை நம் உடம்பில் உள்ள சூட்டை வெளியேற்றுவதுதான் காய்ச்சல்
என அறியாமல் குழந்தைகளை மிரட்டி ஒடுக்குவதால் தான்
இப்ப உள்ள பசங்க ஆள் இல்லாத நேரம் பார்த்துத் தண்ணீரில்
ஆட்டம் போடுகிறார்கள்
இன்னும் சில பெற்றோர் வெயிலில் கூட விளையாட அனுமதிப்பதில்லை..........
தனியாக வளரும்,யார் கூடவும் பழகாமல் இருக்கும் பிள்ளைகளை விட
நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் பிள்ளைகள்  வெற்றி,தோல்வியை
ஜீரணிக்கும் ஆற்றல் உள்ளவர்களாக வளர்கிறார்களாம்....
முன்னொரு காலத்தில் நாமெல்லாம்
பூந்தளிர்,அம்புலி மாமா,வாண்டு மாமா,
சிறுவர் மலர் புத்தகங்களில் நிறைய கதைகள் படித்துள்ளோம்....
அதில் நல்லவர்கள் பொறுமையாக இருப்பதால் அவர்களுக்கு
கிடைக்கும் பரிசுகளையும்,பிறருக்கு உதவி செய்வதால் நமக்கு
பிறர் உதவி செய்வார்கள் என்ற கருத்துகளும் நம் மனதில்
பதிந்தன......

ஆனால்,இப்பொழுது உள்ள பிள்ளைகள் இந்த சுகங்களையெல்லாம்
அனுபவிக்காமல் டைம் டேபிள் போடப்பட்ட மிசின்களைப் போல்
வாழ்கிறார்கள்..
நாம் பெற்ற இன்பங்களை நம் பிள்ளைகளுக்கும் கொடுப்போமா????





இயற்கையாக சாப்பிட்டு ஓடி ஆடிய
காலமெல்லாம் மலையேறி போய்



பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்களை தின்று 
விளையாடுகிறார்கள்.....


பிறரை அடிப்பது,தாக்குவது போன்ற வன்செயல்கள்,வன்முறை
எண்ணங்கள் இளைய சமுதாயத்தினரிடம் அதிகரிப்பது
வேதனைப் பட வேண்டிய விசயம்......




வீடியோ கேம்,செல் போன் கேம்

இதனால் கை விரல்கள் பாதிக்கப்பட்டு மன அழுத்தமும் உண்டாகிறது.....



நம் பிள்ளைகளுக்கு புத்தகங்களை படிக்க சொல்லி ஆர்வமூட்டலாம்....

இயந்திரங்களை விட்டு வெளியே சென்று ஓடியாட
விளையாட அனுமதிக்கலாம்......
பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் உள்ள
நீதி போதனை கதைகளை தாய்மார்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.....
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை குறைக்கச் செய்து
புத்துணர்ச்சி உள்ள உணவுகளை பரிமாறலாம்.....
நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பது ஒவ்வொரு தாய்,தந்தையின்
கடமை என்பதை நாம் உணர்ந்து செயல்படுவோமா???

Saturday, October 6, 2012

குறை சொல்ல வேண்டாமே!!!



மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இறைவன்
வாழ்வதற்காக உறுப்புகளை அன்பளிப்பாக
கொடுத்துள்ளான்.அவற்றில் மிக சிறந்தது நாவு என்னும்
சிறியதொரு சதைத்துண்டுதான்.....

அதனுடைய பயன்கள் தான் எத்தனை??எத்தனை??
உண்மையை கூறி மக்களை நல்வழிப்படுத்துவதும் நாக்குதான்....
பொய் கூறி வழிகெடுப்பதும் அதே நாக்குதான்.....
கை வலித்தாலும்,தலை வலித்தாலும்,மனசு வலித்தாலும்
அதை வெளிப்படுத்துவதும் நாக்குதான்......
மனிதனின் வெளி உறுப்புகளில் மிக கொடியதும் இந்த நாக்குதான்.....
மற்ற உறுப்புகளை போல் இது அடிக்கடி சோர்வடைவதுமில்லை.
மற்றவர்களின் குறைகளையெல்லாம் சொல்லி காண்பித்து
இன்பம் காணுவதில் அதற்கு நிகர் யாருமில்லை....
நாக்கு இருக்கேன்னு தேவையில்லாமல் பேசாதீங்க....
உப்பு போட்டாற்போல் கொஞ்சமாக பேசுங்கள்...
அளவுக்கு அதிகமாக உப்புப் போட்டால் அந்த சாப்பாட்டை
யாரும் தொடமாட்டாங்க....
அதுபோல வழவழவென்று பேசுபவர்களுக்கு
மதிப்பும் ,மரியாதையும் துளியும் இருக்காது......
இன்னும் நம்மில் பெரும்பாலான மக்களுக்கு
எப்ப பார்த்தாலும் பிறரை குறை சொல்லும் பழக்கம் இருக்கும்....
சாப்பாட்டை குறை சொல்லும் பழக்கம் சிலருக்கு ரொம்ப பிடிக்கும் போல....
சொந்தம்,பந்த வீட்டுக்கு போனாலும்,கல்யாண வீட்டிலயும்
மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு குறை சொல்லுவார்கள்.
உப்பு சரியில்ல,மட்டன் வேகலை,ஒழுங்கா கவனிக்கலனு ஆயிரத்தெட்டு
குறை சொன்னாதான் திண்ட சோறு ஜீரணமாகும்.
இன்னும் சிலர் அடுத்தவரின் உடை ரசனையை விமர்சிப்பார்கள்......
அது அழகாவே இருந்தாலும் பாராட்ட மனசு வராது.....
அவங்களாகவே இது நல்லா இருக்கானு கேட்டால்
அய்யய்யோ.....அந்த கடையில ஏன் வாங்குன...???
துணி நல்லாவே இருக்காதே.....
இதெல்லாம் ஒரு கலரா??
உனக்கு ஏன் கழுதை கலர் டிரஸ்ஸா கிடைக்குதே????னு
குறை சொல்வாங்க....
இன்னும் சிலர் அடுத்தவரின் உடல்குறையை சொல்லி காட்டுவார்கள்...
சொட்டை,வழுக்கை,குட்டை,கருப்பு என்று.....
அது அவர்களுக்கு எவ்வளவு மனவேதனையை ஏற்படுத்தும்
என அறியாமல்.....
இன்னும்,அடுத்தவரின் அறியாமையை குறை சொல்லும் விதமாக
உன் தலையில களிமண்ணா இருக்கு???
நீ மாடு மேய்க்கத்தான் லாயக்குனு.....
மட்டம் தட்டுவார்கள்........
இவ்வாறு பேசுவது அவர்களின் மனதை குத்தி கிழித்திறுக்கும் தெரியுமா....??
நாங்க உள்ளதைதானே சொல்றோம் என தங்களின் செயலுக்கு
சரி காண்கிறார்களே.....அது மிகப் பெரும் தவறு....
நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் காற்றில்
கரைந்துவிடுகிறது என நினைக்கிறோம்....
இல்லை...இல்லை....அது மற்றவர்களின் மனதில் பதியப்படுகிறது
என்பதை சுத்தமாக மறந்துவிடுகிறோம்....
இவ்வாறு பேசுபவர்கள் யாரோ,எவரோ அல்ல....
நம்முடைய வாழ்க்கையில் நானும்,நீங்களும்
இதே தவறை செய்திருப்போம்.....
நாம் அனைவரும் இனிமையாக பேச கற்றுக் கொள்வோம்....
கடினமான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்....
ஒவ்வொரு வார்த்தையும் அன்பில் தோய்த்தெடுங்கள்.....
அன்பு இவ்வுலகையே அடக்கியாளும் சக்தி படைத்தது....
அன்புக்கு அடிமையாகாதவர்கள் இவ்வுலகில் மிகக் குறைவு....
ஒரு சிறிய இனிமையான வார்த்தையின் மூலமாக
அடுத்தவரின் மனதை குளிரவைக்கும் கலையை கற்றுக்கொள்வோம்...
நம் வாழ்க்கை என்பது ஒரு வழிப்பாதை
திரும்ப முடியாத பயணத்தைக் கொண்டது.....
அதில் நாம் சந்திக்கும் மனிதர்களிடம் முக மலர்ச்சியோடு 
நடந்து கொண்டால்ஆயிரமாயிரம் இதயங்களை கொள்ளை அடிக்கலாம்.....
உதாரணமாக.....,
சாப்பாட்டில் குறை இருந்தால் சாப்பாடு சூப்பர்....
உப்பு மட்டும் கம்மியா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு சொல்லலாம்.
அடுத்தவங்க டிரஸ் ரசனை உங்களுக்கு பிடிக்கலைனாலும்
வாவ்.....சூப்பர்னு சொல்லுங்க....
அவங்க முகத்தில ஆயிரம் வாட்ஸ் லைட் ஜொலிக்கும்.....
கருப்பா இருந்தாலும் உன் முகம் களையா அழகா இருக்குனு சொல்லுங்க...
கண்டிப்பா சந்தோசப்படுவாங்க...

புரிந்துகொள்ளும் திறமை எல்லோருக்கும் ஒரே போல இருப்பதில்லை....
அதற்காக மட்டம் தட்டுவதை விட ,இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணலாம்
உன்னால முடியும்னு தன்னம்பிக்கை தரக்கூடிய வார்த்தைகளை சொல்லிப்
பாருங்களேன்....கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கும்.....

எத்தனையோ குடும்பங்கள் பிரிந்ததும் இதே நாவினால்தான்.....
எத்தனையோ உறவுகள் சிதைந்தும் இதே நாவினால்தான்....
எத்தனையோ நட்புகள் பிரிந்ததும் இதே நாவினால்தான்....
பிரச்சினைகள் வரும்போது நமக்குள் சமாதானம்
செய்து வைப்பது இதே நாவுதான்.....

அறிஞர் ஒருவரின் கூற்று இது.....
‘நாவு என்பது பேசுவதற்காகப் படைக்கப் பட்ட ஒன்று...
பேச்சு என்பது ஒரு செல்வம்.....
தன் கருத்தை தெளிவாக வெளியிடத் தெரிந்த மனிதனுக்கு
சமுதாயத்தில் நல்ல மதிப்புண்டு.....அவன் நாவு நேரிய வழியில் சென்றால்-
அவன் உள்ளம் புனிதமான சிந்தனையை வளர்த்தால் அவன் பேச்சு
சீர்குலைந்த சமுதாயத்தையே திருத்தி அமைத்துவிடும்....
நாமும் முயற்சிப்போமா????