Thursday, February 27, 2014

வண்ணங்களை கண்களால் புசியுங்கள் நாக்கினால் ருசிக்காதீர் - மருத்துவர்.கு.சிவராமன்

'கலர்கலராகக் கனவுகள் மட்டும் இருந்தால் பத்தாது; உணவும் இருக்க வேண்டும்’ என்கிறது உணவு அறிவியல். சில மணங்களை மனம் ரசிப்பதற்கு, மூளைக்குச் சில வண்ணங்கள் தேவைப்படு கின்றனவாம். ஆதலால், உணவில் வண்ணம் தீட்டும் வணிகம், ஒரு வருடத்துக்குக் கிட்டத்தட்ட 2,200 மில்லியன் டாலருக்கு நடக்கிறது!

ஹோட்டலில் செக்கச்செவேலென இருக்கும் தந்தூரி சிக்கனையும் சில்லி சிக்கனையும் சாப்பிட்டுவிட்டு கையை, சமையல் பாத்திரம் கழுவுவதுபோல் எலுமிச்சைச் சாறு, சோப்புத் தண்ணீர் எல்லாம் விட்டுக் கழுவிய பின்னரும் கையில் இளஞ்சிவப்பாக ஒட்டியிருப்பது, கோழியில் இருந்தோ, குழம்பில் போட்ட மிளகாய் வற்றலில் இருந்தோ வந்தது கிடையாது. உங்கள் கண்களைக் கவர அதில் தூவிய 'ரெட் டை 40’ எனும் 'ஆசோ டை’யின் எச்சமாக இருக்கலாம்.  
                                                     

பெட்ரோலில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த ரசாயன நிறமி வகைகள்தாம் பஞ்சு மிட்டாய், கேசரி, தந்தூரி சிக்கன்களிலும் பெருவாரியாகச் சேர்க்கப்படுகின்றன. சிக்கனும், பஞ்சுமிட்டாயும், கேசரியும் ரத்தச் சிவப்பாக இருந்தால்தான் பிடிக்கும் என்றால், ஒருவேளை ரத்தம் வற்றும் புற்றுநோயும் கூடவே வரலாம் என்கிறது இன்றைய ஆய்வுகள்

பல நாடுகள் அந்த நிறமிகளைத் தடையும் செய்திருக்கின்றன. இப்படிச் செயற்கையாக இல்லாமல், எத்தனை நிறங்கள் இயற்கை உணவில் இருக்கின்றன என உற்றுப்பார்த்தால் ஆச்சரியம்!

தாவரம் தன் வளர்சிதை மாற்றத்தில் சேமித்துவைக்கும் பொருள்தாம் இந்தத் தாவர நிறமிகள். 'பாலிபீனால்கள் குழுமம்’ என்று தாவரவியலாளரால் அழைக்கப்படும் சத்துகளில்தான், இந்த நிறமிகளைத் தரும் சத்துகள் அனைத்தும் அடங்கும். இவை, தாவரம் தன்னை அல்ட்ரா வயலெட் கதிர்களில் இருந்தும், அழிச்சாட்டியம் செய்யும் சில கிருமிகளில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ள உருவாக்கிக்கொண்டவை. 


மனிதன் அதனைச் சாப்பிடும்போது, அதையும் தாண்டி, சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு முதலான தொற்றா நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் தாக்காதபடி உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் தருவதில் பெரும் பயன் தருகிறது!

'ஓ... அப்போ இந்த பாலிபீனால் மாத்திரை எங்கே கிடைக்கும்?’ என்று உடனே இணையத்தில் தேட வேண்டாம்.

பால் சேர்க்காத ஒரு கப் தேநீரில் (100-150 மி.கி.) எளிதில் கிடைக்கும். க்ரீன் டீயில் இந்தச் சத்து கூடுதல். 100 கிராம் கறுப்புப் பன்னீர் திராட்சையோ, கருநீல நாவல் பழமோ, சிவந்த ஆப்பிளோ, பப்பாளியோ, மாதுளையோ, உங்களுக்கு (200-300 மி.கி.) பாலிபீனாலைத் தரக்கூடும். இந்தப் பழங்கள் மிகவும் கனிவதற்கு முன்பு, கொஞ்சம் இளங்காயாக இருந்தால் பீனாலிக் அமிலங்கள் சற்று அதிக அளவில் கிடைக்கும். அதிகம் பழுத்திடாத இளங்கொய்யாவை சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதும், 'வாழை இளம் பிஞ்சொழிய கனியருந்தல் செய்யோம்!’ என, சித்த மருத்துவ நோயணுகா விதி பாடியதும் இதனால்தான்.

அதே சமயம் ஆன்தோசயனின் எனும் நிறமிச் சத்துகளோ, நன்கு பழுக்கும்போது பழத்தோலில் உருவாகிறது. ஆதலால் மாதுளை, பப்பாளி, தக்காளி, மாம்பழம் ஆகியவற்றை நன்கு கனிந்த பின்னர் சாப்பிடுவது சிறந்தது. வெறும் வயிற்றில் வேறு உணவு இல்லாத வேளையில் பழங்கள் உள்ளே சென்றால்தான் மருத்துவப் பயன்தரும் அதன் நிறமிச்சத்துகள் முழுமையாக உட்கிரகிக்கப்படும். டெசர்ட் என்ற பெயரில் பழத்தை கடைசி பெஞ்சில் உட்காரவைப்பது முட்டாள்தனம்!

அதே சமயம் இந்த பாலினால்களை சமைப்பதில், சேமிப்பதில் கவனம் இல்லாவிட்டால் அதன் பயனை இழக்கக்கூடும். சிறிய வெங்காயம், தக்காளி, முள்ளங்கி, ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா எனும் புளிச்சகீரை ஆகிய காய்கறிகளிலும், சதகுப்பை முதலான பல மூலிகைகளிலும் உள்ள 'குயிர்செட்டின்’ எனும் சத்துதான், நம் ரத்த நாளத்தில் கொழுப்புப் படியாமல் இருக்க உதவும் முக்கியமான பாலிபீனால் சத்து. ஆனால், வெங்காயத்தையும் தக்காளியையும் சமைக்காமல் சாலட் ஆக சாப்பிடும்போதுதான் முழுப் பயன் கிடைக்கும். வெங்காயத்தை வேக வைக்கும்போது 80 சதவிகிதமும், வறுக்கும்போது 30 சதவிகிதமும் பாலிபீனால்கள் காணாமல்போகும். 

கூடவே இந்த பாலிபீனால்கள் உடலில் உட்கிரகிக்கப்பட, நம் சிறுகுடல், பெருங்குடல் பகுதியில் லோக்டோபேசிலஸ் முதலான புரோபயாடிக்ஸ் இருப்பது நல்லதாம். அது இயல்பாகக் கிடைப்பது மோரில் மட்டுமே. ஆக, சின்ன வெங்காயத்தின் பயன் முழுமையாக வேண்டுமானால், வெங்காயத் தயிர் பச்சடியோ, வெங்காயம் தொட்டுக்கொண்டு மோர் சோறாகவோ, மோர் சேர்த்த கம்பங்கூழாகவோ சாப்பிடுவது சாலச் சிறந்தது.

வெங்காய பக்கோடா, சுவை தரலாம்; ஆனால் சுகம் தராது. அதேபோல் வெங்காயத்தின் வெளி வட்டத்தில்தான் அந்தச் சத்து அதிகம். சுத்தம் பார்க்கிறேன் பேர்வழி என வெளிப்பக்கம் பூராவும் உரித்து உரித்து, உள்ளே உள்ள வெள்ளை வெங்காயத்தை மட்டும் சாப்பிடுவது புத்திசாலித்தனம் அல்ல.

இப்படி இயற்கையாக நிறமும் கொடுத்து, உடலுக்கு உரமும் தரும் பொருள்கள் ஏராளமாக இருக்கும்போது, 'முந்தானைப் பக்கம் சிவப்பு கலர் பார்டரும், கொசுவத்தில் லைட் ஷேடும் வர்ற மாதிரி கொடுங்க’ என்று கேட்பதுபோல, நாம் சாப்பிடும் கேக்கில் மூணு அடுக்கு வண்ணம், பிஸ்கட் பார்டர் ஒரு வண்ணம், உள்ளே க்ரீம் இரண்டு வண்ணம், குளிர்பானத்தில் புது வண்ணம் எனச் சாப்பிடுவது, கொஞ்சமாக பெட்ரோலும் தாரும் குடிப்பதற்குச் சமம்.

4 comments:

  1. இதை மக்கள் உனர்ந்து எப்படி சாப்பிட வேண்டும் என்பதை விபரமாக சொன்னதற்கு ஜசஹல்லாஹ் ஹைரன்

    ReplyDelete
  2. Really useful information. ...younger generation to realise for their betterment

    ReplyDelete
  3. Really useful. Youth should understand this



    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது