Tuesday, May 20, 2014

பட்டணம் கையைச் சுட்டது.. கிராமம் நெஞ்சைத் தொட்டது!

ஒருங்கிணைந்த பண்ணையம்

ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம்!
கம்மஞ் சோறு, கருவாட்டுக் குழம்பு, பம்புசெட் குளியல், ஆத்தோர ஆலமரம், மாட்டுக் கழுத்து மணிச் சத்தம், தெருவையே திடலாக்கி விளையாடும் சிறுசுகள், மார்கழி மாசத்து கோலம், பூசணிப் பூ...
- கிராமத்துப் பாரம்பரிய விஷயங்களை இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
இவற்றையெல்லாம் நேரில் பார்க்கலாமே என்று நீங்கள் இப்போது கிராமங்களுக்குப் பயணப்பட்டால்... ஏமாந்துதான் போவீர்கள். திரைப்படங்களில் மட்டுமே இதையெல்லாம் பார்க்க முடியும் என்கிற நிலையை கிட்டத்தட்ட உருவாக்கி வைத்திருக்கிறது நவீன நுகர்வு கலாச்சாரம். கிராமங்களும் கூட பாரம்பரியத்தைப் பறக்கவிட்டு, நகரத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இத்தகையதொரு காலகட்டத்தில், "கிராமம்தான் எந்நாளும் எல்லோரையும் வாழவைக்கும்" என்றபடி பட்டணத்திலிருந்து பட்டிக்காட்டுக்குத் திரும்பியதோடு, 'இயற்கை விவசாயம்... ஒருங்கிணைந்த பண்ணையம்...' என்று அசத்தலாக புது வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறது நவநாகரிக காதல் தம்பதி ஒன்று.
தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள ஆச்சான்பட்டியைச் சேர்ந்தவர் செந்தமிழன் (அலைபேசி: 97917-54596). பத்திரிகையாளர், சினிமா கதாசிரியர், குறும்பட இயக்குனர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். பத்திரிகையாளர், கல்லூரி விரிவுரையாளர் என்று தானும் சளைக்காமல் பன்முகம் கொண்டவர்தான் இவரின் மனைவி காந்திமதி. சென்னைப் பட்டணத்தின் காபி ஷாப், ஷாப்பிங் மால், பீச், சத்யம் சினிமா காம்ப்ளக்ஸ் என்று சொகுசு வாழ்க்கையை விட்டொழித்துவிட்டு, இப்போது ஆச்சான்பட்டியின் நிரந்தரவாசிகளாக பிறப்பெடுத்திருக்கின்றனர் இருவரும்.
நிலம் தரும் நம்பிக்கையை வேற எதுவும் தராது!
"பத்திரிகை, சினிமானு பரபரப்பான வாழ்க்கை ஒரு கட்டத்துல சலிப்பையும், சித்ரவதையையும் கொடுக்கத் தொடங்கிச்சி. நான் விவசாயக் குடும்பத்துல இருந்து வந்தவன்ங்கிறதும் அதுக்கு ஒரு காரணம். அதுமட்டுமில்ல... ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகாகோ எழுதின 'ஒற்றை வைக்கோல் புரட்சி' புத்தகத்தைப் படிச்சது, எனக்குள்ள ரொம்ப மாற்றத்தைக் கொண்டு வந்துச்சி. தமிழர் மரபு, பண்டைய விவசாயம் பத்தின புத்தகங்கள், செம்மறி ஆடு மேய்க்கறவங்களோட வாழ்க்கை முறையை மையமா வெச்சி, நான் இயக்கின 'ஆடோடிகள்' குறும்படம் எல்லாமும் சேர்ந்துதான் என்னை கிராமத்துக்கு திரும்ப வெச்சிடுச்சி.

'பணத்துக்காக மாநகரத்துல நரக வாழ்க்கையை இனியும் அனுபவிக்க வேண்டாம்'னு முடிவு செஞ்சி கிராமத்துக்குத் திரும்பினப்ப, நான் கைநிறைய சம்பாதிச்சுக்கிட்டுதான் இருந்தேன். என் மனைவியும் அதேபோலத்தான். இப்ப விரிவுரையாளர் வேலையை உதறிட்டு, விவசாயத்துல என்கூட உதவியா இருக்காங்க. தொலைஞ்சிப் போன உலக வாழ்க்கையை இங்கதான் நாங்க திரும்பவும் கண்டெடுத்திருக்கோம். சுருக்கமாச் சொன்னா... நிலத்தோட இருக்கும்போது அது தர்ற நம்பிக்கையை இந்த உலகத்துல வேறெதுவும் தர்றதில்லை" என்று உற்சாகமாக பேசும் செந்தமிழன்,
சுறுசுறுப்பாக ஒருங்கிணைந்த பண்ணையம் என்பதை உருவாக்கி, ஊரையே திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

"இயற்கை, 'கை'யைக் கடிக்கும்!"
"இந்த ஊருல எங்க குடும்பத்துக்கு அஞ்சி ஏக்கர் நிலம் இருந்துது. அதை குத்தகைக்கு விட்டுட்டு தஞ்சாவூருக்கு குடிபோயிட்டோம். நான் படிப்பு முடிச்சிட்டு, சென்னைக்கு வேலைக்குப் போயிட்டேன். ஒரு கட்டத்துல பட்டணத்து வாழ்க்கைதான்னு முடிவாகி, அங்கேயே தங்கிட்டேன். ஆனா, போகப்போக அது வெறுத்துப் போனதும், ஊருக்குத் திரும்பி விவசாயத்தை கையில எடுப்போம்னு எங்க நிலத்துல வந்து இறங்கிட்டேன். மண்ணைக் கெடுத்து, மனுசனையும் கெடுக்கிற ரசாயனத்தைப் பயன்படுத்தாம, இயற்கை விவசாயம்தான் செய்யணும்னு முடிவு செஞ்சுதான் ஊருக்கே வந்தேன். 'இயற்கை விவசாயமெல்லாம் கதைக்காகாது. அதுல மகசூலே எடுக்க முடியாது. கையைத்தான் கடிக்கும்'னு ஊர்க்காரங்க சிலர் சவால் விட்டாங்க. 

இன்னிக்கு என்னோட இயற்கை விவசாயப் பண்ணையைப் பார்த்து அசந்து போய் நிக்கறாங்க.ஏற்கெனவே, இயற்கை முறையில விவசாயம் செய்துகிட்டிருக்கிற நண்பர்கள், 'பசுமை விகடன்'ல வெளியான 'ஜீரோ பட்ஜெட்' உள்ளிட்ட இயற்கை வேளாண்மை தொழில்நுட்பம் இதெல்லாம்தான் எனக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் கொடுத்து நிலக்கடலை சாகுபடி செஞ்சேன். நாலரை மா நிலத்துல (ஒன்றரை ஏக்கர்) 22 மூட்டை மகசூல் எடுத்தேன். கடலைக் கொடிய பிடுங்குறப்ப கொடியோட சேந்து குண்டு, குண்டா மண்புழு வந்ததைப் பாத்து அக்கம் பக்கத்து விவசாயிங்க அசந்து போயிட்டாங்க" என்று ஆச்சர்யம் பொங்கச் சொன்ன செந்தமிழன், தொடர்ந்தார்.
மீன், நாட்டுக்கோழி, வாத்து மற்றும் ஆடு!
''ஒரு பயிரை மட்டுமே வெள்ளாமை செய்றதைவிட, காய்கறி, ஆடு, மீன், கோழி, வாத்துனு ஒரே இடத்துல ஒருங்கிணைந்த பண்ணையமா செய்யறப்ப கூலியாள் செலவு குறையறதோட, தினம் தினம் வருமானம் கிடைச்சிக் கிட்டே இருக்கும். இதுதான் இதுல சிறப்பு. என்னோட அஞ்சி ஏக்கர் தோட்டத்துல, பலவகையான காய்கறிகளை விதைச்சி விட்டுட்டு, அதுக்கிடையில குளம் வெட்டி மீன் வளர்க்கறேன். கூடவே... நாட்டுக் கோழி, வாத்து, ஆடு இதையெல்லாம் வளர்த்துக்கிட்டிருக்கேன்.

அரை ஏக்கர்ல குளம் வெட்டி, நாலடிக்கு தண்ணியை நிறுத்தி, எண்ணெய் கலக்காத தவுடு ஒரு மூட்டை, கடலைப் பிண்ணாக்கு இருபது கிலோ இதையெல்லாம் அதுல கொட்டினேன். கெண்டை, கட்லா, ரோகு, புல்லு கெண்டை, விரால்னு 1,500 மீன் குஞ்சுகளை விட்டேன். மாட்டுச் சாணத்தை மட்டுமே தீவனமா கொடுக்குறதால, அதுக்குனு தனியா ஏதும் செலவு கிடையாது..." என்று சொல்லும் செந்தமிழனிடம் ஒரு மாடு கூட கிடையாது. பிறகெப்படி அதைச் சாதிக்கிறார்?
இப்படித்தான்-
"மேய்ச்சல் நிலங்களுக்கு நடுவுல என்னோட தோட்டம் இருக்கறதால, வேலியைச் சுத்தி, எப்பவும் அம்பது, அறுவது நாட்டுமாடுக மேய்ஞ்சிகிட்டிருக்கும். அதுகளோட சாணத்தை சேகரிச்சி, மீனுக்குக் கொடுக்குறது மட்டுமில்லாம... ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் தயாரிக்கவும் பயன்படுத்திக்குவேன்"
-சந்தோஷம் பொங்கச் சொல்கிறார் செந்தமிழன்.
இடைத்தரகருக்கு இல்லை வேலை!


"மீன் வளர்க்க ஆரம்பிச்ச இந்த ஒரு வருஷத்துல, 170 கிலோ மீன் பிடிச்சிருக்கேன். விவசாயத்துல இடைத் தரகர்களே இருக்கக்கூடாதுங் கிறதுதான் என்னோட குறிக்கோள். அதனால நானும் என் நண்பர்களும் சேர்ந்து மக்கள்கிட்ட நேரடியாவே மீனைக் கொண்டு போய் சேர்க்கிறோம். சராசரியா ஒரு கிலோ எம்பது ரூபாய்னு விலை போச்சு. 13,600 ரூபா கிடைச்சிது.
மாட்டுச் சாணத்தோட கோழி எருவையும் மீனுக்கு கொடுக்கலாம்னு நாட்டுக்கோழிகளை வாங்கினேன். பத்து கோழிங்க இருக்கு. அதுக தன்னால மேஞ்சிட்டு வந்துடுது. அதுக போடுற முட்டைகளை நாங்க சாப்பிடுறோம். கழிவை மீனுக்கு போடுறோம். மீன் குளத்துல அலையிற தவளை, பூச்சிகளை கவனிச்சுக்கிறதுக்காக அஞ்சு வாத்துகளை வாங்கிவிட்டிருக்கேன்.
ஊருக்காக ஒரு காய்கறித் தோட்டம்!


எங்க ஊருல 500 குடும்பம் இருக்கு. மொத்த ஊருக்கும் தினசரி 200 கிலோ காய்கறி தேவைப்படுது. அதனால ஊர்ல கூட்டம் போட்டு, நம்ம ஊருக்குத் தேவையான காய்கறியை, வியாபாரிங்ககிட்ட வாங்காம, நாமளே விளைய வைப்போம்னு முடிவெடுத்தோம். முதல் ஆளா, நானே காய்கறி சாகுபடியை ஆரம்பிச்சேன். ஒண்ணரை ஏக்கர் நிலத்துல 4 அடி அகலம் 20 அடி நீளத்துல, ரெண்டடி இடைவெளியில காய்ந்து போன இலை தழையக் கொட்டி, அதுமேல மண்ணைப் போட்டு மேட்டுப் பாத்தி அமைச்சேன். அதுல அரைக் கீரை, தண்டுக் கீரை, முள்ளங்கி, வெண்டை, கொத்தவரைனு பலவிதமான காய்கறி விதைகளைப் போட்டேன். முளைச்சி நின்ன களைகளை எடுத்து நடைபாதையில போட்டு, மூடாக்கா மாத்திடறேன்.


தண்ணி பத்தாக்குறையா இருக்குறதால பத்தாயிரம் செலவு செஞ்சி, நுண்ணீர்ப் பாசனம் (மைக்ரோ ஸ்பிரிங்லர்) அமைச்சிருக்கேன். மேட்டுப் பாத்தியில காய்கறியை நட்டு, 20 நாள்ல கீரையும், 30 நாள்ல முள்ளங்கியும், 40 நாள்ல வெண்டை, கொத்தவரையும் மகசூல் எடுத்தேன். இதுல கொஞ்சமா போட்ட கீரை, முள்ளங்கி ரெண்டையும் எங்க வீட்டுக்கும் நண்பர்களோட வீட்டுக்கும் பயன்படுத்திக் கிட்டோம். வெண்டை, கொத்தவரை இதையெல்லாம் உள்ளூர்லயே வித்துட்டோம். இதன் மூலமா நாலாயிரம் ரூபா கிடைச்சது. இன்னும் காய்ப்பு முடியல. நுண்ணீர் குழாய் அமைச்சதால... வாய்க்காலெல்லாம் சும்மா கிடந்தது. அந்த இடத்தை எதுக்காக விட்டு வைக்கணும்னு... பரங்கி, சுரை, பீர்க்கன் விதைச்சிருக்கேன். அதுக இன்னும் மகசூலுக்கு வரல.
ஆடு வளர்த்தா அதிக லாபம்!


காய்கறிப் பாத்திக்கு உரம் போடுறதுக்காக ஆறு ஆடுகளை எட்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிட்டு வந்தேன். அஞ்சி மாசம் வளர்த்து மூணு ஆடுகளை 7,500 ரூபாய்க்கு வித்துட்டேன். மிச்ச மூணு ஆட்டுல ரெண்டு சினையாயிருக்கு. பண்ணையிலிருக்கற மரங்கள்ல இருந்து அகத்தி, இலை, தழைகளை வெட்டிப் போடுறதால, ஆடுகளை மேய்க்க வேண்டிய வேலையில்லாம போயிருச்சி. அதுகளோட எருவை, காய்கறிப் பாத்தியில கொட்டிடுவேன். ஒருங்கிணைந்த பண்ணையில ஆடுகளை அதிகளவுல வளர்த்தா அது பெரிய லாபமாயிருக்கும் கிறதுக்கு நான்தான் சாட்சி.
ஒரு ஏக்கருல நீலம், பெங்களூரா, வகை மாமரங்கள்... இதுகளுக்கு இடையிலயும், வேலியோரமாகவும் முருங்கை, ஒரு மூலையில நூறு கத்திரிச் செடினு எல்லாம் கலந்து கட்டி வளர்ந்து நிக்குது. கத்திரிக்கு ஜீவாமிர்தமும், அமிர்தக்கரைசலும் கொடுக்கிறேன்.

 நூறு கிலோவுக்கும் மேல காய் பறிச்சும், தொடர்ந்து காய்ச்சிக்கிட்டிருக்கு. மானா வாரியா கேழ்வரகு, எள் இது ரெண்டையும் விதைச்சேன். இதுல கேழ்வரகு சரியா விளையல... ஆனா, எள்ளுல 250 கிலோ கிடைச்சி, அதை ஈடுகட்டிடுச்சி.
ஒருங்கிணைந்த பண்ணைங்கறதுக்கான அடிப்படை கட்டுமானத்தைதான் இப்ப நான் செஞ்சிகிட்டிருக்கேன். இடுபொருள் செலவு எதுவும் இப்ப எனக்கு இல்லை. ஆனா, பண்ணையை சரிபண்றது, கூலி ஆள் செலவுதான் அதிகமாயிருக்கு. அதுவும் போகப்போக குறைஞ்சிடும். மீன், ஆடு, காய்கறினு தனித்தனியாதான் வருமானம் கிடைச்சிக்கிட்டிருக்கு. ஒட்டுமொத்தமா இன்னமும் வருமானம் பார்க்க ஆரம்பிக்கல. அதுக்கு நாலு வருசமாவது ஆகும்" என்று நிறுத்திய செந்தமிழன்,


"இன்னிக்கு திரும்பின பக்கமெல்லாம் தலைவிரிச்சி ஆடுற கூலியாள் பிரச்னைக்கு ஒரே தீர்வு... இந்த ஒருங்கிணைந்த பண்ணையம்தான். ஒரே ஆள், பல வேலைகளைப் பார்க்க முடியும்கிறதால அதிக ஆள் தேவை இருக்காது. அதுதான் இதுல இருக்கற சூட்சமம்" என்றார் பெருமையாக.
Thanks Vikatan

Friday, March 21, 2014

வீட்டினுள் புகுந்த கெமிக்கல் அரக்கன்............!!!

தரை துடைக்கும் சோப் ஆயிலில் செயற்கை வாசனை
துணி துவைக்க பயன்படும் சோப்பு பவுடரில் ரசாயன வாசனை...
துவைத்த துணியை மணமாக்க  கம்போர்ட் என்னும்
செயற்கை வாசனைத் திரவியம்!!!
வேர்வை நாற்றத்தை போக்க மூக்கை மட்டுமல்ல...
நுரையீரலை துளைக்கும் ஸ்ப்ரேக்கள்....
ஆஸ்துமாவை இழுத்து வரும் நாப்தலின் உருண்டைகள்...!!!
                                         
வீடு மற்றும் ஆபிஸ் ரூம்களை மணக்க வைக்கும் ரூம் ஸ்ப்ரேக்கள்
மாதவிடாய் நாப்கினில் செயற்கை வாசனை...!!!
டாய்லட்,பாத்ரூமிற்கு ஓடோனில்,ஏர் ஃப்ரஷ்...
என எங்கெங்கு காணினும் கெமிக்கல் அராஜகம்....!!!???

இன்று ஆண்டு ஒன்றுக்கு கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்படும்
மூக்கைத்துளைக்கும் பல்வேறு பிராண்டுகளின் ஸ்ப்ரேக்களுக்கு இளைஞர்களும்,யுவதிகளும் அடிமையாகி அதுதான் உயர்ந்தது என உபயோகிக்கிறார்களே அதன் மூலம் அலர்ஜி,ஆஸ்துமாவை கொண்டு வர முடியும் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்???

பெண்களின் நிறத்தை அதிகமாக்கி காட்டுகிறோம்
என மூளைச்சலவை செய்யப்படும் முகப்பூச்சுகள்...
இதன் விபரீதத்தை அறியாமல் நம்மில் பெரும்பாலானோர் அதன் அடிமையாய் மாறிவிட்டனர்......!!!

செயற்கை அழகின் விபரீதங்கள்-
இயற்கை அழகு பொருட்கள் அதிகமாக இருந்தாலும் புதியதாய்
வருகின்ற பொருட்களின் மீது தான் ஆர்வம் அதிகரிக்கின்றது.
இயற்கை அழகு கொட்டிக்கிடக்கையில் மேலும் அழகு படுத்துகிறேன் என்று பெண்கள் போட்டுக்கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது .

கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு முதல் பாதநகங்களுக்கு போடும் நெயில் பாலீஸ் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் நம் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஷாம்பு, ஸ்ப்ரே

தலை குளிக்க வேண்டும் என்றால் ஷாம்பு இல்லாமல் குளிப்பதில்லை. அந்த அளவுக்கு இன்றைக்கு ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஷாம்பில் நுரை அதிகம் வரவேண்டும் என்பதற்காக 15 ரசாயனங்கள் வரை கலக்கப்படுகின்றனவாம். அதில் சோடியம் சல்பேட் டெட்ராசோடியம் பாரோபிளின் கிளை சால் போன்றவை ஆபத்தானவை என்கினறனர் மருத்துவர்கள்.

பாதிப்பு

கண் எரிச்சல், மற்றும் பார்வை கோளாறு ஏய்படும்

தலைக்குப் போடும் ஸ்பிரேயில் 11 ரசாயணங்கள் கலந்து வருகின்றன. இதில் ஆக்டிநோசேட், இசோப்தாலேட் ஆகிய ரசாயணங்கள் மிகவும் ஆபத்தானவை. அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு, தொண்டையில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடுமாம்.
                                                   
பாதிப்பு

இந்த ரசாயனங்களின் மூலம் உடல் செல்களின் வடிவமைப்பு கூட மாறக்கூடிய ஆபத்து இருக்கிறதாம்.

கண் அழகு சாதனங்கள்

கண்களுக்கு எந்த வித அழகு சாதனப் பொருட்களும் உபயோகப்படுத்தாமல் இருப்பதே நன்மை தரும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஏனெனில் ஐஷேடோவில் 26 விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம். அதில் கலக்கப்படும் பாலிதீன் டெரிப்தாலேட் என்ற ரசாயனம் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாம்.

பாதிப்பு

இது புற்று நோய், குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள், உடலின் உள்பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்துகின்றனவாம்.

கன்னக் கதுப்பு

கன்னத்தில் அழகை அதிகரிக்க உபயோகிக்கும் ரூஜ் 16 வகை ரசாயனங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் எதில் பாரபின், மெதில் பாரபின், உள்ளிட்ட ரசாயனங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துமாம்.

பாதிப்பு
கன்னம் சிவந்து போதல், கன்னத்தில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.

முக அழகுப் பொருட்கள்

முக அழகிற்குப் போடப்படும் லோஷன்களில் 24 விதமான ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இதிலுள்ள பாலிமெதில்மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தானது.

பாதிப்பு

இதனால் அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள், புற்றுநோய்க்கான காரணிகள் ஏற்படக்கூடும்.

லிப்ஸ்டிக்கில் பாலிமென்தால், மெத்தா க்ரைலேட் உள்ளிட்ட 33 ரசாயனங்கள் உள்ளன. இவற்றில் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் காணப்படுகின்றனவாம்
வாசனை திரவியங்கள்

கோடை காலம் வந்தாலே வாசனை திரவியங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கிவிடும். இதில் 15 விதமான ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.உடலுக்கு போடும் பாடி லோசன்களில் 32 வகையாக ரசாயனங்கள் உள்ளன.
பாதிப்பு

தோல், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது தலைவலி, மயக்கம், இயங்கும் தன்மையில் மாற்றங்களை ஏற்படும்.
இதன் மூலம் தோல் தடிப்பு, தோல் நிறமாற்றம், எரிச்சல், ஹார்மோன் கோளறு போன்றவை ஏற்படும்.

நகப்பூச்சுகள்
நக அழகுக்காக பயன்படுத்தும் நெயில் பாலிஷ்களில் 31 ரசாயனங்கள் காணப்படுகின்றன. இவை குழந்தையின்மை, குழந்தையை உருவாக்குவதில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவற்றை படித்த பின்னரும் அழகு சாதனங்கள் உபயோகிக்கவேண்டும் என்று விருப்பப்படுபவர்கள் ரசாயன கலப்பில்லாத மூலிகை அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இண்டோர் பொல்யூஷன்' - வீடு, ஆபீஸ் என்று உள்ளரங்க பகுதிகளில் ஓசைப்படாமல் சேரும் காற்று மாசு தான் சில மோசமான வியாதிகளுக்கு வித்தாக உள்ளது என்பது இன்னமும் கூட பலருக்கு தெரிவதில்லை.

 வீட்டில், சமையல் அறையில், காஸ், கெரசின் ஸ்டவ் விடும் புகையில் ஆரம்பித்து, ஹாலில் உள்ள 'டிவி' பெட்டி, படுக்கை அறையில் உள்ள தலையணை, படுக்கை விரிப்பு, குளியல் அறையில் ஒட்டடை, கழிவுகள்... இப்படி வீட்டுக்குள் சேரும் 'காற்று மாசு'களுக்கு அளவே இல்லை. ஆனால், இதையெல்லாம் பெரும்பாலோர் பெரிதாகவே எண்ணுவதில்லை. கேன்சர் வரை வந்த பின்னும் கூட, வீட்டுக்குள் இருந்த காற்று மாசு தான் காரணம் என்பதை உணர மறுக்கின்றனர். இந்தியாவில் நகரங்களில் மும்பையில் தான் இப்படிப்பட்ட 'இண்டோர் ஏர் பொல்யூஷன்' அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

காற்று மாசு என்றால் என்ன?
காற்று மாசு என்பது அசுத்தக்காற்று என்று சொல்லலாம். புகை, ரசாயன வாடை, கட்டுமான பொருட்கள் உட்பட சில வகை பொருட்களால் எழும் தூசு போன்றவை தான் காற்று மாசுக்கு தீனியாக உள்ளன. வீட்டில் இவை படிந்தால், போகப் போக மனிதர்களை பாதிக்க ஆரம்பிக்கிறது. சாதாரண இருமலில் ஆரம்பித்து, கடைசியில் தீராத வியாதியில் கொண்டு விடும் ஆபத்துள்ளது.

இதை தடுக்க வேண்டுமானால், இயற்கையான முறையில் உள்ள பொருட்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்த வேண்டும். இப்போதுள்ள கொசு விரட்டி, நாப்தலின் உருண்டை, தரை சுத்தத்துக்கு போடப்படும் ரசாயன திரவங்கள் போன்றவை காற்று மாசுக்கு பெரிதும் துணை போகின்றன.

சமையல் அறையில்:
பெண்களுக்கு பல வகையில் நோய்களை உருவாக்கும் இடமே சமையல் அறை தான். சமையல் அறை சுத்தமாக, காற்றோட்டமாக இருந்தாலே, பெண்களுக்கு ஆரோக்கியத்துக்கு குறைவிருக்காது. சமையல் அறையில் பயன்படுத்தும் காஸ் ஸ்டவ், கெரசின் ஸ்டவ், தரம் குறைந்ததாக இருந்தால், அது கக்கும் புகை உடலுக்கு கெடுதல். சுவாசக்கோளாறில் ஆரம்பித்து, கேன்சர் வரைக்கும் கொண்டு போய்விடும் ஆபத்து உள்ளது. சமையல் அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது நல்லது. காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால், அதில் சமையல் செய்யும் பெண்களுக்கு கண்டிப்பாக காற்று மாசினால், நோய் வாய்ப்பு அதிகம்.
 
'டிவி'யிலும் ஏற்படும் காற்று மாசு:

'டிவி'யில் எப்படி காற்று மாசு ஏற்படும் என்று நீங்கள் கேட்கலாம். ஆம், குறுகலான அறையில் உட்கார்ந்து 'டிவி' பார்க்கும் போது, அதனால் கண் பார்வை பாதிக்கப்படுகிறது. 'டிவி'யில் இருந்து வெளிப்படும் ஒலிக் கற்றையால், வெளிப்படுத்தும் வாயுவால் காற்று மாசு ஏற்படுகிறது. மேலும், அறையில் சுத்தம் இல்லாவிட்டாலோ, அத்துடன் செயற்கை வாசனை பொருட்கள் பயன்படுத்தினாலோ காற்று மாசு அதிகரிக்கும். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படும். நாய் முதல் மீன் வரை வளர்ப்போர், அவற்றை சரிவர பராமரிப்பதில்லை. அதனால், துர்நாற்றம் வீசுகிறது. அதை கண்டுகொள்ளாமல் இருந்தால் சுவாசக்கோளாறு வருவது உறுதி.

குளியல் அறையில்:
குளியல் அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நாப்தலின் உருண்டை மற்றும் சிலவகை ரசாயன திரவங்கள் பயன்படுத்துகிறோம். சுத்தமாக கழுவி விடுவதை விட, இதுபோன்ற செயற்கை பொருட்களை தான் பலரும் நம்பியிருக்கின்றனர். ஆனால், இதுவே, ஆரோக்கியத்துக்கு கெடுதல் என்பதை அவர்கள் உணருவதில்லை. அடிப்படை சுகாதாரத்தை கூட குளியல், கழிப்பறைகளில் பலரும் பின்பற்றுவதில்லை. சரிவர சுத்தம் செய்யாததுடன், கழிப்பறை சென்றதும் கூட கை, கால்களை சுத்தம் செய்வதற்கு கூட தெரியாத நிலையில் பலரும் உள்ளனர். இந்த அஜாக்கிரதை தான், வியாதிக்கு வித்து.

அதிக ரசாயன கலப்பு:
தரைக்கு போட்டு சுத்தம் செய்யும் திரவமாகட்டும், கொசு விரட்டியாகட்டும், எதிலும், அதிக ரசாயன கலப்பு இல்லாமல் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். அதுபோல, அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை முறைகள் தான் பாதுகாப்பானது. கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, தேங்காய் எண்ணெய், யூக்கலிப்டஸ் எண்ணெய் கலந்து 'ஸ்ப்ரே' செய்தால், கொசுக்கள் வராது. இதுபோல, நாப்தலின் உருண்டைகளை பயன்படுத்துவதை விட, வேப்பிலை விழுதுகளை போட்டு வைத்தால் போதும். பூச்சிகள் அண்டாது. இப்படி எவ்வளவோ இயற்கை வழிகள் உள்ளன. ஆனால், நாம் வெகுதூரம் செயற்கை வழிகளில் சென்று விட்டோம்.

விழிப்புணர்வு வருமா?
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் நிகழும் காற்று மாசு காரணமாக ஏற்படும் இறப்புகளில் 80 சதவீதம், இந்தியாவில் தான் ஏற்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அதனால், காற்று மாசுவை சாதாரணமாக எண்ணாமல், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறி வருகிறது. அன்றாட வாழ்வில் பல செயற்கை பொருட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், காற்று மாசு பற்றி உணர வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

ரசாயானங்களின் புதைகுழிக்குள் விழாமல் இயற்கையான பொருட்களை மட்டும் பயன்படுத்தி மிகப்பெரும் செல்வமான உடலையும்,உலகையும் பாதுகாப்போம்.............!!!

Sunday, March 2, 2014

ஆக்சிஜனை அதிகமாக வெளியேற்றும் மூங்கில் மற்றும் புங்க மரம்

இறைவனின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. மேலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயு அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் மரங்கள். மழையை வருவிக்கும் கருவிகளாக மரங்களும், செடிகளும் உள்ளன.
                                                            
சுற்றுச்சூழலை பாதுகாக்க விரும்புவோர்கள் வீட்டில் மரம் நட விரும்புவார்கள்.ஆனால்,என்ன மரம் நடுவது என்பது குறித்து பல்வேறு யோசனைகள் இருக்கும்...!!!ஏன் நம் வீடுகளில் ஆக்சிஜனை அதிகமாக வெளியேற்றும் மூங்கில் மற்றும் புங்க மரத்தை நடக்கூடாது......???!!!

தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களிலும் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தாலும் நன்கு வளரும் மர வகைகள் இவை இரண்டுமாகும்... 

ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். எனவே, மூங்கில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறந்த மரம் என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மூங்கில் மரங்களை வளர்த்தால் காற்று மண்டலம் தூய்மைப்படும் என்கின்றனர் உலக சுற்றுச்சூழல் வல்லுனர்கள்.      

                   

ஒரு மனிதனுக்கு ஓர் ஆண்டில் தேவைப்படும் பிராணவாயு அதாவது ஆக்சிஜன் 292 கிலோ. ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக்கிட்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O.) ஆராய்ச்சி முடிவு. ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம். ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவை 800 கிராம். ஆனால், ஒரு குத்து தருவதோ 850 கிராம். ஒரு மூங்கில் குத்தில் வெளியிடக்கூடிய பிராண வாயு ஒரு மனிதனுக்குப் போதுமானது.

 ஆளுக்கொரு மூங்கில் மரம் அல்லது குறைந்தபட்சம் வீட்டிற்கு ஒரு மூங்கில் மரம் இருந்தால் சுற்றுச்சுழல் பாதிப்பு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய்விடும்!எனவே, மூங்கில் வளர்த்து சுற்றுச் சூழலை பாதுகாப்போம்


ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான். எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது. பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். சாலை ஓரங்களில் நிழல் தரவும்,, மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
                                                           


புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று. வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு.

புங்க மர விதையிலிருந்து பயோடீசல் (Biodisel) உருவாக்கும் திட்டத்தைப் பற்றி மஹாராஷ்டிர அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்த விதைகளிலிருந்து 30 – 40 சதவீத எண்ணெய்ச் சத்து உள்ளதாக கண்டறிந்துள்ளனர்...
அருகில் உள்ள நர்சரிகளில் இம்மரக்கன்றுகள் கண்டிப்பாக கிடைக்கும்...
விலை 40 ரூபாய்க்கு குறைவாகத்தான் கிடைக்கும்
வீட்டிற்கு ஒரு மூங்கில் மற்றும் புங்க மரம் வளர்ப்போம்!!!
சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!!!

Thursday, February 27, 2014

வண்ணங்களை கண்களால் புசியுங்கள் நாக்கினால் ருசிக்காதீர் - மருத்துவர்.கு.சிவராமன்

'கலர்கலராகக் கனவுகள் மட்டும் இருந்தால் பத்தாது; உணவும் இருக்க வேண்டும்’ என்கிறது உணவு அறிவியல். சில மணங்களை மனம் ரசிப்பதற்கு, மூளைக்குச் சில வண்ணங்கள் தேவைப்படு கின்றனவாம். ஆதலால், உணவில் வண்ணம் தீட்டும் வணிகம், ஒரு வருடத்துக்குக் கிட்டத்தட்ட 2,200 மில்லியன் டாலருக்கு நடக்கிறது!

ஹோட்டலில் செக்கச்செவேலென இருக்கும் தந்தூரி சிக்கனையும் சில்லி சிக்கனையும் சாப்பிட்டுவிட்டு கையை, சமையல் பாத்திரம் கழுவுவதுபோல் எலுமிச்சைச் சாறு, சோப்புத் தண்ணீர் எல்லாம் விட்டுக் கழுவிய பின்னரும் கையில் இளஞ்சிவப்பாக ஒட்டியிருப்பது, கோழியில் இருந்தோ, குழம்பில் போட்ட மிளகாய் வற்றலில் இருந்தோ வந்தது கிடையாது. உங்கள் கண்களைக் கவர அதில் தூவிய 'ரெட் டை 40’ எனும் 'ஆசோ டை’யின் எச்சமாக இருக்கலாம்.  
                                                     

பெட்ரோலில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இந்த ரசாயன நிறமி வகைகள்தாம் பஞ்சு மிட்டாய், கேசரி, தந்தூரி சிக்கன்களிலும் பெருவாரியாகச் சேர்க்கப்படுகின்றன. சிக்கனும், பஞ்சுமிட்டாயும், கேசரியும் ரத்தச் சிவப்பாக இருந்தால்தான் பிடிக்கும் என்றால், ஒருவேளை ரத்தம் வற்றும் புற்றுநோயும் கூடவே வரலாம் என்கிறது இன்றைய ஆய்வுகள்

பல நாடுகள் அந்த நிறமிகளைத் தடையும் செய்திருக்கின்றன. இப்படிச் செயற்கையாக இல்லாமல், எத்தனை நிறங்கள் இயற்கை உணவில் இருக்கின்றன என உற்றுப்பார்த்தால் ஆச்சரியம்!

தாவரம் தன் வளர்சிதை மாற்றத்தில் சேமித்துவைக்கும் பொருள்தாம் இந்தத் தாவர நிறமிகள். 'பாலிபீனால்கள் குழுமம்’ என்று தாவரவியலாளரால் அழைக்கப்படும் சத்துகளில்தான், இந்த நிறமிகளைத் தரும் சத்துகள் அனைத்தும் அடங்கும். இவை, தாவரம் தன்னை அல்ட்ரா வயலெட் கதிர்களில் இருந்தும், அழிச்சாட்டியம் செய்யும் சில கிருமிகளில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ள உருவாக்கிக்கொண்டவை. 


மனிதன் அதனைச் சாப்பிடும்போது, அதையும் தாண்டி, சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு முதலான தொற்றா நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் தாக்காதபடி உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் தருவதில் பெரும் பயன் தருகிறது!

'ஓ... அப்போ இந்த பாலிபீனால் மாத்திரை எங்கே கிடைக்கும்?’ என்று உடனே இணையத்தில் தேட வேண்டாம்.

பால் சேர்க்காத ஒரு கப் தேநீரில் (100-150 மி.கி.) எளிதில் கிடைக்கும். க்ரீன் டீயில் இந்தச் சத்து கூடுதல். 100 கிராம் கறுப்புப் பன்னீர் திராட்சையோ, கருநீல நாவல் பழமோ, சிவந்த ஆப்பிளோ, பப்பாளியோ, மாதுளையோ, உங்களுக்கு (200-300 மி.கி.) பாலிபீனாலைத் தரக்கூடும். இந்தப் பழங்கள் மிகவும் கனிவதற்கு முன்பு, கொஞ்சம் இளங்காயாக இருந்தால் பீனாலிக் அமிலங்கள் சற்று அதிக அளவில் கிடைக்கும். அதிகம் பழுத்திடாத இளங்கொய்யாவை சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதும், 'வாழை இளம் பிஞ்சொழிய கனியருந்தல் செய்யோம்!’ என, சித்த மருத்துவ நோயணுகா விதி பாடியதும் இதனால்தான்.

அதே சமயம் ஆன்தோசயனின் எனும் நிறமிச் சத்துகளோ, நன்கு பழுக்கும்போது பழத்தோலில் உருவாகிறது. ஆதலால் மாதுளை, பப்பாளி, தக்காளி, மாம்பழம் ஆகியவற்றை நன்கு கனிந்த பின்னர் சாப்பிடுவது சிறந்தது. வெறும் வயிற்றில் வேறு உணவு இல்லாத வேளையில் பழங்கள் உள்ளே சென்றால்தான் மருத்துவப் பயன்தரும் அதன் நிறமிச்சத்துகள் முழுமையாக உட்கிரகிக்கப்படும். டெசர்ட் என்ற பெயரில் பழத்தை கடைசி பெஞ்சில் உட்காரவைப்பது முட்டாள்தனம்!

அதே சமயம் இந்த பாலினால்களை சமைப்பதில், சேமிப்பதில் கவனம் இல்லாவிட்டால் அதன் பயனை இழக்கக்கூடும். சிறிய வெங்காயம், தக்காளி, முள்ளங்கி, ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா எனும் புளிச்சகீரை ஆகிய காய்கறிகளிலும், சதகுப்பை முதலான பல மூலிகைகளிலும் உள்ள 'குயிர்செட்டின்’ எனும் சத்துதான், நம் ரத்த நாளத்தில் கொழுப்புப் படியாமல் இருக்க உதவும் முக்கியமான பாலிபீனால் சத்து. ஆனால், வெங்காயத்தையும் தக்காளியையும் சமைக்காமல் சாலட் ஆக சாப்பிடும்போதுதான் முழுப் பயன் கிடைக்கும். வெங்காயத்தை வேக வைக்கும்போது 80 சதவிகிதமும், வறுக்கும்போது 30 சதவிகிதமும் பாலிபீனால்கள் காணாமல்போகும். 

கூடவே இந்த பாலிபீனால்கள் உடலில் உட்கிரகிக்கப்பட, நம் சிறுகுடல், பெருங்குடல் பகுதியில் லோக்டோபேசிலஸ் முதலான புரோபயாடிக்ஸ் இருப்பது நல்லதாம். அது இயல்பாகக் கிடைப்பது மோரில் மட்டுமே. ஆக, சின்ன வெங்காயத்தின் பயன் முழுமையாக வேண்டுமானால், வெங்காயத் தயிர் பச்சடியோ, வெங்காயம் தொட்டுக்கொண்டு மோர் சோறாகவோ, மோர் சேர்த்த கம்பங்கூழாகவோ சாப்பிடுவது சாலச் சிறந்தது.

வெங்காய பக்கோடா, சுவை தரலாம்; ஆனால் சுகம் தராது. அதேபோல் வெங்காயத்தின் வெளி வட்டத்தில்தான் அந்தச் சத்து அதிகம். சுத்தம் பார்க்கிறேன் பேர்வழி என வெளிப்பக்கம் பூராவும் உரித்து உரித்து, உள்ளே உள்ள வெள்ளை வெங்காயத்தை மட்டும் சாப்பிடுவது புத்திசாலித்தனம் அல்ல.

இப்படி இயற்கையாக நிறமும் கொடுத்து, உடலுக்கு உரமும் தரும் பொருள்கள் ஏராளமாக இருக்கும்போது, 'முந்தானைப் பக்கம் சிவப்பு கலர் பார்டரும், கொசுவத்தில் லைட் ஷேடும் வர்ற மாதிரி கொடுங்க’ என்று கேட்பதுபோல, நாம் சாப்பிடும் கேக்கில் மூணு அடுக்கு வண்ணம், பிஸ்கட் பார்டர் ஒரு வண்ணம், உள்ளே க்ரீம் இரண்டு வண்ணம், குளிர்பானத்தில் புது வண்ணம் எனச் சாப்பிடுவது, கொஞ்சமாக பெட்ரோலும் தாரும் குடிப்பதற்குச் சமம்.

Wednesday, February 26, 2014

ஆற்றில் நீந்தி தினமும் பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளியில்(Muslim Lower Primary School at Padinjattumuri ) பணியாற்றும் அப்துல் மாலிக் (40) என்ற ஆசிரியர், தினமும் காலை 9 மணிக்கு தனது உடமைகளை பாலிதீன் கவரில் போட்டு எடுத்துக் கொண்டு, காற்று நிரப்பப்பட் டயர் ட்யூப்பை நெஞ்சுப் பகுதியில் போட்டுக் கொண்டு ஆற்றில் இறங்குகிறார். சுமார் 15 நிமிடம் நீந்தி மறு கரையை அடைந்து, உடைகளை அணிந்து கொண்டு பள்ளிக்குச் செல்கிறார். மீண்டும் மாலையில் இதே முறையில் வீட்டுக்கு திரும்புகிறார்.

இது பற்றி அவரிடம் கேட்டால், எனது வீட்டில் இருந்து பள்ளிக்கு இந்த ஆற்றை சுற்றிக் கொண்டு செல்ல 12 கி.மீ. தூரம் உள்ளது. அந்த தூரத்தை நான் பேருந்தில் சென்றால் ஒன்றறை மணி நேரம் ஆகும் உரிய நேரத்துக்கு பள்ளிக்குச் செல்ல இயலாது. எனவே தான் இந்த வழியை கண்டுபிடித்தேன் என்கிறார் சிரித்துக் கொண்டே.

சுமார் 20 ஆண்டுகளாக இந்த முறையில்தான் இவர் பள்ளிக்குச் சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஆசிரியரின் சிரமத்திற்கு விடை தரும் வகையில், லண்டனை சேர்ந்த டாக்டர் ஒருவர் படகு ஒன்றை பரிசளிக்க முன்வந்துள்ளார்.

இந்த செய்தியை, ஊடகங்கள் வாயிலாக, லண்டன் டாக்டர் மன்சூர் ஆலம் என்பவர் கேள்விப்பட்டார். தொடர்ந்து இணையதளம் வாயிலாக, இப்பள்ளியை தொடர்பு கொண்டார்.

இந்நிலையில், திடீரென இந்தியா வந்த டாக்டர் மன்சூர் ஆலம்,70, நேற்று முன்தினம் குறிப்பிட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள்,மற்றும் மாணவர்களுடனும் உரையாடினார். தொடர்ந்து ஆசிரியர் மாலிக் தினமும் இரண்டு முறை நீந்தி கடக்கும் ஆற்றை பார்த்தார். ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பைபர் படகை வாங்கி பரிசளிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பள்ளியில் கூடுதல் வகுப்பறையும் அமைத்து தருவதாகவும், கம்ப்யூட்டர்கள் வாங்கித்தருவதாகவும் அவர் உறுதி கூறியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து இவர் 40 ஆண்டுகளுக்கு முன் லண்டனுக்கு சென்றுள்ளன மன்சூர் ஆலம், அங்கு 'மென்டல் ஹெல்த்தில்' டாக்டர் பட்டம் பெற்று, அங்கேயே பணியாற்றி வருகிறார். 'படகு கிடைத்தால் தனது தினசரி சிரமத்திற்கு முடிவு கிடைக்கும், மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்பு எடுக்க முடியும்', என, மாலிக் தெரிவித்துள்ளார்.

Thursday, January 30, 2014

TAMIL BAYAN ameer chennai உலகம் ஒரு சோதனைக் கூடம்

a
இறை அருள் நம் அனைவர் மீதும் உண்டாகட்டும்

சகோதரர்.அமீர் அவர்கள் உலகம் ஒரு சோதனைக் கூடம் என்ற தலைப்பில் 132 ஹதிஸ்களை ஒருங்கினைத்து உரையாற்றி உள்ளார்.
மனிதர்களுக்கு ஏற்படும் சிரமம்,கவலை,துக்கம்,இழப்பு,நஷ்டம் ஆகிய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது என  குர் ஆன்,ஹதிஸ்களை அழகாக ஒருங்கிணைத்துள்ளார்...
அல்ஹம்துலில்லாஹ்

Monday, December 2, 2013

சமூக சேவை செய்ய ஆர்வமூட்டும் இஸ்லாம்

 இஸ்லாம் என்பது வணக்கமுறைகளை மட்டும் சொல்லிக்காட்டும் மார்க்கம் மட்டும் அல்ல...சக படைப்பினங்களுக்கு நன்மையை நாட சொல்லி ஆர்வமூட்டும் ஒரே மார்க்கம்....இஸ்லாம் மட்டுமே....
அவைகளில் சில.........        

                      பாதைகளை சுத்தமாக்குதல்,சாலைகளை சீராக்குதல்


                                                   சாலையின் ஓரங்களில் மரம் நடுதல்,
                                             

                                      தண்ணீர் கிடைக்கும் வகையில் குளம் வெட்டுதல்,
இலவச குடிநீர் வினியோகம்
 
                                        மக்களிடையே சமாதானம் செய்தல்,
                                           ஒற்றுமையே ஏற்படுத்துதல்

                                              
                                         பயணிகள் ஓய்வெடுக்கும் நிழல் குடை....
                                        
                                                 
                                            படைப்பினங்களுடன் பரிவுடன் நடந்துகொள்ளுதல்
                                                         
                               
                                   இலவசமாக கல்வியை போதித்தல்,கல்விக்கு உதவி செய்தல்
                                                                                                                                                                                                  சக படைப்பினங்களுக்கு உதவி செய்வதின் மூலமாக                                                   இறைவனுடைய அன்பும்,கருணையும்,நன்மையும் கிடைக்கும்....
                                  நாமும் செய்வோம் சமூக சேவை....