Sunday, August 25, 2013

செயல் வீரர்கள்!

ஏற்றுக்கொண்ட பதவியில் எதிர்வருகிற எத்தனையோ சவால்களை துணிச்சலாக எதிர்கொண்டு, போற்றப்படும் விதத்தில் செயல்பட்டு வருவது சாதாரண விஷயமல்ல. ஆனால் அது சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார், மதுரை மாவட்டம் திரளி ஊராட்சி மன்றத் தலைவி சந்திரா.
                   
அப்படி என்ன செய்துவிட்டார் சந்திரா?
கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் எந்த அரசியல் கட்சியையும் சாராமல், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட பல வரிகளை 100 சதவிகிதம் அரசுக்குச் செலுத்தும் முன்மாதிரி கிராமமாக மாற்றினார்.
ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியிருந்த 50 ஏக்கர் அரசு நிலத்தை துணிச்சலாக மீட்டு, மக்களுக்கும் பஞ்சாயத்துக்கும் வருவாய் வரும்படியாக செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்.
அரசின், ‘பெண்கள் சுகாதாரத் திட்டம்’ என்ற திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி, மதுரை மாவட்டத்திலேயே சிறந்த சுகாதாரக் கிராமம் என்ற பாராட்டைப் பெற்றிருக்கிறார்.

இவை மட்டுமல்ல, சந்திராவின் சாதனைப் பட்டியல் இன்னமும் நீள்கிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ளது திரளி ஊராட்சி. அங்கு நேரில் சென்றபோது,

‘இந்த அலுவலகம் மக்களுக்காக 24 மணிநேரமும் செயல்படும்’ என்று பஞ்சாயத்து சுவர்களில் எழுதப்பட்டிருந்தது. ஆச்சரியப்பட்ட நம்மை புன்னகையோடு வரவேற்ற சந்திரா, தனது வெற்றிப்பயணத்தை விவரிக்கிறார்:

அச்சம்பட்டி, பச்சக்கோப்பன்பட்டி, காட்ராம்பட்டி, சுந்தரராஜபுரம் புதூர், திரளி இந்த 5 கிராமங்களையும் உள்ளடக்கிய, எங்க திரளி பஞ்சயாத்துல 2,500-க்கும் மேற்பட்ட குடும்பங்க குடியிருக்கோம். நான் 10 -ஆவது வரைக்கும் படிச்சிருக்கேன். எங்க வீட்டுக்காரர் பிச்சை, முன்னாள் ராணுவ வீரர். அவரு நாட்டுக்காக உழைச்சவர்ங்கறதால சமூகப் பிரச்சினைகள் மீதான ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் எனக்குள் உண்டாக்கியது. படிக்காத முதியோர்களுக்கும் படிக்கற பிள்ளைகளுக்கும் இலவசமா தினமும் நைட்ல டியூஷன் சொல்லித் தந்தேன். இதுமட்டுமில்லாம உதவித்தொகை, ஜாதிச் சான்றிதழ், வருமானவரிச் சான்றிதழ் வாங்கித் தர்றதுன்னு யாருக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் தயங்காம எழுதித் தந்து அரசு அலுவலகங்கள் வரைக்கும் கூடவே போய் வாங்கித் தருவேன்.

இப்படி நான் உதவி செஞ்சதைப் பார்த்த கிராமவாசிங்க என்னை வந்து சந்திச்சு, ‘அடிப்படை வசதி கூட இல்லாம ஊர் சீரழிஞ்சு கிடக்குது. இதுக்கு முன்னாடியிருந்த ஊராட்சி மன்றத் தலைவருங்க எங்களுக்குன்னு எந்த நல்லதும் செய்யல. நீங்க தலைவரா வந்தா, இந்தப் பஞ்சாயத்துக்கே விடிவு காலம் பிறக்கும். வர்ற 2011-ஆம் ஆண்டு ஊராட்சிமன்றத் தேர்தல்ல போட்டியிடுங்க, நாங்க உறுதுணையா இருக்கோம்’னு என் கையப் பிடிச்சு கேட்டாங்க. அவங்க அன்புக்கு முன்னாடி என்னால மறுப்பு சொல்ல முடியாததால ஒத்துக்கிட்டேன். 1949-ஆம் ஆண்டுல இருந்து எங்க ஊர்ல பஞ்சாயத்துத் தேர்தல் நடந்திட்டிருக்கு. இதுவரைக்கும் ஊராட்சி மன்றத் தலைவரா இருந்தவங்கல்லாம் கட்சி சார்ந்தே போட்டியிட்டிருக்காங்க. கட்சி சார்பாக போட்டியிட எனக்கு விருப்பமில்லை. சுயேச்சையா நின்னு வெற்றி பெறணும்னு முடிவெடுத்து, நம்பிக்கையோட வேட்புமனு தாக்கல் செஞ்சேன். கடுமையான போட்டிக்கிடையே வெற்றி பெற்றேன். ஜெயிச்சதுக்கப்புறம் பல கட்சிக்காரங்க என்னை, அவங்க கட்சியில சேர்ந்து ஊராட்சி மன்றத் தலைவரா செயல்படச் சொன்னாங்க. எதையும் காதுல வாங்காம இருந்தேன்.

ஊராட்சிமன்றத் தலைவரானதும் நான் செஞ்ச முதல் வேலை இத்தனை வருஷமா மூடியே கிடந்த, எங்க பஞ்சாயத்து அலுவலகத்தைத் திறந்து, ‘இந்த அலுவலகம் உங்களுக்காக 24 மணிநேரமும் செயல்படும்’னு சுவர் முழுக்க எழுதி, என்னை நம்பி ஓட்டுப் போட்ட மக்களுக்கும், பல நலத் திட்டங்கள் வழங்கிவரும் அரசிற்கும் உண்மையா உழைக்கணும்னு உறுதியோட செயல்பட ஆரம்பிச்சேன். எங்க ஊரு கிராமப் பகுதிங்கறதால சரியான வேலைவாய்ப்பு கிடையாது. மக்களுக்கு ஏதாவது வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரணும்னு தீவிரமா யோசிச்சேன். அந்தச் சமயத்துலதான் ஊர்க்காரங்க சிலர், அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிச்சிருக்கறதா தகவல் வந்தது. பஞ்சாயத்தோட மேப் எடுத்துப் பார்த்தப்போ, 50 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிச்சிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனோம்.

புறம்போக்கு நிலத்துல வீடு கட்டி, விவசாயமும் செய்ததோட, ஒருத்தரு ஒரு ஏரியையே விவசாய நிலமா மாத்தி வச்சிருந்தாரு. இவர்களிடமிருந்து அரசு நிலத்தைக் கைப்பற்றி, கிராமத்துக்கு உபயோகமா பயன்படுத்த தீர்மானம் போட்டோம். நிலத்தை மீட்க, திருமங்கலம் பிடிஓ அலுவலகத்திடமும் அனுமதி வாங்கி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு மாசத்துக்குள்ள நிலத்தை ஒப்படைக்க டைம் கொடுத்தேன். இந்த நடவடிக்கையால மதுரையில் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களிடமிருந்து எனக்கு நிறைய மிரட்டல்கள் வந்துச்சு. எதுக்கும் பின் வாங்காம உறுதியா இருந்தேன்.

சொன்னபடியே குறிப்பிட்ட தேதியில அரசு அதிகாரிகள் மற்றும் 20 போலீஸ்காரர்கள் துணையுடன் புறம்போக்கில் கட்டியிருந்த வீடுகளை பொக்லைன் மூலம் அகற்றி, விவசாயம் செய்திருந்த 50 ஏக்கர் நிலத்தை மீட்டு, பஞ்சாயத்துக் கட்டுப்பாட்டிலேயே கொண்டுவந்தேன். அதில் 4 ஏக்கர்ல மழை நீரை சேமிக்க குளமும், 2 ஏக்கர்ல ஊராட்சிக்கு வருவாய் வர பண்ணைக்குட்டையும் மீன்குட்டையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கேன்.அதுமட்டுமில்லாம, எங்க பஞ்சாயத்தைச் சேர்ந்த காட்ராம்பட்டி கிராமத்துக்குப் போக 7 கிலோமீட்டர் சுத்தித்தான் போகணும். இவ்ளோ தொலைவைக் குறைக்க, நான் மீட்ட நிலத்துலயிருந்து ஒண்ணரை கிலோமீட்டருக்கு புதுசா சாலை அமைச்சுக் கொடுத்திருக்கேன்.

கிராம சபை மூலமா பிரச்சினைகளை நேரடியா விவாதிக்கறதோட, வருஷந்தோறும் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையா கட்டணும்னு மக்களுக்கு விழிப்புணர்வையும் உண்டாக்கினேன். அதோட பலன்தான் கடந்த ரெண்டு வருஷமா மதுரை மாவட்டத்துல எங்க ஊரு 100 சதவிகித வரி செலுத்தும் கிராமம் என்று அதிகாரிகளோட பாராட்டுக்களைப் பெற்றிருக்கு. நான் செயல்படுத்திய பல திட்டங்கள் மூலமா பஞ்சாயத்துக்கு வருஷத்துக்கு 10 லட்சம் ரூபாய் வருமானம் வருது. அந்தப் பணத்தைக்கொண்டு ஊரின் அடிப்படைத் தேவைகளை நிறைவேத்திக்கிட்டிருக்கேன்" என்று விரிவாகப் பேசி முடித்தார் சந்திரா.

பெண்கள் கழிவறைக்கான அரசின், ‘பெண்கள் சுகாதாரத் திட்டம்’ என்ற திட்டம் திரளியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருப்பதற்காக அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம், மாவட்டத்திலேயே சிறந்த சுகாதார வளாகம் திரளி என்று பாராட்டியிருக்கிறார். மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவிடமிருந்து 2013-ஆம் ஆண்டிற்கான சிறந்த மகளிர் விருதையும் பெற்றிருக்கிறார் சந்திரா.

மக்களின் பார்வையில்...

ராமுத்தாய்:

இதுவரைக்கும் கிராம சபை கூட்டம்னா எங்களுக்கு என்னன்னே தெரியாது. சந்திராம்மா மாசம் தவறாம கிராம சபையில எல்லாரையும் ஒண்ணாக் கூட்டி, பஞ்சாயத்தின் ஒவ்வொரு திட்டத்தோட வரவுச் செலவுக் கணக்கை எங்ககிட்ட நேரடியா சொல்றது மட்டுமில்லாம, பஞ்சாயத்துக்கு எவ்ளோ நிதி வந்திருக்குன்னு எல்லோருக்கும் நோட்டீஸ் அடிச்சு, கைல கொடுத்துடுவாங்க. மேலும் ஊருக்கு என்னென்ன தேவைகள் இருக்குன்னு கருத்துக் கேட்டு குறைகளை உடனுக்குடனேயே நிவர்த்தியும் பண்ணிக் கொடுக்கறாங்க."
ஜெயந்தி:

திரளி கிராமப்புறம்ங்கறதால எல்லா வீடுகள்லயும் டாய்லெட் கிடையாது. கழிவறை இல்லாததால பெண்களும், இளவயசுப் பிள்ளைகளும் சொல்ல முடியாத பல கஷ்டங்களுக்கு ஆளாகி வந்தோம். சந்திராம்மா, நாங்க படுற கஷ்டத்தைப் புரிஞ்சிக்கிட்டு 8 லட்சம் ரூபாய் செலவுல பெண்கள் சுகாதாரத் திட்டக் கழிவறையும், குளியலறையும் கட்டி விட்டிருக்காங்க. மேலும் 3 மாசத்துக்கு ஒருமுறை உடல் ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வு முகாம்களையும் நடத்துறாங்க."

பூ. சர்பனா

Monday, August 19, 2013

முகநூலை இப்படியும் பயன்படுத்தலாம்


மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கும், நகராட்சி எடுக்கும் முடிவுகளில் மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அறிவதற்கும் முகநூலை ஓர் கருவியாகப் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து வருகிறார், அதிமுகவைச் சேர்ந்த தேவகோட்டை நகராட்சித் தலைவர் சுமித்ரா ரவிக்குமார்.

இவர் எப்படியெல்லாம் முகநூலைப் பயன்படுத்துகிறார்?
                           



              
தேவகோட்டை தினசரி மார்க்கெட்டின் பின்புறமாக, புதிதாக பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட் கட்டுவதற்கு நகராட்சி முடிவு செய்தது. அதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே, புதிய மார்க்கெட் அமைப்பது குறித்து மக்களின் கருத்துக்களை முகநூல் மூலமாகக் கேட்கிறார் நகராட்சித் தலைவர். தண்ணீர் சிக்கனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, பொதுசுகாதாரம் போன்றவை தொடர்பான தகவல்களை முகநூலில் பகிர்ந்துள்ளார். பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வுத் தகவல்களையும், பிளாஸ்டிக் ஒழிப்புக்கான நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்த செய்திகளையும் பகிர்ந்துள்ளார்.

பொது சுகாதாரம் உட்பட நகராட்சி தொடர்புடைய பிரச்சினைகளை உட்கார்ந்த இடத்தில் இருந்தே நகராட்சித் தலைவருக்குப் புகார் அளிக்க முடிகிறது. அந்தப் புகார் மீது நகராட்சித் தலைவர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தேவகோட்டை தியாகிகள் சாலையில் ஓர் இடத்தில் மணல் மற்றும் கற்கள் கொட்டப்பட்டுக் கிடந்தன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது மட்டுமல்லாமல், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பலர், இடறி விழும் அபாயமும் இருந்தது. இது பற்றி நகராட்சித் தலைவரின் முகநூலில் காலை 7 மணி அளவில் புகார் செய்தேன். அதற்கு, 9.30 மணிக்கு நகராட்சித் தலைவர் பதில் அளித்திருந்தார். ‘உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளிக்கிழமைக்குள் அங்கிருந்து மணல் மற்றும் கற்கள் அகற்றப்படும்’ என்று தலைவர் கூறியிருந்தார். உடனடியாக அவர் பதிலளித்தது எனக்கு மன நிறைவை அளித்தது.சொன்னபடியே நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அலைந்து திரியாமல், அலைக்கழிக்கப்படாமல் என் கோரிக்கை நிறைவேறிவிட்டது" என்கிறார், தேவகோட்டையைச் சேர்ந்த மோகன்குமார்.

பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் புகார்களை முகநூலில் பதிவு செய்துவருகின்றனர். முகநூலில் மட்டுமின்றி, செல்பேசி எண்களைத் தொடர்பு கொண்டும் பொதுமக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். குடிநீர், தெருவிளக்கு, குப்பைகள் என ஒவ்வொரு புகாருக்குமான தனித்தனி செல்பேசி எண்கள் முகநூலில் தரப்பட்டுள்ளன (Chairman of Devakottai என்ற பெயரில் கணக்கு உள்ளது).



இதற்குமுன் நான் முகநூலை அதிகமாகப் பயன்படுத்தியது இல்லை. ஆனால், அதன் பயன்பாடுகள் குறித்து நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே, நகராட்சி தொடர்புடைய செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கும், அவர்களின் குறைகளைக் கேட்டறிவதற்கும் முகநூலைப் பயன்படுத்தலாம் என்ற யோசனை வந்தது. கடந்த டிசம்பர் 25 அன்று முகநூல் கணக்கைத் தொடங்கினேன். இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது" என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார், சுமித்ரா ரவிக்குமார்.

-ஆ.பழனியப்பன்

Sunday, August 18, 2013

நுகர்வோர் வெறி.....

சில பல வருடங்களுக்கு முன்பு வரை வீட்டிற்கு மாதா மாதம் தேவையான பொருட்களை ஒரு பேப்பரில் எழுதி கடைக்கு சென்று நமக்கு தேவையான
பொருட்களை மட்டும் வாங்கும் பழக்கம் நம்மிடம் இருந்தது.....

நம்முடைய அம்மாக்களிடம் இருந்த சிக்கனம்,
அவசியம் இருந்தால் மட்டுமே வாங்கும்  நல்ல பழக்கங்களை எல்லாம்
நம்மிடம் தேடி கண்டுபிடிக்க வேண்டியதாக உள்ளது....

நம் வீடுகளில் பல வருடங்களுக்கு முன் 2 சேர் இருக்கும்....
ஒரு பீரோ இருக்கும்....கட்டில் இருக்கும்....
வீட்டுக்கு தேவையான பொருள் மட்டுமே நம் வருமானத்திற்கு
தக்கபடிவாங்கும் பழக்கமும் நம் பெற்றோரிடம் இருந்தது.....

கடந்த 10 ஆண்டுகளில் டிவிக்களில் விளம்பரங்கள் மூலம் எதையெல்லாம்
பார்க்கிறோமோ அதை கண்டிப்பாக வாங்கியே ஆகவேண்டும் என்ற வெறி
நமக்கு தூண்டப்படுகிறது...

சாதாரணமான வெறி எல்லாம் அல்ல அது.....
திட்டமிட்டு பரப்பட்ட மூளைச்சலவை அது....

பக்கத்து வீட்டில் புதிதாய் சேலையில் இருந்து பர்னிச்சர் வரை எது வாங்கினாலும் அதை வாங்கியே ஆக வேண்டும் என குடும்ப பெண்களின் எண்ண ஓட்டம்....

உடன் படிக்கும் மாணவன் விலை உயர்ந்த செல்போனோ அல்லது புதிதாக வந்த ஐபாட்,ஐபேட் என லொட்டு லொசுக்கு சாமான் எதுவாக இருந்தாலும் அது தனக்கு தேவைப்படவில்லையென்றாலும் தனக்கு அந்த அளவுக்கு பொருளாதார வசதி இல்லையென்றாலும் கடன் வாங்கியாவது அதுவும் இல்லையென்றால் திருடியாவது அப்பொருளை அடைய வேண்டும் என்ற எண்ணம் இளம்வயதினரிடையே அதிகரித்துள்ளது....

சிலருக்கு எந்த பொருளைப்பார்த்தாலும்
அது தனக்கு தேவையோ இல்லையோ வாங்கியே ஆகவேண்டும்...
அதைப்போன்ற ஒரு பொருள் வீட்டில் இருந்தாலும் வீடு முழுதும்
நிரப்பி வைக்கும் பழக்கம் இருக்கும்...
சில வீடுகளில் எங்கு பார்த்தாலும் பர்னிச்சர் அயிட்டங்களாக வைத்து இருப்பர்....இதுவும் ஒருவகை என மனநோய் உளவியல் அறிஞர்கள்கூறுகின்றனர்......

விழாக்கள்,பண்டிகைகள் என்ற பெயரில்
விழாக்கால சலுகை,10%முதல் 50%வரை தள்ளுபடி....

ஒரு வாங்கினால் ஒரு பொருள் இலவசம் என்ற காலம் எல்லாம்
மலையேறி இரண்டு பொருள்,மூன்று பொருள் இலவசம் கொடுக்கும்
காலத்தில் இருக்கிறோம்....

எதையெடுத்தாலும் 30 ருபாய் என்று எங்கெங்கு காணினும்
தேவையற்றபொருளை விற்க வியாபார தந்திரங்கள்.
பெருகி உள்ள சாப்பிங் மால்கள் நம்மை தேவைக்கு அதிகமானதை,
ஆடம்பரமான,தேவையற்ற பொருளை வாங்க தூண்டுகின்றன.

ஒரு விசயத்தை திரும்ப திரும்ப கூறுவதன் மூலம் அது தவறாக
இருந்தாலும் மனித மூளை ஏற்றுக்கொள்ளகூடிய நிலை ஏற்படுகிறது.
அதுபோலவே நாம் காணும் விளம்பரங்கள் இச்சலுகை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே என்று கூவி கூவி அழைத்து கடன் வாங்கியாவது அல்லது தவணை
முறையிலாவது வாங்கியாக வேண்டிய வெறியை ஏற்படுத்துகிறது...

இலவசமாக பொருளைக் கொடுப்பவரோ அப்பொருளை சும்மா ஒன்றும் கொடுப்பதில்லை...அதன் விலையையும் நம் தலையில் சேர்த்து வைத்தே மிளகாய் அரைக்கிறார்......

இந்த இலவச வெறி....
வியாபாரம் செய்வோரிடம் இருந்து அப்படியே
நாட்டை ஆள்வோரிடம் வந்ததுதான் வினையே.....
வியாபாரியாவது மக்கள் கூட்டம் அலைமோததான் அப்படி பண்ணினார் என்றால் இந்த அரசியல் பண்ணுறவங்க எதுக்கு இலவசம் கொடுக்கிறாங்கனு நம்ம மக்கள் யோசிச்சாங்களா??இல்லை....

கண்டிப்பாக இலவசமாக கொடுக்கப்படும் பொருள் தரமாக இருக்காது,
நீடித்து உழைக்காது என்று தெரிந்தும் வாங்குபவர்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை.
                               
சில பெண்களுக்கு கடைகளில் ஏதாவது பிளாஸ்டிக் பொருட்களைப் பார்த்தால் ஆசை வந்துவிடும்....உடனே வாங்கி வீடெல்லாம் நிரப்பிவிடுவர்...
இது பர்ஸுக்கு ஆபத்து....மனதுக்கும் ஆபத்து என்று உணர்ந்து இப்பழக்கத்தை விட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Saturday, August 17, 2013

பேசும் படம்

                                                                                                                                                                                         
                                                                             
 












 

பகுத்தறிவு இல்லாத ஆடு மாடு பன்றி கூட தனக்கு தீங்கு தருபவற்றை பயன்படுத்தாது....???

ஆனால்,சிந்திக்கும் திறன் உடைய மனிதன் தன் கைகளாலேயே

தனக்கு தீங்கை தேடிக்கொள்கிறான்

Monday, August 12, 2013

இவரை தெரியுமா???

இவரை தெரியுமா????

பெற்ற தந்தை எதிரி..ஊர் மக்கள் கொலை செய்யத்துணிந்தார்கள்....
தன்னந்தனியாக தனித்து விடப்பட்ட வாழ்க்கை....
மனைவியையும்,பிள்ளையும் பிரிந்து மீண்டும் தனிமை வாழ்க்கை

பெற்ற பிள்ளையைக் கொண்டும் சோதனை....
இவரை விடவா நீங்கள் சோதிக்கப்பட்டீர்கள்.






இவரையும் தெரிந்துகொள்ளுங்கள்....

பெற்ற தந்தையை பார்த்ததுமில்லை... விவரம் அறியா வயதில் தாயின் இழப்பு.. தாய்,தந்தையின் அரவனைப்பு இல்லாததை விட கொடுமை இவ்வுலகில் உண்டா

சிறு வயதிலேயே ஆடு மேய்த்து தன் உறவினர் வீட்டில் வளர்ந்தவர்...
தன் இருமகள்கள் ஒரே நேரத்தில் விவாகரத்து செய்யப்பட்டதையும் தாங்கிக்கொண்ட அஞ்சா நெஞ்சர்

தன் ஆறு பிள்ளைகளில் ஐந்து பிள்ளைகள் தன் கண் முன்னே இறக்கக் கண்டவர்சொந்த வாழ்க்கையில் ஆயிரம் சோதனைகளைக்கண்டாலும் மக்களுக்காக உழைத்த,மக்களின் உள்ளங்களில் வாழும் ஒரே தலைவர்.

முன்னவர் இறைத்தூதர் இப்ராஹீம் பின்னவர் இறைத்தூதர் முஹம்மது இவ்விருவரும் சமூகத்தை சீர்திருத்த அனுப்பப்பட்ட சீர்திருத்தவாதிகள்.

இவ்விருவரின் புகைப்படமோ,விடியோக்களோ இல்லாத நிலையிலும் மக்களால் பின்பற்றக்கூடிய மனிதருள் சிறந்தவர்கள்.

இறைத் தூதர்களும் சோதனைக்கு அப்பார்ப்பட்டவர்கள் இல்லை என்பதை அவர்களுடைய வாழ்க்கையே நமக்கு உணர்த்தும் மிகச்சிறந்த பாடமாகும்.

Thursday, August 8, 2013

அர்த்தமுள்ள பெருநாள்....

இறைவனின் அமைதியும் அருளும் நம் அனைவர் மீதும் உண்டாகட்டும்....

பல ரமலான் களையும்,பெருநாட்களையும் சந்தோசத்துடன் கடந்த நாம் அவையெல்லாம் நம்மை எந்த அளவு சீர்திருத்தியுள்ளது என சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம் இது....


நேற்றுவரை பஜ்ரை நேரத்துடன் தொழுதோம்...இன்று....???நாளை....???

நேற்றுவரை குர் ஆனை ஆர்வத்துடன் ஓதினோம்....இன்று....????நாளை....???

நேற்றுவரை வீண் பேச்சுகள்,பொய்,புறம்,கோள்,சண்டையிடுவதை தவிர்த்தோம்...நான் நோன்பாளி என்று எம்மை தடுத்துக்கொண்டொம்....
இன்று ....? நாளை...?

சிகரெட் பிடிப்பதை ரமலானில் தடுத்துக்கொண்ட உள்ளங்கள் இன்றும் நாளையும் ஊதித்தள்ளினால் நோன்பினால் என்ன பயன்....???

நேற்றுவரை தான தர்மங்களை அதிகமாக்கினோம்.....
இன்று....???
நாளை.....???

நேற்றுவரை சினிமாப்பாடல்களை பார்ப்பதை,கேட்பதை தவிர்த்தோம்...
இன்று ....???
நாளை....???

இத்தகைய காரியங்களை இனிமேல் செய்யாமல் இருப்போம்....
இன்றும் நாளையும் பள்ளிக்கு சென்று தொழ வேண்டும் என உறுதி எடுப்போம்

பெருநாள் என்பது புத்தாடை உடுத்தி,பிரியாணி சாப்பிடும் சடங்கு அல்ல...
நம்முடைய தவறுகளை சரிப்படுத்தி,அமல்களை சீராக்கி புத்தம் புது மனிதனாக ஆக்கும் அர்த்தமுள்ள நாள் ஆகும் ...


நான் சந்தித்த என்னுடைய இப்பெருநாள் அர்த்தமுள்ள நாளா....???!!!
                 

சிந்திப்போம்...செயல்படுவோம்...!!!!