Monday, December 31, 2012

மதுரை ஆதினம் சொன்னதில் என்ன தப்பு இருக்கு???

மதுரை: தமிழகப் பெண்கள் ஆபாச உடை அணிவதாகவும் அனைவரும் பர்தா அணிந்து கொள்ள வேண்டும் என்றும் தாம் பேசியது சரியே என்றும் பெண்கள் அமைப்பிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்றும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். அருணகிரிநாதரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரை ஆதீனம் மடம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

அருணகிரிநாதர் மன்னிப்பு கேட்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் பெண்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால் அருணகிரிநாதரோ தாம் பேசியது சரியே மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியுள்ளார். "நான் ஒன்றும் தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிராக பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அறைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. 

அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறை மீதுதான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றார் அவர்.
-நேற்றைய செய்தி.

தமிழ்நாட்டுல ஒரே ஒரு மனுஷன் தைரியமா அரைகுறை டிரஸ் போடாதீங்கன்னு சொல்லி இருக்கார்...அது கூட பொறுக்காம
சில பெண்கள் சங்கங்களும் போராட்டம் நடத்துனாங்களாம்....

இதென்ன கொடுமையா இருக்கு....அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு..
பெண்கள் சங்கமோ,கம்யூனிஸ்ட்டுகளோ போராட்டம் செய்வதால்
அது ஒட்டு மொத்த மக்களின் குரலாகிவிடாது....

துப்பட்டா,தாவணின்னு ஒரு டிரஸ் அயிட்டம் தமிழ்நாட்டில் இருந்துச்சு...
அந்த ஆடை இனம் அழிந்து கொண்டு வரும் ஆடைகளின் பட்டியலில் முதலிடத்தில் தற்போது உள்ளது....

கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையா அந்த துப்பட்டா சின்னதாக ஆகி
இப்போ இப்போ   கழுத்தை சுற்றி போடும் டை  மாதிரி இருக்கு.

இன்னும் சில காலங்களில் தாவணி,துப்பட்டா எல்லாம்
இட்ஸ்கான்,போயே போச்சு,அவட் ஆஃப் ஃபேஷன்
ஜவுளிக்கடையிலலாம் சொல்வாங்க போல....

அப்புறம் பாரத தேசத்தில் வாழ்ந்த மக்களின் ஆடையில் இதுவும்
ஒன்றுனு தொல்பொருள் ஆராய்ச்சில கண்டுபிடிக்கிற நிலைமைல
பெண்களின் ஆடை இருக்குறது கவலைப்படும் விசயம்.

தமிழ்நாட்டில் இன்னும் ஒவ்வொரு தாய்,தந்தையும்
அதைத்தான் தன் பிள்ளைகளிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்...

சிட்டி வாழ்க்கையில் பொழுதன்னைக்கும்
அரை குறை ஆடைப்பெண்களை பார்த்து பலருக்கு
சலிப்பாய் தோன்றலாம்....ஆனால்,இன்னும் கிராமத்து மக்கள்
சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வரும்போது காறி துப்பி
விட்டுத்தான் செல்கிறார்கள்...

கிராமத்தில் இருந்து நகரங்களில் படிக்க வரும் இளைஞர்கள்
துப்பட்டான்னு ஒண்ணு விக்குதே...அதை வாங்கி போட்டாதான்
என்னனு கேள்வி கேட்குறாங்க....

பெண்கள் வைரம் மாதிரி....மூடி மறைத்து வைப்பதுதான் நல்லது...
கூழாங்கல் மாதிரி தெருவில் கிடந்தால் ஆபத்துதான்....

இந்த ஆர்ப்பாட்டங்களையோ,போராட்டங்களையோ பார்ப்பவர்களிலும்,கேட்பவர்களிலும்,படிப்பவர்களிலும் பெரும்பாலான மக்கள் கண்டிப்பாக தன் பெண் பிள்ளைகளுக்கோ,மனைவிக்கோ அரைகுறை ஆடை அணிந்து வருவதை விரும்பாத பண்பாடு உடையவர்களாத்தான் இருப்பார்கள்.....இன்னும் கலாச்சாரமும்,பண்பாடும் கிராமங்களில் இருந்து
கொண்டுதான் இருக்கிறது.....

பெண்கள் சங்கத்தினர் உண்மையில் போராட்டம் நடத்தவேண்டியது
சினிமாவில்  துகிலுரித்துக்காட்டும் பெண்ணினத்தை கேவலப்படுத்தும் பெண்களை எதிர்த்துதான்....ஆதினத்தை எதிர்த்து அல்ல....

Friday, December 28, 2012

அறிவுக் குருடர்களும்,கருத்துக் குருடர்களும்

இந்திய நாட்டில் தவறு செய்பவனுக்கும்,திட்டமிட்டு வன்முறை நிகழ்த்துபவனுக்கும் உடனடியாக தண்டனை கிடைக்காதா என சராசரியான பாமரனுக்கு இருக்கும் உணர்வுகளும்,எண்ணங்களும் கூட  ஆட்சி செய்யும் அறிவுக்குருடர்களுக்கும்,கருத்து சொல்லும் கருத்துக்குருடர்களுக்கும் இல்லை.....

 மக்களுக்கு நல்லது செய்வேன் என சூளுரைத்து கட்சி ஆரம்பித்தவர்களும்
தினசரிகளிலும்,மீடியாக்களிலும் வருவதற்கு மட்டும் முகம் காட்டி நானும் இருக்கிறேன் என படம்காட்டிக்கொள்கின்றனர்....

நடுநிலை செய்தி தருகிறேன் என தன்னைத் தானே மெச்சிக்கொள்ளும்
தவிட்டுக்கொளுக்கட்டை பத்திரிக்கைகளும்,மீடியாக்களும் மக்களிடம் நம்பிக்கை இழந்துவிட்டன்.....

சிந்திக்ககூடியவர்கள் எல்லாம் அரசியல் வேணாம்  ஒதுங்கிவிட்டதால்
மலட்டு சிந்தனையாளர்களும்,சினிமா வியாபாரிகளும் ஆட்சி செய்யும்
அவலநிலை........நமக்கு

பள்ளிக்கூடங்களில் பலதரப்பட்ட நுணுக்கங்களை மழலைகளிடம் வன்கொண்டு திணிக்கும் பணந்திண்ணி பள்ளிக்கூடங்கள் வீதிக்கு
வீதி பெருகி உயிர்க்கல்வி முறையை தீ வைத்துக் கொளுத்தி பணம் சம்பாதிக்கும் மிஷின்களை உருவாக்கி வருகின்றனர்....

கல்வித்துறை,மருத்துவம் எல்லாம் தனியார்மயமாக்கி
ஏழைகள் வாழும் தகுதி அற்ற நாட்டில் வாழும் அவலம்......

நாள்தோறும் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களை காணும்
ஒவ்வொரு சராசரி இந்தியனும் இன்றுதான் நீதி கிடைக்காதா....
நாளைதான் நீதி கிடைக்காதா என பெருமூச்சுவிட்டுக்கொண்டிருக்கிறான்.....?????
அவனுடைய உள்ளக்கொதிப்பை அறியாத அரசு
நம்மை ஆட்சி செய்வதை விட கொடுமையும்,கேவலம்  உள்ளதா....????

இதற்கு தீர்வுதான் என்ன...????
தீர்வுதான் என்ன....................????

சராசரி கடைக்கோடி மனிதனுக்கு ஏற்படும்
உணர்வுகள் கூட ஆளும் வர்க்கத்திற்கு இல்லையென்றால் .........................
மக்களிடம் புரட்சி ஏற்பட்டு சட்டங்களில் மாற்றம் ஏற்படும் நாள்
மட்டும் வெகு தொலைவில் இல்லை....
அது மட்டும் நிச்சயிக்கபட்ட உண்மை.....

அறிவுக்குருடர்களும்,கருத்துக்குருடர்களையும் மக்கள்
புறக்கணித்து வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை...

Thursday, December 27, 2012

கழுதையாக இரு

நம் வாழ்க்கையில் ஏற்படும் பல  சிரமங்களின்போது
சில நேரங்களில் செவிடனாக இருப்பது சிறந்ததாக இருக்கும்...
நாம் எந்த ஒரு முயற்சியோ,வேலையையோ ஆரம்பிக்கும்போது
கண்டிப்பாக அதை எதிர்க்க நான்கு பேர் இருக்கத்தான் செய்வார்கள்....

இல்லை குறை சொல்ல பத்து பேர் இருப்பார்கள்...
உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்ய
இரண்டு பேர் இருப்பார்கள்...இப்படிப்பட்டவர்களை
கண்டும் காணாமல் இருக்க வேண்டும்...

இப்படித்தான்,ஒரு கிணற்றில் இரண்டு தவளைகள் விழுந்துவிட்டது.
முதல் தவளை கிணற்றை விட்டு வெளியேற விடாப்பிடியாய் முயற்சி செய்தது.

கிணற்றை சுற்றி நிறைய தவளைகள் உன்னால் முடியாது ....!!
உன்னால் முடியாது ...!!ஏன் முயற்சிக்கிறாய்???
என ஏளனம் பேசியது...

கடைசியில் அந்த தவளைஎவ்வளவோ முயற்சி செய்தும்
வெளியேற முடியாமல் இறந்து போனது.

இப்போது இரண்டாவது தவளையின் முறை...
அந்த தவளையும் முயற்சித்தது....
இப்போதும் வெளியே உள்ள தவளைகள் அதையே
சொல்லிக்கொண்டிருந்தன.இரண்டாவது தவளை
வெளியே உள்ள தவளைகளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை...


விடா முயற்சியால் வெற்றிகரமாக வெளியேறியது...
வெளியே வந்தவுடன் நீங்க எல்லாரும்
ரொம்ப நேரமாக என்னம்மோ சொல்றீங்க...?
எனக்கு காது கொஞ்சம் கேட்காது...சாரி என சொல்லிவிட்டு
சுத்தமாக காது கேட்காத அந்த செவிட்டுத்தவளை
அடுத்த வேலையைபார்க்க கிளம்பியது....

இக்கதையில் மனிதர்களின் குணாதிசியங்களை பற்றி
தெரிந்து கொள்ளலாம்.வெற்றி பெற்றால் ஓடோடி
வருவார்கள்...தோல்வி அடைந்தாலோ இது உனக்கு
தேவையான்னு கேட்பார்கள்.இவர்களிடம் செவிடனாக
இருப்பதே மிக மிக சிறந்தது.

அடுத்து கழுதை கதை...
இதிலும் தன்னை சுற்றி வரும் புறக்கணிப்புகளை எல்லாம்
கழுதை எப்படி புறக்கணித்து வெளியே வந்தது என பார்க்கலாம்.
ஊரின் கடைசியில் இருந்த மிகப்பெரிய பள்ளத்தில் கழுதை
தவறி விழுந்து விட்டது...

அதை காப்பாற்ற யாரும் வரவில்லை...
எட்டிப்பார்த்த சிலரோ...அய்யோ பாவம் என கூறிவிட்டு
நடையைக்கட்டினர்....அக்கம் பக்கம் இருந்த நல்ல மனிதர்களோ
வீட்டில் இருந்த குப்பைகளை அந்த பள்ளத்தில் உள்ள
கழுதையின் மீது கொட்டினர்...

கழுதை தன் மேல் கொட்டப்பட்ட அந்த குப்பைகளை
எல்லாம் உதறிவிட்டு தட்டிவிட்டு சளைக்காமல்
நின்றது...கடைசியில் அப்பள்ளம் முழுவதும் குப்பை
நிரம்ப கழுதை வெளியேறியது....

நம் வாழ்க்கையில் அய்யோ பாவம்  என சொல்லப்படும்
புறக்கணிப்புகளை இக்கழுதை மேல் விழுந்த
குப்பை போல தட்டிவிட்டு உன்னால் முடியாது
என கூக்குரல் இடுபவர்களிடம் தவளைசெவிடன் போல
இருந்தால் கண்டிப்பாக நம்மால் வெற்றி அடைய முடியும்...

Tuesday, December 25, 2012

எவரும் செய்யலாம் ஏற்றுமதி


திரைப்படங்களில் காட்டுவதைப்போல ஏற்றுமதி
என்பது மிகப்பெரிய பணக்காரர்களுக்கும்,மெத்தப்படித்த,
ஆங்கிலம் சரளமாக பேசக்கூடியவர்களுக்கும்
மட்டுமே உரிய தொழில் என்கிற தாழ்வு
மனப்பான்மையுடன் இன்றைய இளைஞர்களில்
பலர் இருக்கின்றனர்
.

உண்மை இதற்கு நேர்மாறானது.ஏற்றுமதியை வீட்டில்
வைத்துக்கூட யார் வேண்டுமானாலும் துவங்கலாம்.
பெரிய படிப்பெல்லாம் வேண்டாம்.முதலீடு அதிகம்
தேவையில்லை.ஆங்கிலம் தெரியாவிட்டாலும்
வெற்றி பெற முடியும் என்பதுதான் எதார்த்தம்,
உண்மை,நடைமுறை.

இந்த உண்மைகளை தமிழ் இளைஞர்களுக்கு
எடுத்துச்சொல்லி அவர்களின் பயத்தைப் போக்கி
யார் வேண்டுமானாலும் ஏற்றுமதித் தொழிலில்
வெற்றி பெற முடியும் என்பதை
சகோதரர்.வீ.அரிதாசன்B.E,M.B.A அவர்கள்
ஆலோசனை அளித்து வருகிறார்....

திரை கடலோடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து செல்வம் சேர் என
முன்னோர்கள்கூறியுள்ளனர்.ஆனால்,வெளிநாடுகளுக்கு
வேலைக்கு செல்வதற்குமட்டும் ஆர்வம் காட்டும் தமிழ்
இளைஞர்கள்ஏற்றுமதி செய்து பொருள் ஈட்ட ஆர்வமுடன்
இன்றுவரைமுன்வரவில்லை என்பதே உண்மை.

121கோடி மக்கள் தொகை உள்ள நம் இந்திய தேசத்திலே
சுமார் 2 லட்சம் பேர்கள்மட்டுமே ஏற்றுமதியாளர்களாக
பதிவு செய்திருப்பவர்கள்.தமிழகத்தில் இந்த எண்ணிக்கை
வெறும் 3,000 என்கிற அளவில்தான் உள்ளது.

இதற்கு காரணம் என்ன?ஏற்றுமதித் தொழில் பற்றிய
போதிய விழிப்புணர்வு நம் இளைஞர்களிடத்தில்
இல்லை என்பதே...பொறியியல் மற்றும் நிர்வாகவியல்
முதுநிலை மற்றும் வேளாண்மை சார்ந்த
பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அவர்,
ஏற்றுமதியையும்வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கிறார்....

புதிய தலைமுறை இதழில் வெளிவந்த இவரது கட்டுரைகளைப்
படித்த பலர்தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் இவரைதொடர்பு
கொண்டு வாழ்வில் முன்னேற்றம் கண்டுள்ளனர்...
வீ.அரிதாசன்.
செல்பேசி:9444146807

அவர்களில் தஞ்சையை சேர்ந்த ஷேக் முஹம்மதும் ஒருவர்.
அவர் தனது வெற்றி வாய்ப்பை பற்றி கூறுகிறார்.

“என் பெயர் ஷேக் முஹமது.தஞ்சை மாவட்டம்.தஞ்சை
 மாவட்டம்அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்தவன்.
சவுதி அரேபியாவில்சுமார் பத்து ஆண்டுகளுக்கும்
மேலாக பணியாற்றி வந்தேன்.
வெளிநாட்டில் ரொம்ப நாள் இருந்து விட்டோம்.
இனி இந்தியா திரும்பிஏதாவது தொழில் செய்து நாட்டிலேயே
இருந்து விட வேண்டும்எனநினைத்துக்கொண்டிருப்பேன்.

மனைவி,குழந்தைகளோடு சேர்ந்து வாழ வேண்டும்
என்ற எண்ணம் என்னைப்போன்று வெளிநாடுகளுக்கு
வேலை தேடி வரும் பெரும்பாலானோருக்கு உண்டு.

அப்படி நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான்
புதிய தலைமுறை வார இதழில் அரிதாசன் அவர்கள் எழுதிவந்த
ஏற்றுமதி செய்வது பற்றிய தொடர் என் கண்ணில் பட்டது.
ஏற்றுமதி என்றால் யாரோ பெரிய பெரிய பணக்காரர்களுக்கு
உரிய தொழில்,நாமெல்லாம் செய்ய முடியாது என நினைத்துக்
கொண்டிருந்த எனக்கு அந்த தொடரைப் படிக்க படிக்க
அச்சம் நீங்கி,தைரியம் வரத்தொடங்கியது

நாமும் நிச்சயம் ஏற்றுமதி செய்து,மிகப்பெரிய அளவில் வளர வாய்ப்பு
கிட்டும் என்ற நம்பிக்கை என் மனதில் துளிர் விடத்தொடங்கியது.
‘புதிய தலைமுறை’அலுவலகத்தை தொடர்பு கொண்டு அவரது தொலை
பேசி எண்களை பெற்று என் முழு விவரங்களையும் எடுத்துச் சொன்னேன்
‘தமிழகம் வரும்போது என்னை நேரில் வந்து பாருங்கள்’எனக்கூறினார்.

எனக்கு ஏற்பட்ட நம்பிக்கை துளிர் மேலும் வளரத்தொடங்கியது.
அவர் கூறியபடியே சென்னை வந்தவுடன் நேரில் அவர் அலுவலகத்திற்கு
புதிய தலைமுறையின் அனைத்து இதழ்களையும் கையில் வைத்துக்கொண்டு
சென்றேன்.ஏற்றுமதி பற்றி அவர் எழுதிய தொடரே என்னை ஊக்கப்படுத்தியது
என்றால் அவரை நேரில் சந்தித்துப் பேசிய போது மேலும் மேலும் நம்பிக்கை
வளர்ந்து கொண்டே போனது.

ஏற்றுமதி பற்றிய அவர் பல்வேறு விவரங்களையும்
கூறிக்கொண்டே வந்தார்.அவரின் அறிவுரைப்படியே செயல்பட ஆரம்பித்தேன்.இந்தியாவின் மிக அருகில் உள்ளஇலங்கையில் உள்ள கொழும்புவுக்கு ஒருமுறை நேரில் சென்று வாருங்கள் என்றார்.

பத்தாயிரம் ருபாயில் சென்று வரமுடியும் என்பதால் சென்று பார்த்தேன்.
அங்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படுகின்றன எனத்தெரிந்து கொள்ளத்தான்அங்கு நான் போனேன்.ஆனால்,அங்கிருந்த பல்வேறு வடிவ மரச்சாமான்களும்மரப்பொம்மைகளும் குறைந்த விலையில் கிடைப்பதைக் கண்டு அதிசயித்தேன்.  ”

முதலில் சுமார் இருபது ஆயிரம் பெருமான பொம்மைகளை
அங்கிருந்து நம் நாட்டிற்கு சிறிய அளவில் இறக்குமதி செய்து
வணிகம் பார்த்தேன்.நேரடியாக விற்றதால் மூன்று மடங்கு
லாபம் கிடைத்தது.மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

படிப்படியாக உய்ர்ந்து இப்போது மாதம் சுமார் ஒரு லட்ச ருபாய்
மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்து தமிழகத்தில் விற்று வருகிறேன்.
மனமகிழ்வோடு போதிய வருமானம் கிடைப்பதால் என் மனைவியும்
வெளிநாட்டுக்கு போக வேண்டாம் என கூறிவிட்டார்.

குடும்பத்தைப் பிரிந்து எங்கோ வேலை பார்த்து
கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்த என்னைப்
போன்ற சாதாரணமானவர்களை கூட வெற்றிகரமான
ஏற்றுமதி,இறக்குமதிவணிகத்தில் ஈடுபடவைத்தது
புதிய தலைமுறையில் வெளிவந்த
அரிதாசன் அவர்களின் தொடர்தான்....

ஷேக் முஹம்மது
அம்மா பேட்டை.
தஞ்சாவூர் மாவட்டம்.
செல்:94424 01583

வீ.அரிதாசன் அவர்கள் எவரும் செய்யலாம் ஏற்றுமதி என்ற
புத்தகத்தில் இதைப்பற்றிய முழு விவரங்களும் குறிப்பிட்டுள்ளார்..
புதிய தலைமுறை பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.

Monday, December 24, 2012

மிஸ்டர்.கமல்ஹாசன் உங்களுக்கு என்னுடைய கேள்வி...???


கொச்சி, டிச. 24-
கேரள மாநிலம் கொச்சியில் நேற்று 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் பங்கேற்றார். அப்போது அவரிடம், டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவர், ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டது தொடர்பாகவும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனக்கோரி நடந்து வரும் போராட்டம் தொடர்பாகவும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, பதிலளித்து நடிகர் கமலஹாசன் கூறியதாவது:-

சம்பவம் நடைபெற்ற பஸ், என்னுடைய பஸ். நடைபெற்ற இடம், என்னுடைய நாட்டின் தலைநகரம். பாதிக்கப்பட்ட பெண், என்னுடைய சகோதரி.தவறு செய்தவன், என்னுடைய சகோதரன். இதை அறிந்து நான், அவமானப்படுகின்றேன்.

தவறு செய்தவர்களுக்கு, மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், ஒரு குற்றத்தை இன்னொரு குற்றத்தின் வாயிலாக கையாள்வது சரியல்ல. மரண தண்டனை என்பதே, சட்டத்தின் மேற்பார்வையில் நடக்கும் கொலைதான்.

இது நேற்றைய செய்தி....
படித்ததும் ஒவ்வொரு பாமர மனிதனுக்கும் 
இரத்தம் கொதிக்கும் விஷயம் இது....
இவர் என்ன நாட்டை காப்பாற்ற கஷ்டப்பட்ட 
சுதந்திரப்போராட்ட தியாகியா...??இல்லை....
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய அம்பேத்கரா...???
இவரிடம் போய் கருத்து கேட்பதற்கு என்ன உள்ளது...???

அது எப்படியாம்....????மறுபடியும் கேளுங்க....
சம்பவம் நடைபெற்ற பஸ், என்னுடைய பஸ். 
நடைபெற்ற இடம், என்னுடைய நாட்டின் தலைநகரம். 
பாதிக்கப்பட்ட பெண், என்னுடைய சகோதரி.
தவறு செய்தவன், என்னுடைய சகோதரன். 
இதை அறிந்து நான், அவமானப்படுகின்றேன். 

மிஸ்டர்.கமல்ஹாசன் உங்களுக்கு என்னுடைய கேள்வி...???
இதே கொடுமை தங்கள் மனைவிக்கோ,மகளுக்கோ 
ஏற்பட்டால் உங்களால் இதே பதிலை கூற முடியுமா...???
பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் தனக்கு அந்த  நிலை 
ஏற்பட்டால் என்ன செய்வோமோ அதைத்தான் பிறருக்கும் 
விரும்ப வேண்டும்....

உங்களுடைய இந்த அறிவற்ற கருத்தை கேட்டு
தாங்கள் பிறந்த ஊரான பரமக்குடியில் பிறந்த நான்
வெட்கப்படுகிறேன்,வேதனைப்படுகிறேன்...அவமானப்படுகிறேன்....

உண்மையில் உங்களின் கருத்துகள் சிரிப்பை வரவழைக்கிறது.....
என்  பஸ் என்று சொன்னதும் ஷாக் ஆகிவிட்டேன்.
என் சகோதரன்,என் சகோதரி என்று வாய் 
நிறைய சொல்ல ஈஸியாகத்தான் இருக்கும்.
பாதிக்கப்பட்ட பெண் தங்கள் சகோதரி,
தவறு செய்த தங்களின் சகோதரருக்கும்
உங்கள் சொத்தில் பாதி பங்கை எழுதி வைப்பீர்களா...???

தாங்கள் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களின் சகோதரர்கள்...அவர்களிடம் இனிமேல் சம்பளம் வாங்காதீர்கள்.
உங்கள் படம் பார்க்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்
உங்கள் சகோதரர்கள்...அவர்களிடம் டிக்கெட்டுக்கு பணம் கேட்காதீர்கள்..
தங்கள் படத்தின் உரிமையை கோடிக்கணக்கில் பணம் வாங்காமல் தொல்லைக்காட்சிகளுக்கு
இலவசமாக கொடுங்கள்...ஏனென்றால் அனைவரும் 
உங்கள் உங்கள் உங்கள் சகோதரர்கள்.... 

ஆகவே,தயவு செய்து நாட்டுக்கு ஏதும் நல்லது 
பண்ணவில்லையென்றாலும் நானும் கருத்து 
சொல்கிறேன் பேர்வழி என்று தயவு செய்து தயவு செய்து
உபத்திரவம் பண்ணாதீர்கள்...

Wednesday, December 19, 2012

சுஷ்மா சுவராஜூக்கு ஒரு கேள்வி....

டெல்லி: டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடியவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். அவர்களை தூக்கில் தொங்க விட வேண்டும் என்று லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசினார். ராஜ்யசபாவில் இதுதொடர்பாக நடந்த விவாதத்தின்போது சோகம் தாங்க முடியாமல் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் கண்ணீர் விட்டு அழுதார். இதனால் அவையே உருக்கமான சூழ்நிலைக்கு மாறியது.


                                                      
கண்ணீர் விட்டு அழுத ஜெயா பச்சன் ராஜ்யசபாவில் ஜெயா பச்சன் பேசுகையில், கண்ணீர் விட்டு அழுதார். அவர் கூறுகையில், இந்த நாடாளுமன்றத்தில் உட்கார எனக்கு அவமானமாக உள்ளது. எல்லாம் இருக்கட்டும், இந்த கடும் பாதிப்பை சந்தித்துள்ள குடும்பத்துக்கு இந்த அரசோ அல்லது டெல்லி அரசோ முதலில் ஒரு இரங்கலைத் தெரிவித்ததா, வருத்தம் தெரிவித்ததா. இந்த அவமானகரமான செயலுக்காக வருந்துகிறோம் என்று எந்த அரசாவது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதா?. அடிப்படையில் நான் ஒரு கலைத் துறையைச் சேர்ந்தவள். 


இந்த சம்பவத்தால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். எல்லோரும் ஓரிரு நாளில் இந்த சம்பவத்தை மறந்து விடுவார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுவதும் அந்த துயரம் துரத்தி வருமே...ஆறாத வடுவாக அது கூடவே இருக்குமே... மனதளவில் அந்தப் பெண் எவ்வளவு துயரத்தை அனுபவிப்பார். இதற்கெல்லாம் எப்படி ஈடு செய்ய முடியும் என்று கூறியபடி அழுதார் ஜெயா. பின்னர் சிறிது நேரம் பேச்சை நிறுத்திய அவர் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார். 

அவர் பேசுகையில், ஒவ்வொரு நாளும் எத்தனையோ பெண்கள் தங்களது தந்தைகளாலும், சகோதரர்களாலும், உறவினர்களாலும் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகிக் கொண்டுள்ளனர். நாட்டுக்கு இது மிகப் பெரிய அவமானமாகும். இந்த உலகுக்கு உங்களைக் கொண்டு வந்த பெண்களுக்கு நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா.. அவர்களுக்கு பாதுகாப்பே கிடையாதா... என்றார் ஆவேசமாக.

-நேற்றைய செய்தி...

ஆஹா...ஓஹோ...பேஷ்...பேஷ்...
வாங்கம்மா...வாங்க...வாங்க...ஜெயா பச்சன்...
கலைத்துறையை சேர்ந்த நீங்கள் ஒரு அப்பாவி 
பெண்ணுக்காக கண்ணீர் வடித்துள்ளீர்கள்...
அடிப்படையில் கலைத்துறையை சேர்ந்த நீங்கள் 
வருத்தப்படுவது நிறைய ஆச்சரியத்தை தருகிறது...
சினிமா மக்களிடையே பரவலான பின் தான் இந்த கோரங்களும்,சம்பவங்களும் அதிகரித்துள்ளது....

ஒவ்வொரு நாளும் எத்தனையோ பெண்கள் தங்கள் தந்தையாலும்,சகோதரராலும்,உறவினராலும் 
மானபங்கப்படுத்துவதை எண்ணி வேதனைப்பட்டீர்களே....
24 மணிநேரமும் பெண்களை போகப்பொருளாக காட்டி  
சதை வியாபாரிகளாக சித்தரிக்கும்  கலைத்துறையும் 
இதற்கு முழு முக்கிய ஒரு காரணமென்று தெரியுமா...???

மனிதர்களின் மூளைகளிலும்,எண்ணங்களிலும்
ஆபாசத்தையும்,வக்கிர எண்ணங்களையும் 
வலுக்கட்டாயமாக விதைப்பதில் தாங்கள் இருக்கும் 
கலைத்துறையும் ஒரு காரணமென்று தெரியுமா...????

சிகரெட்டையும்,மதுபானத்தையும் ஹீரோயிஷமாக நினைத்து
தன் உடலையும்,மனதையும்,குடும்பத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கி நடுத்தெருவில் விட்ட ஒவ்வொரு குடிமகனுடைய குடும்பத்தாரின் பாவத்திலும்,வயிற்றெரிச்சலிலும் உங்களில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு தெரியுமா...???

பருவத்தில் மட்டுமே வரவேண்டிய எண்ணங்களை
ஆறு,ஏழு வயது பிள்ளைகளிடம் விதைத்து
அவர்களின் அறிவுக்கண்ணை குருடாக்கி
ஆபாசக்கண்ணை திறந்து வைத்ததில் 
பங்கு உங்களில் ஒவ்வொருவருக்கும் உண்டு தெரியுமா...?

உங்களுக்கு அழுகை வரவேண்டும் என்றால் உங்க மருமகள் தங்களுடைய கணவருடன் மேடையில் ஒன்றாக நடனம் 
ஆடியபோது கலாச்சாரமீறலாக இருக்கிறதே என்று கண்ணீர் சிந்தி அழுதிருக்க வேண்டும்....இதே அழுகை குஜராத்தில் திட்டமிட்டு ஒரு சமூகத்தையே கூண்டோடு அழித்தபோது தங்களுக்கு வந்ததா..???

அடுத்து சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு ஒரு கேள்வி....
ஆம்...பலாத்காரம் செய்த அந்த கயவர்களுக்கு தூக்கு 
தண்டனை கொடுக்க வேண்டும் என ஆவேசமாக பேசினீர்களாம்...
வெரி குட்....வெரி குட்....தங்கள் கருத்தை வழிமொழிகிறேன்....!!!!

அப்படியே குஜராத்தில் உள்ள நரபலி கயவர்களுக்கும்
தூக்குதண்டனை கொடுக்க வேண்டும் என சொல்லுங்களேன்...
தங்களுக்கு மனசாட்சி இருந்தால்....
நீதி எல்லாத்துக்கும் ஒண்ணா இருக்கணும்....
அது குஜராத்தா இருந்தா என்ன?டெல்லியா இருந்தா என்ன?

அப்புறம் கலைத்துறையில் உள்ளவர்களை 
பதவியில் உட்காரவைக்கும் பல அரசியல்கட்சிகளில்
 மிகப்பெரும் அரசியல் கட்சியின் தலைவியான
நீங்கள்அரை நிர்வாணமாக ஆடித்திரிவதால்
 பிரபலமானவர்களைதேர்தலில் நிற்க வைப்பதன் 
மூலமும்,பிரச்சாரம் செய்ய வைப்பதின் மூலமும் 
நீங்க ஓட்டு வேணும்னால் வாங்கலாம்...
சமுதாயத்தில் என்ன முன்னேற்றத்தையும் கொண்டு 
வரமுடியாது....

பத்மஸ்ரீ,பத்மபூஷன் விருதுகளை எல்லாம் 
கலைத்துறைக்கு கொடுக்குறீங்களே....
அவங்க என்ன கலைச்சேவை செஞ்சாங்க....
கலைத்துறையாம்....கட்டவிளக்குமாத்து துறையாம்....
அதுக்கு விருது ஒன்னு கேடா...????

சினிமாவில்  பிராக்டிகல் கிளாஸ் எடுக்கிறாங்க.....
அதுதான் நாட்டுல நடக்குது....
ஒரு பத்து வருஷத்துக்கு சினிமாவை தடை பண்ணுங்களேன்....
இந்த மாதிரி சம்பவங்கள் எல்லாம் நடக்காது.....

சினிமாவை தடை செய்தால் பெண்கள் அரைகுறை 
ஆடை அணிவது குறையும்....
பொது இடத்தில் பெண்களைமானபங்கப்படுத்துவது 
போன்ற சம்பவங்கள் குறையும்...
பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடிப்போகும் சம்பவங்கள் குறையும்...

மக்கள் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுவார்கள்....
அதிகாலையில் எழுந்தால் நோய்கள் ஓடிப்போகும்....
மக்களின் பணம் சினிமாவுக்கு போகாமல் மிச்சமாகும்....
சீக்கிரமே நாடு முன்னேறிடும்...
அப்புறம் அமெரிக்கா நம்மிடம் வந்து கடன் 
கேட்கும் நிலை கூட உருவாகலாம்....

Monday, December 17, 2012

சமூகப்போராளிகள்.....


வரதட்சணைக்கு எதிரான போரில்
கலந்து கொண்ட சமூகப்போராளிகள் நாங்கள்....
கத்தியின்றி,இரத்தமின்றி,சப்தமின்றி
எங்கள் உயிரை பணயம் வைத்து அல்ல....
எங்கள் ஆன்மாக்களை,உணர்ச்சிகளை பணயம் வைத்து .....
எங்கள் ஆசைகளை பூட்டி வைத்து.....யுத்தம் செய்கிறோம்....
எங்களுடைய நோக்கம்தான் என்ன....????!!!
ஸ்டவ் வெடித்த உயிரை நீத்த எங்கள் முந்தைய
தலைமுறைப்பெண்களுக்கும்,
இப்போரில் கலந்துகொண்டு பாதியில்
வெளியேறிய எம் சகோதரிகளுக்கும்,தோழிகளுக்கும் ஏற்பட்ட நிலை.....
மகளுக்கு திருமணம் செய்ய கடன் வாங்கி,லோன்
போட்டு பதினைந்து வருடத்திற்கு மேல் கடனாளியாக
இருக்கும் எங்களின் அத்தா,அம்மாவின் நிலை


இனிவரும் காலங்களில் அடுத்த தலைமுறை சமுதாயத்திற்கும்
வரக்கூடாது என்பதற்காக வயது முப்பதை நோக்கி சென்றாலும்
எம் உள்ளம் அழும் அழுகையை வரட்டு சிரிப்பால் மறைத்து
அல்லாஹ்விடம் மட்டும் சொல்லி கதறி அழும் அமைதிப்போராளிகள்...
வரதட்சணைக்கு எதிரான போரில் கலந்துகொண்ட ஜிஹாதிகள்
...
இப்போரின் எதிராளியின் தாக்குதலுக்கு பதிலடி
கொடுக்காமல்சென்ற பாதியில் புற முதுகு காட்டிச்சென்ற
எம்தோழிகளின் பிள்ளைகள் பருவமடைந்துவிட்டார்கள்...

ஆம்....நாங்கள் இன்னும் கன்னிப்பெண்கள்...
பணத்திற்காக ஆசைப்படும் பேடியின் இச்சைக்கு
அடிபணிய பிறந்தவர்கள் அல்ல நாங்கள்.....
எங்களின் போர் திட்டமிடப்பட்டது அல்ல....
எங்களுக்கென்று தனிக்குழுவோ,அமைப்போ இல்லை....
எங்களுக்கென்று தனிக்கொடியோ,தலைவியோ இல்லை....


அல்லாஹ்வின் வார்த்தைகளை மெய்பிக்க
வரதட்சணையின் கோரமுகத்தை கிழித்து எறிய...
எம் உணர்ச்சிகளை சீதனம் என்னும்
முள் பாதையில் போட்டு....
தக்வா என்னும் ஆடை உடுத்தி,
தவக்கல் என்னும் வாளை ஏந்தி போரிடும்.....
நவீன சஃபியாக்கள் நாங்கள்....

(நபி ஸல் அவர்களின் மாமி சஃபியா ரலி அன்ஹூ அவர்கள்
ஹந்தக் போரில் வேவு பார்க்க வந்த யூத ஒற்றனின் தலையை
கொய்து அவர்களின் கூடாரத்தில் சென்று எறிந்த வீரப்பெண்மணி
)
குமரு காரியத்திற்காக ஜும் ஆ அன்று வசூல் செய்ய வரும்
எங்கள்அத்தாமார்களுக்கு உதவி பிச்சை காசு போடசொல்லும்...
ஜமாத்தார்களே....முத்தவல்லிகளே...ஆலிம்களே... 

உங்கள் ஜமாத்திலும் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜமாத்துகளிலும்...
இந்த வரதட்சணை புற்றுநோயை நுனி முதல் அடி வரை  
விரட்டி...மஹர் கொடுத்துதான் திருமணம் செய்ய வேண்டும் என 
ஜும் ஆ மேடைகளில் கட்டளை போடலாமே......
குர் ஆன்,ஹதீஸ் செயல்பாட்டிற்காக
ஊர் விலக்கம் செய்யும் ஜமாத்தார்கள்....
வரதட்சணையை கேட்கும் குடும்பத்தாரை ஊர் விலக்கம் செய்யலாமே....
அல்லாஹ்வின் பள்ளியை நிர்வகிக்கும் நீங்கள் கண்டும்,காணாமலும்
கல்யாணத்திற்கு மட்டும் தப்தர் கொடுத்து எனக்கு தெரியாது
என விலகிக் கொள்ள முடியாது....
அல்லாஹ்வின் சாபத்தை அஞ்சிக்கொள்ளுங்கள்...
மறுமையில் உங்களை எல்லாம் முஃப்லீஸ்
ஆக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்......
“உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை
எந்த குற்றத்திற்காக கொல்லப்பட்டது என
வினவப்படும்போது’’
அல்குர் ஆன் 81:8
இந்த பெண் குழந்தைகளை விசாரிக்கும்போது
அல்லாஹ் எங்களையும் விசாரிப்பான்...
ஆம்...அந்தக்குழந்தைகள் கொல்லப்பட்டதின் காரணம்
இதே வரதட்சணையால்தான்....
நாங்களும் சாட்சி சொல்லுவோம்...
உங்கள் அனைவரின் முகத்திரையை கிழிப்போம்....

கீழக்கரையிலும்,காயல்பட்டினம்,காரைக்கால்,நாகூரில்
பெண்ணோடு வீடும் கேட்கும் பேடிகளுக்கு எங்களின் எச்சரிக்கை....
லெப்பைகுடிகாட்டில் பெண் வீட்டாரிடம் வாங்கித்தின்றே
அழிக்கும் கேடிகளுக்கு எங்களின் எச்சரிக்கை...


மார்க்கம் தெரிந்த பின்னரும் இன்னும் மாமியார் கொடுத்த வீட்டில் இருக்கும்
ஆண்களுக்கு எடுத்துச் சொல்ல ஆள் இல்லையா...?
மாமனாரின் வீட்டில் இருக்கும் உங்கள் கல்மனசு உறுத்தவில்லையோ...??
மற்ற ஊர்களில் இப்பொழுதெல்லாம் நேரடியாக அல்லாமல்
மறைமுகமாக தட்சணை பிச்சை கேட்கும்
விலைமகனைப் பெற்றெடுத்த பணவெறி கொண்ட
தாய்மார்களுக்கு எங்களின் எச்சரிக்கை....

வரதட்சணை திருமணம் என்று தெரிந்தும் சாப்பிட செல்லும்
திருடுவதை பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு
சக மனிதருக்கும் எச்சரிக்கை...
(நீங்க திருடுங்க...ஆனால்,பார்த்துக்கொண்டிருப்பேன்
என நினைப்பவர்கள்)

ஒவ்வொருவரும் உங்களின் எதிர்ப்பை எப்படித்தான்
பதிவு செய்யப்போகிறீர்கள்...
பிரியாணி சாப்பிட்டுவிட்டு...
வரதட்சணை வாங்காதீங்க...
பாவம் என்று சொல்லப்போகிறீர்களோ...???

எத்தனை காலம் தான் காத்துக்கொண்டிருப்பது....
வரதட்சணை கொடுத்தாவது கல்யாணம் பண்ணு...
நீ நினைக்கிற மாப்பிள்ளையை செய்யத்தான் சொல்லணும் என்று
அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லும் அட்வைஸ் அம்மணிகளுக்கும்,
அப்புகளுக்கும் எங்களின் கடுமையான எச்சரிக்கை....

அல்லாஹ்விற்காக ஹராமை தடுத்துக்கொண்டால்
ஏற்படும் ஈமானின் ருசியை நீங்கள் சுவைத்துள்ளீர்களா...??
அறிந்திருந்தால் இந்த அட்வைஸ் உங்கள் வாயில் வந்திருக்காது....!!!

நம் வாழ்நாளில் ஒரு சமூகத்தீமையை
எதிர்க்கக்கூடதிராணி இல்லையென்றால்
வாழும் வாழ்க்கையே அர்த்தமற்றது....

பைக்,கார்,நாத்தனார் மோதிரம்,இடியாப்ப மாவு,பேங்கில்
பணம் டெபாசிட் போட சொல்லும் நவீன மோடிகளுக்கு ஒரு எச்சரிக்கை....
ஆம்...பெண் வீட்டில் வாங்கித்தின்னும் சாக்கில் எம் குலப்
பெண்களை கண்ணீர் சிந்த வைத்து,சொத்துகளை சூறையாடும்
கருவறுக்கும் ஒவ்வொரு ஆணும் மோடியே....
குஜராத்தில் கருவறுத்த மோடிக்கு அல்லாஹ் என்றால் யாரென்று தெரியாது...
ஆனால்,படைத்தவனை நம்பும் முஸ்லிம்கள் ஹராம்
என்று தெரிந்து கொண்டு கைக்கூலி வாங்கினால் அவனும் மோடியே...!!!
மாமியார் வீட்டில் வாங்கித்தின்றது
உறுத்தாமல் இருக்கும்
ஒவ்வொரு ஆணும் பேடி...
அவனே மிகவும் மோசமான மோடி....

இத்தீமையைக்கண்டு உங்களின் உள்ளம்
எல்லாம் உறுத்தவில்லையா....?
எங்களின் ஆன்மாக்கள்,உணர்ச்சிகள் கருகும் வாடை
உங்கள் மூக்கை துழைக்கவில்லையா...???

எல்லாப்பெண்களைப்போல் எங்களுக்கு ஆசைகள் உண்டு...
ஆனால்,எங்களின் மலரினும் மெல்லிய உணர்ச்சிகளை
கசக்கி எறிந்துவிட்டுதான் இப்போரில் கலந்து கொண்டுள்ளோம்...
உங்களுக்கு..உடன் பிறந்த ஒரு முதிர்கன்னி தங்கையோ,
இல்லை அக்காவோ....உங்களுக்கு இருந்தால்...
தெரியும் எங்களின் அருமை,நிலைமை....
மாப்பிள்ளை தேடி அலையும்
ஒவ்வொரு அண்ணன்மார்களையும்,அக்காமார்களையும்
அத்தாக்களையும்,அம்மாக்களையும் கேளுங்கள்..
இவ்வரதட்சணை சந்தை எவ்வளவு கொடூரமானது என்று....

எங்களை பலியாடுகளாக்கி இரத்தத்தை உறிஞ்ச காத்திருக்கும்
ஓநாய்களுக்கு தயவு செய்து துணை போகாதீர்கள்...
எங்கள் தெரு பெண்கள் எல்லாம் வரதட்சணை சந்தையில்
விலை போகிக்கொண்டிருக்க நாங்கள் மட்டும் வழி மேல் விழி
வைத்து அமைதியாக உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறோம்.
...
இப்படிப்பட்ட சமுதாயத்தில் தனக்கும் திருமணம் நடக்குமா
என்று ஏங்கிய கன்னிப்பெண்களின் உள்ளக்குமுறல்கள் தான்
உங்களுக்கு தெரியுமா...??
எத்தனை பாத்திமாக்கள்,
எத்தனை சுமையாக்கள்,
எத்தனை தாஹிராக்கள்,
எத்தனை பெனாசிர்கள்,
எத்தனை ரிஹானாக்கள்.....
குர் ஆன்,ஹதீஸை மட்டும் பின்பற்றும்
மாப்பிள்ளைக்கு காத்திருக்கிறார்கள் தெரியுமா.....????
இதற்கு தீர்வு காண ஒவ்வொரு
ஜமாத்தும் முயற்சி செய்யவில்லையெனில்,
மறுமையில் இதற்கு காரணமான அனைவரையும்
முஃப்லீஸ் ஆக்குவதற்கு எங்கள் பாத்திமாக்களும்,
தாஹிராக்களும்,சுமையாக்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்....

சிலருடைய குற்றங்களின் காரணமாக,குற்றம் செய்யாதவர்களை அல்லாஹ் வேதனை செய்வதில்லை.ஆயினும்,அவனுக்கு வழிப்பட்டு நடப்போர்,குற்றம் புரிவோரை தடுப்பதற்கு சக்தி இருந்தும் தடுக்கவில்லையென்றால்,நல்லோர்,தீயோர் அனைவரையும்
வேதனை செய்வான்''.
தப்ரானீ-528
இந்த சமுதாயத்தீமையை வேரோடும்,வேரடி மண்ணோடும்
பிடுங்கி எறிய அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவி செய்வானாக...
ஆமின்....

கொடுக்க மாட்டோம்...கொடுக்க மாட்டோம்...
வரதட்சணை கொடுக்க மாட்டோம்...

கேட்காதே....கேட்காதே....
பிச்சை காசு கேட்காதே....

Tuesday, December 11, 2012

என் அருமைக் குழந்தையே....

என் உயிரின் மறு உருவமாக உன்னைக் கருதுகிறேன்.
ஒரு மனிதன் இறக்கும்போது அவன் படும் வேதனை 60 டால் என அளவீடுகள் கொண்டு விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர்.
ஆனால்,ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை பெற்றெடுக்கும்போது
படும் வேதனையின் அளவு 70 டால் ஆகும்.

என்னுடைய முழு உலகமாக உன்னை நினைக்கிறேன்.
உன்னுடைய குறும்புகளையும்,சேட்டைகளையும் நான் ரசிக்கிறேன்.
நீ என்னை “அம்மா’’ என்று மழலையில் அழைக்கும்போது என் வாழ்க்கையே பூரணம் அடைந்ததை காண்கிறேன்.

நீ பள்ளிக்கு சென்று முதல் மாணவனாக வருவது மட்டுமல்ல 
என் நோக்கம்.நல்ல மகனாக,நல்ல சகோதரனாக,நல்ல மாணவனாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.உன் சகோதரர்களுக்கும்,சக மாணவ,மாணவியருக்கும்,வயது முதிந்தவர்களுக்கும் உன்னால் 
முடிந்த உதவிகளைச் செய்.

படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற முயற்சி செய்.
படைத்த இறைவனை வணங்குவதில் முழு ஈடுபாட்டோடு இரு.
உன் தந்தை உனக்கு கற்பிக்கும் நல்லொழுக்கங்களை பின்பற்று.
ஏனெனில்,தந்தைக்கு கட்டுபட்டவன் படைத்த இறைவனுக்கு கட்டுபட்டவனாவான்.

உன்னுடைய பதின் பருவத்தில் நல்ல நண்பர்களுடன் 
தொடர்பு வைத்துக்கொள்.கலாச்சாரம் என்ற பெயரில் நடக்கும் சீரழிவு,சீர்கேடுகளின் அருகே கூட நெருங்காதே!

பள்ளிப்பருவம் முடிந்த பிறகு பயனுள்ள கல்வியை கற்றுக்கொள்.
தொலைத்தொடர்பு சாதனங்களை பயனுள்ள முறையில் பயன்படுத்து.
அவற்றைக்கொண்டு நன்மையை ஏவி,தீமையைத்தடு.அப்போது உனக்கு ஏற்படும் சிரமங்களை பொறுத்துக்கொள்.அதுவே வீரமிக்க காரியமாகும்.

இளமைப்பருவத்தில் உன் வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும்போது இறைவனின் கட்டளையைப்பின்பற்று.உன் தாய்,தந்தையான எங்களுக்கு இறைவனின் அருளை வேண்டி தினமும் பிரார்த்தனை செய்.

இறைக்கட்டளைக்கு ஒரு போதும் மாறு செய்யாதே...
இதைப்படித்த பின் இனி வரும் காலங்களில் உன் 
பிள்ளைகளுக்கு இவ்விஷயங்களை எடுத்துச் சொல்.

எங்களிடம் கண்ணியமாகவும்,அன்புடனும் நடந்து கொள்.வயதான காலத்தில் எங்களின் இயலாமையால் உனக்கு சிரமம் தரும்போது பொறுத்துக்கொள்.எங்கள் இறைவா!என் பெற்றோரின் பாவங்களை மன்னிப்பாயாக....என்று தினமும் பிரார்த்தனை செய்வாயாக.



                                                                                          என்றும் அன்புடன்....                                                                                   
                                                                                        உன் செல்ல அம்மா.     

Thursday, December 6, 2012

விளம்பர வெறி

விளம்பரங்கள் தொழில் போட்டிக்கு மட்டும்தான் பயன்படுத்திய காலம்மலையேறி போய் இப்பொழுது மருத்துவ வியாபாரத்திற்கும்,பருப்பு விற்பதற்கும்,முகத்தின் நிறத்தை (அதிகப்படுத்துவதாக சொல்லப்படும்)பூச்சு விளம்பரத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.



சில விளம்பரங்களில் சிலர் டாக்டராக வந்து இந்த பருப்பை வாங்குங்கள் என்றும்,இன்னும் சில டாக்டர்கள்  எங்க ஹாஸ்பிடலில் கண் வைத்தியம் பாருங்கள் என சொல்வார்கள்.உண்மையிலேயே இவங்க டாக்டரோ என நினைத்தால் அடுத்த விளம்பரத்தில் அரைகுறை ஆடையில் குளியல் சோப்புக்கும்,சேலை விளம்பரத்திற்கும் 
வந்து ஆடிப் போவார்கள்.
இந்த போலி டாக்டரையெல்லாம் யாரும் கைது 
பண்ண மாட்டாங்களா..??


சமீபத்தில் ஒரு பெண்கள் மாதமிருமுறை வரும் இதழ் ஒன்றை பார்த்து அதிர்ச்சி அடைந்துதான் போனேன்.அதில் ஒரு பக்கம் விட்டு ஒரு பக்கத்தில் முழு புத்தகமும் பெண்கள் சம்பந்தப்பட்ட முகப்பூச்சு,உள்ளாடை,சாம்பார் பொடி விளம்பரம்தான்...

பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் தொடர் என ஒரு பக்கம் கதை சொல்லிவிட்டு அடுத்த பக்கம் பெண்களின் சதையை வியாபார பொருளாக சித்தரிக்கும் உள்ளாடை விளம்பரம்...

ஒரு பக்கம் பெண்களின் முகத்தில் ஆசிட் ஊற்றுபவர்களை வன்மையாக கண்டித்துவிட்டு அடுத்த பக்கம் ஆண்களை பின் தொடர வைக்கும் பேரழகிற்க்கு என்று ஒரு பிரபல முகப்பூச்சு கம்பெனியின் விளம்பரம்.

அந்த விளம்பரத்தில் ஒரு அரைகுறை ஆடை அணிந்த 
பெண் பின்னால் ஆறு இளைஞர்கள் பின் தொடர்கிறார்கள். 
இப்படி விளம்பரம் செய்யும் நிறுவனத்தின் அதிபரோ அல்லது விளம்பரத்தை எடுத்த டைரக்டரோ அல்லது இந்த பத்திரிக்கை ஆசிரியரொ இப்படி தன் மகள் பின்னாடியோ,அல்லது சகோதரி பின்னாடியோ இத்தனை ஆண்கள் பின் தொடர்கிறார்கள் என சொல்லப்படுவதை விரும்புவார்களா...????

விளம்பரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் வக்கிரமனம் படைத்தவர்கள் எப்படி பெண்கள் முன்னேற்றதிற்காக பத்திரிக்கை நடத்துகிறோம் என வாய் கூசாமல் சொல்லுகிறார்களோ தெரியவில்லை....???

சில விளம்பரங்களில் குழந்தைகளை குறி வைத்து சாக்லேட்,பிஸ்கட்,ஐஸ்கிரீம் என வியாபாரம் செய்யும் சுயநல 
கும்பல்.பாலில் கலந்து கொடுக்கப்படும் அந்த மாவு விற்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு முறையும் இலவச பொருள்.
நம் மக்களும் வாயை ஆ வென பிளந்து கொண்டு அதை வாங்கி கொடுப்பார்கள்.

இதுல முட்டை வடிவத்தில் உள்ள பிளாஸ்டிக் உருளையில் மிகச்சிறியதாக  ஒரு வகை திண்பண்டம் இருக்கும்...அது விலை மட்டும் 35 ருபாய் இருக்கும்.எனக்கு தெரிந்த எத்தனை பிள்ளைகள் அதை கேட்டு தன் தாய்மார்களிடம் அழுது பிரண்டிருப்பார்கள் தெரியுமா...?
நடுத்தர வர்க்க தாய்மார்களோ அதுக்கு ஒரு கிலோ அரிசி வாங்கிடலாம்னு சொல்வாங்க....விளம்பரத்தில் பார்ப்பதை எல்லாம் தாய் வாங்கித்தரவில்லையென்றால் பிள்ளைகள் விரோதிகளாக பார்க்கின்றனர்.

பத்திரிக்கை தர்மம் என ஒன்று சொல்வார்கள்...
அது என்னனு தெரியலை.பெண்களையும்,குழந்தைகளையும் 
வியாபார பொருளாக சித்தரிக்கும் இவர்களுக்கு என்னுடைய 
 மிகக் கடுமையான கண்டங்கள்.

Monday, December 3, 2012

பிளீஸ் அம்மா.....!!!


  • நான் சிறிய குழந்தை.என் கைகளும் விரல்களும் ரொம்ப சிறியது.வலுவானவையும் அல்ல.எதனையும் உங்களைப்போல் அழகாக நன்றாகச் செய்ய வேண்டும் என்று எண்ணாதீர்கள்!!
  • என் கால்கள் சின்னவை மட்டும் அல்ல,வலிமையானவையும் அல்ல.என்னை உங்களுடன் அழைத்துச்செல்லும்போது மெதுவாக நடந்து செல்லுங்கள்.உங்கள் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்கமுடியாது.
  • என் கண்கள் மிகச்சிறியவை.உங்கள் கண்ணுக்கு எட்டுவது எல்லாம் என் கண்ணுக்கும் எட்ட வேண்டும் என்று எண்ணாதீர்கள்.
  • என்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப்பேசி என் மனதில் வெறுப்பு உணர்ச்சியை வளர்க்காதீர்கள்.நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.என்னை கேவலமாக பேசாதீர்கள்.ஏனென்றால் என் மனதில் தாழ்வு மனப்பான்மை வந்துவிடும்.
  • நான் ஏதாவது கேள்வி கேட்டால் கோபித்துக்கொள்ளாதீர்கள்.நான் நிறைய தெரிந்து கொள்ளவிரும்புகிறேன்.தயவு செய்து பொறுமையாக,எளிதாக எனக்கு பதில் கூறுங்கள்.
  • நான் தவறு செய்தால்,குறை கூறி தண்டிக்காதீர்கள்.தவறை எடுத்துக்கூறி என்னை திருத்துங்கள்.அப்போதுதான் எது தவறு,எது சரி என்று என்னால் புரிந்து கொள்ள முடியும்.
  • விடுமுறை நாட்களில் என்னை உறவினர் வீட்டில் விட்டு விட்டுச்செல்லாதீர்கள்.நான் உங்களுடன் தான் பொழுதைக்கழிக்க விரும்புகிறேன்.எனக்கு உங்கள் அன்பும்,அரவனைப்பும் நிறையத்தேவை.
  • நீங்கள் எனக்கு நல்ல முன் உதாரணமாக இருங்கள்!உங்களைப்பின்பற்றித்தான் நான் வளர விரும்புகிறேன்.
  • இறைவன் உங்களுக்கு கொடுத்த பரிசாக என்னை நினைத்து,நன்றாகப் பாதுகாத்து,நான் வளர விரும்புகிறேன்.
  • எனக்கு இறைவன் கொடுத்த பொக்கிஷமாக உங்களை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்.
    இப்படிக்கு
    உங்கள் செல்லக்குழந்தை

    நபி ஸல் அவர்கள் பெற்றோரைப்பார்த்து கூறுகிறார்கள்:
    அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்.
    (நூல்:புகாரி-5997)



சமீபத்தில் சகோதரி ஒருவரின் உறவினர் வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அந்த வீட்டில் ஐந்து வயதில் ஒரு குட்டி பையன் இருந்தான்...அமைதியாக இருந்தான்...எங்களிடம் பேசவில்லை.
வெளியே மழை பெய்தது...அவனுடைய தாத்தா வெளியே செல்லும்போது தானும் வருகிறேன் என அடம்பிடித்தான்....அவர் மழை பெய்கிறது நீ வர வேணாம் என விட்டு விட்டு சென்றுவிட்டார்...

அரைமணிநேரம் விடாது அழுகை...
நான் அவனுடைய அம்மாவிடம் அவனைப்பற்றிக்கேட்டேன்...
அவனுக்கு ஸ்கூல் ஒரு வாரம் லீவு...வீட்டுல வச்சு சமாளிக்கமுடியலைனு ரொம்ப வருத்தப்பட்டாங்க.

அவனுக்கு விளையாட துணைக்கு ஆள் இல்லையா என்று?என்நாத்தனார்பையனோடவிளையாடுவான்.ஆனால்,கொஞ்ச நேரத்துல ரெண்டுபேரும் சண்டை போடுறாங்க....அதான் அங்க நான் விடுறதில்லைனு சொன்னாங்க.அவனுக்கு நீங்க துணைக்கு தம்பி பாப்பா பெற்றுக்கொடுத்தா என்னனு கேட்டேன்....சிரிச்சாங்க...

அவனை எங்கேயாவது பக்கத்தில் பார்க்,பீச்,உறவினர் வீட்டுக்கு அழைச்சிட்டு போங்களேன்னு சொன்னேன்.அதுக்கெல்லாம் எங்க டைம் இருக்கு..வீட்டு வேலையே சரியா இருக்கு என்று சொன்னார்கள்.

அவனுக்கு பெயிண்டிங் பண்ண பிடிக்குமா?பிடிக்கும்னு சொன்னாங்க.அதையாவது செய்ய சொல்லலாமேனு சொன்னேன்.
க்ளே வச்சு ஏதாவது பொம்மை செய்ய சொல்லுங்களேன்....அவனுக்கு ஏதாவது பொழுதுபோக்கு வேணும்ல..கேட்டதற்கு,
அது எல்லாம் ஸ்கூல்லயே சொல்லி கொடுப்பாங்க....னு 
அவனுடைய அம்மா பதில் சொன்னாங்க....
அதிகமான வீடுகளில் இதுதான் நிலைமையாக உள்ளது...

விளையாடும் பருவத்தில் வீட்டிற்குள் அடைத்துவைப்பது பிள்ளைகளுக்கு மனரீதியாக அழுத்தத்தை தரும்...
வீட்டில் கண்டிப்பாக பிளாக் போர்ட்,சாக் பீஸ் கொடுத்து 
எழுத சொல்லுங்களேன்..பிள்ளைகளுக்கு ஆளுமைத் திறமை வளரும்....

நீங்க ஆசையா வாங்கி கொடுத்த காரை பையன் உடைச்சிட்டானா
கவலைப்படாதீங்க....வேற வாங்கி கொடுங்க...
பொம்மையை தண்ணிக்குள்ள போட்டுட்டானா....!!!
வேற வழியே இல்லை...
புதுசு வாங்கிதான் கொடுக்கணும்...

அது அப்படியே இருக்கணும்னா அப்ப அந்த பொம்மை கடையிலதான் இருக்கணும்...விலை கொடுத்து வாங்க கூடாது...

களிமண்ணில் பொம்மை செய்வது,கிளே பொம்மை செய்வது,கிராப்ட் வொர்க்,பெயிண்டிங் போன்றவை குழந்தைகளின் திறமையை வெளிக்கொண்டு வருபவை....

நமக்கு எப்படி மனதில் உள்ளதை எழுத்தின் மூலம் பதிவாக எழுதும்போது மனதில் உள்ளதை இறக்கி வைத்த சந்தோசம் ஏற்படுகிறதோ
குழந்தைகளுக்கு அவையெல்லாம் மிகுந்த சந்தோசத்தை கொடுக்கும்...

அந்த காலத்தில்  வீட்டுக்கு அரை டஜன் பிள்ளைகளாவது இருப்பார்கள்...
அடிச்சு விளையாடிக்கொண்டாலும் ஒன்றாய் சேர்ந்தும் கொள்வர்...
என்ன திண்பண்டமாக இருந்தாலும் பகிர்ந்து உண்ணும் பழக்கமும் இருந்தது...அண்ணன் சட்டையை தம்பி போடுவதும்,அக்காவின் பாவாடையை தங்கை உடுத்துவதும் குடும்பத்து கஷ்டத்தை உணர்ந்து
விட்டுக்கொடுக்கும் பழக்கம் நம் தலைமுறையிடம் இருந்தது...

இப்ப உள்ள வீடுகளில் விளையாட ஆள் இல்லாமல் ஒரு ஆண் பிள்ளை,ஒரு பெண் பிள்ளை உள்ள வீடுகளில் பிடிவாதம் அதிகமாக உள்ளதாக பெற்றோர்கள் புலம்புகின்றனர்...

பிள்ளைகளுக்கு விளையாட சரியான ஆள் கிடைத்துவிட்டால் போதும்..
எங்கு சுவரைக்கண்டாலும் ஏறிக் குதிக்கும் சில வாண்டுகளை
பார்க்கிற்கு கண்டிப்பாக அழைத்துச்சென்று கம்பி வளையங்களில் தொங்க விட்டால் போதும்...குஷியாகி விடுவர்....

சில வீடுகளில் 3 அல்லது 4 ஆண்களுடன் பிறந்த 1 பெண்ணை செல்லமாக
வளர்ப்பதால் மற்ற பெண்களின் உணர்வு அந்த பெண்ணுக்கு தெரிய வாய்ப்பில்லை.....

3அல்லது 4 பெண்களுடன் பிறந்த 1 ஆணுக்கு இன்னொரு ஆணின் உணர்வுகள் தெரிய வாய்ப்பில்லாமல் போகிறது...

ஒரு ஆண்,ஒரு பெண் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக கேட்பதை எல்லாம் வாங்கி கொடுக்கின்றனர்....

அக்காலத்தில் ஒரு மேரி கோல்ட் பிஸ்கட் வாங்கி வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆளுக்கு 2 கொடுப்பார்கள்....
ஆனால்,இப்பொழுதோ கண்ணில் கண்டதெல்லாம் 
வாங்கி கொடுப்பதால் அதன் அருமை பிள்ளைகளுக்கு தெரிவதில்லை....

அதிக செல்லம் கொடுக்கப்படும் பிள்ளைகள் கஷ்டத்தை உணராததால்
பிடிவாத குணம் உடையவர்களாகவும்,பின்னாளில் இப்பிரச்சினை
வாழ்க்கைத்துணையிடமும் எதிரொலித்து திருமணவாழ்க்கை உடைய காரணமாக உள்ளது....

பி்ள்ளைகளுக்கு பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை கண்டிப்பாக பழக்குங்கள்..
எதற்கெடுத்தாலும் படிப்பு,ஹோம் ஒர்க் என மிரட்டாமல் கொஞ்சி பேசுங்கள்....பிள்ளைகள் நம்மிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்...

பாவம் குழந்தைகள்...விளையாட அனுமதியுங்கள்....