Tuesday, November 27, 2012

நாமதான் நெய்வேலி...நாமதான் கூடங்குளம்!!’’

’’வருஷத்துக்கு ஆறு சிலிண்டர் தந்தா என்ன??
அறுபத்திநாலு சிலிண்டர் தந்தா என்ன????
இதை பத்தியெல்லாம் எங்களுக்கு கவலையே இல்லை...ஏன்னா நாங்க தோட்டத்துலயே கேஸ் உற்பத்தி தொழிற்சாலை வச்சிருக்கோம்ல’’
என்று தெம்பாக சொல்கிறார்கள்,கோயமுத்தூர் சாளைப்பாளையத்தை சேர்ந்த தங்கவேல்-கவிதா தம்பதி!

இவர்கள் அமைத்திருப்பது சாண எரிவாயு கலன்...
செலவு மொத்தம் 10 ஆயிரம் மட்டுமே!!!!
இதன் மூலம் வீட்டுக்கு தேவையான கேஸை தயாரிக்கிறார்கள்...
சுற்றுசூழலுக்கு பங்கம் இல்லாத மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்யப்படும் பேட்டரி பைக்கினை கடந்த 2 ஆண்டுகளாக 
பயன்படுத்தி வருகிறார்...

‘30ஆயிரம் ருபாயில் வாங்கிய பின்பு 600 லிட்டர் பெட்ரோலை மிச்சம் செய்துள்ளேன்’’என சொல்லும் தங்கவேல்,மாடுகளை அதிகரித்து,அதன் மூலம் பயோகேஸையும் அதிகரித்து ,என் குடும்பத்துக்கு தேவையான
சமையல் எரிவாயுவையும்,மின்சார உற்பத்தியையும் செய்து கொள்ளப்போகிறேன்.

இனிவரும் காலங்களில் கண்டிப்பாக விவசாயிகள் அனைவரும்
இதை நோக்கி வந்தே ஆக வேண்டும்.அரசாங்கம் கொடுக்கும் மின்சாரம்,சிலிண்டர் எதுவும் நமக்கு தேவையில்லை....

நாலு மாடு இருந்தால்,
நாமதான் நெய்வேலி,நாம தான் கூடங்குளம்.
அதற்கான நேரம் நெருங்கிவிட்டது’’
என்கிறார் அழுத்தமாக.


மொட்டை மாடியிலேயே காற்றாலை மற்றும் சூரியத்தகடுகள்
அமைத்து,மின்சாரம் உற்பத்தி செய்வதோடு,எரிவாயு உற்பத்தி செய்கிறார் கோயமுத்தூர் சாய்பாபா காலனியை சேர்ந்த பிரபு!!!

‘கரண்ட் இல்லாமல் பிஸினஸில் 
சிரமப்பட்டபோதுதான்சோலார் யோசனை தோன்றியது...
ஆனால்,செலவு அதிகமாக இருந்த்தால் தன் சகோதரருடன் 
சேர்ந்து‘மினி விண்ட் மில்’இயந்திரங்களை தயாரித்து மாடியில் பொருத்தினோம்.24மணிநேரமும் தடையில்லாமல் கரண்ட் கிடைக்குது.


முதலில் 3000ருபாய் கரண்ட் பில் கட்டினோம்...
இப்ப வெறும் 40 ருபாய் மட்டுமே கட்டுறோம்!!!
மொத்த செலவு 3லட்சம்...இந்த இயந்திரங்கள்
 25 வருஷம் வரைக்கும் கூட ரிப்பேர் ஆகாது...

காய்கறிகழிவு மூலமாக பயோ-கேஸ் உற்பத்தி செஞ்சு 
சமைக்கிறோம்.அதனால வருஷத்துக்கு 12 சிலிண்டர் செலவு மிச்சம்...
அதே மாதிரி பேட்டரியில் ஓடும் இ-பைக் பயன்படுத்துவதால் 
வருஷத்துக்கு 200லிட்டர் பெட்ரோல் செலவு மிச்சம்.
ஆரம்பகட்ட செலவை பத்தி யோசிக்காம ...முதலீடு பண்ணிட்டா
வருஷம் முழுக்க நிம்மதியா இருக்கலாம்....!!!’’என்று விடை கொடுத்தார்.

வீட்டிற்கான கேஸ் செலவை எளிதாக பூர்த்தி செய்ய கன்னியாகுமரி,விவேகானந்தா கேந்திராவின் ‘இயற்கை வள அபிவிருத்திமையம்’எளிய செலவில் சக்தி சுரபி எரிவாயுக்கலனை
தயாரித்துக்கொடுக்கிறது...

ஒரு கனமீட்டர் வாயுவை உற்பத்தி செய்வதற்கான செலவு 18000 ருபாய் மட்டுமே ஆகும்....4,000 ருபாய் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது.
4பேர் உள்ள குடுமபத்துக்கு இந்த கலன் போதுமானதாகும்.

பயன்படுத்தமுடியாத சோறு,சப்பாத்தி,காய்கறி,
கூட்டு போன்றவை;மீன்,மாமிசம்,காய்,கனி ஆகியவற்றின் கழிவுகள்;
மாவு ஆலைக்கழிவு பொருட்கள்;உண்ணத்தகாத எண்ணெய் வித்துக்களின் பொருட்களனைத்தையும் இதில் பயன்படுத்தலாம்...

இதைப்பற்றி மகாதானபுரத்தை சேர்ந்த சம்பத்குமார் கூறுகிறார்.
‘எங்க வீட்டுல மொத்தம் 3 பேரு.அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி
பின்ன இருந்த காலி இடத்துல சமையலுக்கு சக்தி சுரபி கேஸ் போட்டோம்.அந்த இடத்துல 24 தென்னை மரங்கள் நின்னுச்சு.வீட்டுல மிச்சமாகுற சாப்பாடு,காய்கறிக்கழிவு எல்லாத்தையும் கலனுக்குள்ள போட்டுடுவோம்...அதுல இருந்து கிடைக்கிற கேஸ் எங்களுக்கு போதுமானதாக இருந்தது...

அதுல இருந்து வெளிவரும் கழிவை என்ன பண்றதுன்னு தெரியாம தென்னைக்கு விட்டுப்பார்த்தால் கொஞ்ச நாளிலே மகசூல் அதிகரித்தது...அதை பயன்படுத்தி வீட்டுத்தோட்டம் போட்டாச்சு....வீட்டுத்தேவைக்கு கேஸ் செலவும் இல்லை
காய்கறி வாங்கும் செலவு இல்லை...
உரம் வாங்கும் செலவும் இல்லை....’

தொடர்புக்கு:விவேகானந்தா கேந்திராவின் இயற்கை 
வள அபிவிருத்தி மைய திட்ட ஒருங்கிணைப்பாளர்:
ராமகிருஷ்ணன்
செல்:9442653975. 

Sunday, November 25, 2012

காணாமல் போன ஊருணிகள்

தண்ணீர் மனிதனின் அன்றாடத்தேவைகளில் மிக மிக அவசியமானது...தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்கும் இடங்களில்
மக்கள் அதிகமாக வசித்தனர்....நம்முடைய முன்னோர்கள் தகவல் தொழில்நுட்பம் இல்லாத காலங்களிலும் கூட பின் வரும் சந்ததிகளுக்காக பாதுகாப்பாகவும்,வசதியுடனும் வாழ்வதற்கும்
நீர் நிலைகளையும்,சாலைகள் எங்கும் மரங்களையும் நட்டனர்.....

தகவல் தொழிநுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் உள்ள நம்மை விட
பின் வரும் சமூகத்திற்காக மிகுந்த பயன் தரும் செயலை செய்த
அவர்களே அறிவாளிகள்....

நீர்க்கரைகள் மனித வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை...
நாமும் இத்தனை நாட்களாக நதிகளை ஒன்றிணைப்போம் என
பேசிக்கொண்டிருக்கிறோமே தவிர அரசாங்கமோ,அரசியல் கட்சிகளோ
ஏன் இணையதளங்களில் வாய்ச்சொல்வீரர்களாக இருக்கும் நாம் கூட 
அதை பற்றி சிந்திப்பதில்லை....

நாம் உண்டு...நம் வேலை உண்டு....என சுயநலம் மிகுந்த சமுதாயமாகஇருக்கிறோம்.....இப்படியே இருந்தால் 
நம் பிள்ளைகள் காணாமல் போன தண்ணீர் 
என்ற பதிவு எழுத வேண்டி இருக்கும்....



நம் முன்னோர்கள் பார்த்து பார்த்து வெட்டி வச்ச ஊருணிகள் 
எல்லாம் இப்பொழுது குப்பை கிடங்காக மாறி உள்ளது...எங்கள் ஊர் பரமக்குடியில் எனக்கு விபரம் தெரிந்து 2 ஊருணிகள் 
குப்பை  கிடங்காக இருந்து இப்போது ஊருணி இருந்த இடமே தெரியவில்லை....

ஒரு ஊருணி சிறுவர் பூங்காவாகவும்,இன்னொரு ஊருணி
பள்ளிக்கூடமாகவும் மாற்றப்பட்டுவிட்டது...
நீர்க்கரைகள் அனைத்தும்  ஊரில் மிக பள்ளமாக அமைக்கப்பட்டு
மழைநீர் தானாகவே ஓடி வருவது போல அமைக்கப்பட்டு இருந்தது...

ஊருணி தற்போது மூடப்பட்டதால் மெயின் ரோடுகளில் மழைத்தண்ணீர் தேங்கி நின்று  பள்ளிக்கூடத்தில் இருந்து வரும்போது சாக்கடையும்,மழைத்தண்ணீரும் கலந்த நீரில் முழங்கால் 
வரை நனைந்துவீடு வந்து சேருவோம்....

சென்ற வருடம் விகடன் குழுமத்தில் இருந்து வெளியாகும் பசுமை விகடன் இதழில் ஒரு விவசாயி தண்ணீருக்கு அரசாங்கத்தை நம்பாமல்
தன் நிலத்திற்குள் தானே ஒரு சிறிய குளம் வெட்டி,மழை நீரை சேமித்து வருடம் முழுதும் தண்ணீர் கிடைக்கிறது,எதற்கு நதிநீரை இணைக்கலைன்னு கவலைப்படணும்னு கேட்டிருந்தார்...
உண்மைதான்....சரியான கேள்வி....

குளம்,ஊருணி மூலமாக நிலத்தில் தண்ணீர் சேமித்து \
வைக்கப்பட்டுதண்ணீரும் சுவையுள்ளதாக மாறுகிறது...
யாரையும் நம்ப வேண்டும் என்ற அவசியமில்லை...
தன் கையே தனக்கு உதவி...!!!

சென்னைக்கு அருகே திருக்கழுக்குன்றம் பக்கத்தில் 
இருக்கும் எடையூர் கிராமத்தில் ஜெர்மனியில் இருந்து 
வந்த டிர்க் வால்த்தர் என்னும் 
நீர் மேலாண்மை பட்டதாரி தண்ணீர் வளத்தை அதிகப்படுத்த
நம் முன்னோர்கள் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வந்த ஊருணி,குளங்களுக்கு சுத்தப்படுத்தி உயிர் கொடுக்கிறார் ....
இவருக்கு உதவியாக இருப்பது அண்ணா பல்கலைக்கழக
சுற்று புற சூழல் துறைதான்.....
அக்கம் பக்கத்து கிராமங்களான எடையூர்,கீரப்பாக்கம்,
பட்டிக்காடு என மூன்று கிராமங்களில் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்ட ஊருணி திட்டம்
தற்போது 2ஆண்டுகளை தாண்டி வெற்றிகரமாக 
கை கொடுத்து கொண்டிருக்க
அடுத்து தமிழகம் முழுதும் இத்திட்டத்தை நீட்டிக்கும் 
வகையில் ஏற்பாடு நடைபெறுகிறது ....


நம் முன்னோர்களால் தோண்டப்பட்ட ஊருணியின் பயன்கள்:-

சாதாரண ஊர்க்குளம். இதைப்போல ஒரு லட்சம் குளங்கள் தமிழகம் எங்கும் இருக்கும். பல பயனின்றி அழிந்துபோயிருக்கும். ஆனால், இந்த ஊருணிகள் கட்டப்பட்டபோது, மிகத் தெளிவான ஒரு முறை இருந்திருக்கிறது.

ஊருணியின் வடிவமைப்பு. அதாவது அதன் ஆழம், அதன் நீள, அகலங்கள். இது சில கணிப்புகளை உள்ளடக்கியது. அந்தப் பகுதியின் மழை எவ்வளவு, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர்த் தேவை எவ்வளவு? இதைக் கொண்டுதான் இந்த வடிவமைப்பு இருக்கும்.


ஊருணியில் ஓரிடத்தில் ஒரு கிணறு இருக்கும். மழை குறைவாக இருக்கும்போது ஊருணி முழுவதும் வற்றிவிட்டாலும் அந்தக் கிணறிலிருந்து நீர் கிடைக்கும். அவ்வப்போது ஊருணி வற்றவேண்டும். அப்போதுதான் அதில் படர்ந்திருக்கும் பாசிகளை நீக்கிச் சுத்தம் செய்ய முடியும்.

நீர்ப் பிடிப்புப் பகுதி. ஊருணி என்பது ஊறும் நிலத்தடி நீரைக் கொண்டதல்ல. அது வான் மழை நீரைக் கொண்டது. அதாவது ரெயின் வாட்டர் ஹார்வெஸ்டிங்:-) ஒரு பெரும் நிலப்பரப்பில் பொழியும் மழை நீரைச் சேமித்து ஊருணிக்குக் கொண்டுசெல்லவேண்டும். அதற்கு ஏற்றார்போல ஊருணி இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும். 

மழை நீர் ஓடிவந்து சேரும் பாதைகளை உருவாக்கவேண்டும்.
இந்த மழை நீர்ச் சேகரிப்புப் பகுதியில் அசுத்தங்கள், முக்கியமாக மனிதர்களும் கால்நடைகளும் மலம், சிறுநீர் கழிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

இந்த மழைநீர் அப்படியே ஊருணிக்குள் செல்லாமல் ஒரு வடிகட்டி வழியாகச் செல்லவேண்டும். இந்த வடிகட்டியில் பல நிலைகள் இருக்கும். நாம் சிறு வகுப்பில் படிக்கும் முறைதான். பெரிய கற்கள், சிறிய கற்கள், பெரிய மணற்துகள், நன்கு சலிக்கப்பட்ட சிறிய மணற்துகள். இதையெல்லாம் தாண்டி நீர் உள்ளே வந்தால் பெரும்பாலான அழுக்குகள் நீக்கப்பட்டுவிடும்.

மனித உடலுக்குத் தீங்கு செய்யும் நுண்ணுயிரிகள் பரவாமல் இருக்க ஊருணியின் அமைப்பே உதவும். ஊருணியின் ஒரு முனையிலிருந்து நீர் உள்ளே வருகிறது. மறுமுனையிலிருந்து நீர் வெளியே எடுக்கப்படுகிறது. இடப்பட்ட தூரத்தைக் கடப்பதற்குள் நுண்ணுயிரிகள் பெரும்பாலும் இறந்துவிடுகின்றன.

ஊருணியில் யாரும் கால் வைக்கமாட்டார்கள். குளிக்க, துவைக்கமாட்டார்கள். ஆடு மாடுகள் செல்லாதவாறு பார்த்துக்கொள்வார்கள். முன்காலங்களில் எப்படி இதனைச் செய்தார்களோ, ஆனால் இப்போது நான் பார்த்த இடத்தில் நல்ல சுற்றுச் சுவர் எழுப்பி, பூட்டு கொண்டு பூட்டிவைத்துள்ளனர்.

அருகில் இருக்கும் மரங்களில் வசிக்கும் பறவைகள், விலங்குகள் ஊருணி நீரில் அசுத்தம் செய்தால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. பெரும்பாலும் வடிகட்டிகள் வழியாக நீர் வெளியே வரும்போது இவற்றின் தாக்கம் ஏதும் இருக்காது.....இப்படிப்பட்ட பயன்களைத்தரும் .


இந்த பதிவு எல்லோரும் படித்துவிட்டு போக அல்ல...
ஏன் நாமும் இதை செய்யக்கூடாது...??
பேசுவதற்கும்,எழுதுவதற்கும் லட்சம் பேர் இருக்கலாம்....
செயலில் இறங்குபவர் சில பேரே....
நாமும் அதில் ஒரு ஆளாக இறங்கி பணி செய்வோமா???

நம் ஊரில் உள்ள ஊருணிகளை,குளங்களை ஊர் மீது அக்கறையும், 
நல் உள்ளம் கொண்ட மனிதர்களோடு சுத்தம் செய்வதற்கு 
ஆயத்தம் செய்வோமா???
அல்லது அதற்கான பொருளாதார உதவிகளை 
செய்ய ஒரு குழு அமைப்போமா???

முன்னேற்றத்தை நோக்கி அது எவ்வளவு சிறியதாக 
இருந்தாலும் அடியெடுத்து வையுங்கள் .....!!!


 நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள் ...
1.ஒருவர் தான் கற்ற கல்வியை மற்றவருக்கு கற்பித்து பரப்ப செய்தல் ,
2.தான்  விட்டு சென்ற நல்ல பிள்ளைகள் 
3.அனந்தரசொத்தாக விட்டு சென்ற குர் ஆன் 
4.தான் கட்டிய பள்ளிவாசல் 
5.தான் கட்டிய வழிபோக்கர்கள் தங்கும் விடுதி 
6.தான் அமைத்த ஆறு 
7.மரணித்த பின்பும் நன்மைகள் கிடைக்க தன் வாழ்நாளில் ஆரோக்கியமான நிலையில் 
செய்த தான தர்மம்  ஆகியவை ஒரு மூமின் மரணித்த பின்பும் 
அவருக்கு நன்மைகளை சேர்க்கும் ..
#இப்னுமாஜா -242.

Tuesday, November 20, 2012

விசைப்பலகை வீரர்கள்


புதிய ஊடகங்களின் செயல்பாடுகள் கருத்துச் சுதந்திரமா, கண்ணியமான நடத்தையா என்கிற கேள்வியை அண்மையில் எழுப்பியுள்ளன


கடந்த சில ஆண்டுகளாக செய்திகளை முந்தித் தரும் ஊடகமாக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் உருவெடுத்து வருகின்றன. 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைப் பற்றிய செய்திகள், மற்ற ஊடகவியலாளர்கள் தங்கள் கேமராவுக்கு பேட்டரி போடுவதற்கு முன்பாக, ட்விட்டர் இணையதளத்திலும், படங்கள் ஃப்ளிக்கர் இணையதளங்களிலும் வெளிவந்து உலகை அதிரவைத்தன. குண்டுவெடிப்புகளையும், துப்பாக்கிச்சூடுகளையும் நேரடியாகப் பார்த்தவர்கள் அது குறித்த செய்திகளை இணையத்தைப் பயன்படுத்தி மொபைல் போன் மூலமாக சுடச்சுடப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்கள். அப்போது ஐந்து நொடிகளுக்கு சராசரியாக எழுபது ட்விட்டர் செய்திகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.


பின்லேடனின் மரணத்தைக்கூட முதன்முதலாக உலகுக்கு அறிவித்தது அமெரிக்க அரசாங்கமல்ல. பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு ட்விட்டர். ஷோயப் அக்தர் என்கிற அவர், ஒபாமா இருந்த நகரத்தில் வசித்தார். இரவு ஒரு மணிக்கு அம்மோதாபாத் நகரில் ஹெலிகாப்டர் பறப்பது விசித்திரமாக இருக்கிறது என்று முதல் ட்விட்டை இட்டவர், அடுத்தடுத்து அங்கே என்ன நடக்கிறது என்பதை ட்விட்டர் வாயிலாக உலகுக்கு வெளிப்படுத்தினார்.


தகவல் பரிமாற்றத்தில் சமூக வலைத்தளங்கள் ஒரு புது வெள்ளம்போல் பாய்ந்திருக்கின்றன. ஆனால் அவை செய்திகளை மட்டும் சொல்வதில்லை, செய்திகளோடு கருத்துக்களையும் சேர்த்துச் சொல்கின்றன. சில சமயம் கருத்துக்களையே செய்திகளைப்போலச் சொல்கின்றன. சில நேரம் விரைவாகச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில் வதந்திகளையும் செய்திகளைப்போலச் சொல்கின்றன.


சாண்டிப் புயல் நியூயார்க்கைத் தாக்கியபோது, வீதிகளில் ஓடிய வெள்ளத்தில் திமிங்கலங்கள் நீந்தி வருவதைப் போலவும், அங்குள்ள சுதந்திர தேவி சிலைக்குமேல் பயங்கர மேகங்கள் கவிந்திருப்பதைப் போலவும் கிராபிக் வேலை செய்யப்பட்ட அச்சுறுத்தும் படங்கள் வலையேற்றப்பட்டன.


அதேபோல கூடங்குளம் அணுமின் நிலைய முற்றுகைப் போராட்டத்தின்போது, போலீஸ் தாக்குதலில் ஒரு கைக்குழந்தை இறந்துவிட்டதாகச் சொல்லி, யாரோ ஒருவர் ஏதோ ஒரு குழந்தையின் போட்டோவை ஃபேஸ்புக் தளத்தில் ஏற்றினார். அதைக் கண்டவுடனே ஆயிரக்கணக்கானவர்கள் வேறு எந்த விசாரணையும் சரிபார்த்தலுமின்றி அந்தப் படத்தை தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தனர். இது லட்சக்கணக்கானவர்களை உடனடியாக சில நிமிடங்களில் உசுப்பேற்றத் தொடங்கியது. உண்மையில் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை.


லட்சக்கணக்கானவர்கள் இந்த சமூக ஊடகங்களைச் செலவின்றி பார்க்கிறார்கள் (சிலர் பார்ப்பதையே வேலையாக வைத்திருக்கிறார்கள்) என்பதாலும் பார்த்த /படித்தவுடன் கருத்துச் சொல்ல முடிகிறது (கருத்துக்குக் கருத்துக்கு கருத்து என ஒரு சங்கிலித் தொடரும் சாத்தியம்) என்பதாலும் கவனம் பெறத் துடிக்கும் கருத்துக் கந்தசாமிகள் இந்த ஊடகங்களில் ஏராளமாக உலவுகிறார்கள். அவர்கள் நோக்கம் செய்திகளை/தகவல்களைப் பகிர்ந்துகொள்வதல்ல. மற்றவர்களின் கவனத்தைப் பெற்று, ‘பிரபலமாகி’ விட வேண்டும் என்ற தவிப்புதான்.பெண்கள் கல்லூரி வழியாகப் போகும் சிட்டி பஸ்ஸில், ஃபுட்போர்டில் தொங்கிக் கொண்டு போகும் விடலைகளைப்போல அல்லது பெரியவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் வீட்டிற்கு வந்த விருந்தினர்களின் கவனத்தை ஈர்க்க விரும்பும் குழந்தைகளைப்போல சிலர், ‘வீர தீரத்துடன்’ இந்த ஊடகங்களில் கருத்துக்களை உதிர்ப்பதுமுண்டு. இந்த ஊடகங்களில் வீர பராக்கிரமத்தைக் காட்டுவதற்கு பெரிய முயற்சிகள் தேவையில்லை. ஒரு கணினியும் விசைப்பலகையும் இருந்தால்போதும், அவர்கள் பெயரைக்கூட மறைத்துக் கொண்டு விமர்சனங்களை வீசலாம். எவ்வளவுக்கு எவ்வளவு கடுமையாக அல்லது கொச்சையாக கருத்துக்கள் இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு கவனம் திரும்பும் என்பது சில வி.வீ.க்களின் நம்பிக்கை.


இதைக் கருத்து சுதந்திரம் என்று முலாம் பூசும் விசைப்பலகை வீரர்கள், இணையம் கட்டற்ற சுதந்திரம் கொண்ட ஊடகம் என்றும் வாதிடுகிறார்கள். உண்மையில் சமூக ஊடகங்கள் கட்டற்ற சுதந்திரம் கொண்டவைதானா?


சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்கள் நியாயமாக பயப்பட பல விஷயங்கள் இருக்கின்றன. ஐ.டி. சட்டப்பிரிவு 66 திருத்தத்தின்படி ஒருவரது மனம் புண்படும் வகையில் இயங்குபவர்களுக்கு தண்டனை கொடுக்க முடியும். இந்த மனம் புண்படுதல் என்பதற்கு சரியான வரையறை இல்லை என்பதுதான் பிரச்சினை. 66-ஏ சட்டப்பிரிவின்கீழ் வழக்கு தொடுக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும். கவனக்குறைவால் ஒருவரின் உயிரைப் பறித்தவர்களுக்கும் இதுதான் தண்டனை எனும்போது, இச்சட்டம் எவ்வளவு கடுமையானது என்பதை உணர்ந்து சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்கள் கவனமாக இயங்க வேண்டும். வலைத்தளங்களில் அவதூறாக எழுதப்பட்டிருப்பதாகக் கருதப்பட்டால் ஐ.டி. சட்டப்பிரிவில் மட்டுமின்றி, இந்திய தண்டனைச் சட்டத்தின் மற்ற பிரிவுகளிலும் (அவதூறு வழக்கு, பெண் வன்கொடுமை, உயிருக்கு அச்சுறுத்தல் மாதிரி பிரிவுகள்) வழக்கு தொடுக்க முடியும்" என்கிறார், வழக்கறிஞர் பி.சுந்தரராஜன்.


அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக காவல்துறைக்கு வந்த இரு புகார்கள் இணையத்தில் தனிநபர்கள் மீது இஷ்டத்திற்குக் கருத்துக்களை வாரி இறைக்கக் கூடாது என்பதை உணர்த்துகின்றன. பின்னணிப் பாடகி சின்மயி சமூக வலைத்தளங்களில் தன்னை அவதூறு செய்ததாக சிலர் மீது புகார் கொடுத்து, இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அளித்த ஒரு புகாரின் காரணமாக, புதுச்சேரியில் ஒரு ட்விட்டர் கைது செய்யப்பட்டார்.


இவை தங்களுடைய ‘கட்டற்ற சுதந்திரத்திற்கு’ ஆபத்து ஏற்படுத்தும் முயற்சி, கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்கள் போர்க்கொடி எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள்.


இந்த விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும் பொது இடத்தில் கண்ணியமாக நடந்துகொள்வது, அதுவும் தனிநபர்கள் பற்றி கருத்துச் சொல்லும்போது கண்ணியம் காப்பது எல்லோருக்கும் நல்லது.


ஒரு விஷயத்துக்கு நாம் கருத்தோ, பதிலோ சொல்ல நினைக்கும்போது, ‘பளிச்’சென்று மூளையில் உதிப்பது முதல் சிந்தனை. அதை எழுத சில வினாடிகள்தான் செலவாகும். சிந்தனை கொஞ்சம் தன்னை சுயபரிசோதனை செய்துகொண்டு, எது சரி - எது தவறு என ஒரு சில விநாடிகளில், முன்னோட்டம் பார்த்துக்கொள்ளும். பின்னர் எழுத்துக்குப் போவது நெறிப்படுத்தப்பட்ட இரண்டாவது சிந்தனை. ஆனால் இங்கே கட்டற்ற சுதந்திரம் கொண்ட இணைய உலகில், விரல் நுனிகள் எப்போதும் பரபரப்பாக வில்லில் பூட்டப்பட்ட அம்புகள்போலவே இருக்கின்றன. இரண்டாவது சிந்தனைக்கு வழியே இல்லை. நமக்கே நாமே நம்மை நெறிப்படுத்திக் கொள்வதுதான் நமக்கிருக்கும் ஒரே வழி" என்கிறார், ட்விட்டரில் இயங்கும் பத்திரிகையாளரான ஜி.கௌதம்.


என்னைப் பொருத்தவரை தனிப்பட்ட விமர்சனங்கள்தான் இம்மாதிரி தொல்லைக்குள் நம்மைத் தள்ளும். நாம் செய்யும் விமர்சனத்தையே நம்மை நோக்கி யாராவது வைத்தால் நம்மால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பதை எல்லையாக வைத்துக்கொள்வது ஓர் எளிய வழி. அதே நேரம் அரசியல் விமர்சனங்கள் நமது உரிமை. ஒருவகையில் குடிமகனாக நமது கடமையும்கூட. இந்த விமர்சனங்கள் தனிநபர் தாக்குதலாய் மாறாதவரையில் பிரச்சினை இல்லை" என்கிறார், வழக்கறிஞர் சுந்தரராஜன்.


சமூக வலைத்தளங்கள் இருமுனைக்கத்தி. அவற்றை காய் நறுக்கப் பயன்படுத்துகிறோமா அல்லது ஆளைக் குத்தப் பயன்படுத்துகிறோமா என்பது அதைப் பயன்படுத்தும் விரல் வீரர்களின் தேர்வு.

விசைப்பலகை வீரர்களுக்கு 6 கட்டளைகள்!


சென்னை சைபர் க்ரைம் தடுப்புப் பிரிவும் ட்விட்டர் இணையதளத்தில் இயங்குகிறது. சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்கள் பாதுகாப்பாக இயங்க பாயிண்டுகளை பட்டியலிடுகிறார்கள்.


இணையங்களில் வாசிக்கும் எதையும் ஆராயாமல் நம்பிவிடாதீர்கள்.
விஷயம் தெரியாமல் எதையாவது டவுன்லோடு செய்துவிடாதீர்கள். சில சாஃப்ட்வேர்கள் மூலமாக உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் அனைத்தையுமே உளவு பார்க்க முடியும்.

உங்களுக்கு சம்பந்தமில்லாத இமெயிலோ, தனிச் செய்தியோ வந்தால் அதற்கு பதிலளிக்காதீர்கள்.

செய்திகளைப் பகிர்வதில் கவனம் தேவை. நீங்கள் பகிர்வதை உலகமே பார்க்கும் என்கிற எண்ணத்தோடு செயல்படுங்கள்.

சண்டைகளில் ஈடுபடாதீர்கள். நேரடி வாழ்வில் நாம் பயன்படுத்தாத சொற்களை இணையச் சண்டைகளில் பயன்படுத்துகிறோம். உங்களோடு யாரேனும் மோசமாக சண்டையிட்டாலும் அவர்களை சட்டை செய்யாதீர்கள்.

இணையத்தில் நீங்கள் எதைச் செய்தாலும் அதை திரும்பப்பெறவே முடியாது. அழித்தாலும் அது சர்வரில் இருக்கும். ஏதோ அவசரத்தில் நீங்கள் பகிரும் படமோ, செய்தியோ, கருத்தோ பத்தாண்டுகள் கழித்தும் இணையத்தில் இருக்கப்போகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்
.
நன்றி:புதிய தலைமுறை.

Friday, November 16, 2012

வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு

பயணங்கள் மனிதனுக்கு நிறைய அனுபவங்களையும் 
படிப்பினைகளையும் தரக்கூடியது..
நாம் பயணிக்கும் ஒவ்வொரு பயணத்திலும் வித விதமான
மனிதர்களையும்,புதுப்புது விஷயங்களையும் தெரிந்து கொள்கிறோம்.

அப்படி எனக்கு ஏற்பட்ட அனுபவம் உங்களுடன் 
பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்...  
8 நாட்களுக்கு  முன்பு பரமக்குடியில் இருந்து  சென்னை வரும் ரயிலில் 
பயணம் செய்தேன்.எனக்கு அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டு இருந்தது..
இரவு 12 மணிக்கு நான் எதார்த்தமாக விழித்தபோது  இருட்டில் ஒரு மனிதர் அப்பர் பெர்த்தில் தூங்கி கொண்டிருந்த ஒருவரின் கால்களுக்கு அருகில் இருந்த ஒரு பேக்கை மிக மிக மெதுவாக 
எடுத்துக் கொண்டு அடுத்து வந்த ஸ்டேசனில் இறங்கினார் ...
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ....
அந்த பேக் தூங்கி கொண்டிருந்தாரே அவருடையதா ??
இல்லை அந்த இருட்டு மனிதன் அவருடைய நண்பரா ??
நண்பரின் தூக்கம் கலையாமல் இருக்க மெதுவாக  எடுக்கிறாரோ என 
குழப்பத்துடன் அரைமணிநேரம் யோசித்துக் கொண்டே இருந்து விட்டு மறுபடியும் தூங்கி விட்டேன்.
தூங்கி கொண்டிருந்தவரின் பெர்த்துக்கு கீழே என் அம்மா
தூங்கி கொண்டிருந்தார்...சரியாக 1 மணி இருக்கும்...
என் அம்மா என்னை எழுப்பினார்....
தூங்கிய மனிதரும்,என் அம்மாவும் என் முன்னால் நின்று கொண்டிருந்தனர்.

என் பேக்கை பார்த்தீர்களா??என்று அப்பாவியாக கேட்டார்...
தூக்கி வாரிப்போட்டது எனக்கு...
‘’அது உங்க பேக்கா??ஒருவர் எடுத்துக்கொண்டு இறங்கினார்...
அவர் உங்க ஃப்ரண்ட்டாக இருக்கும் போல என நினைத்துக்கொண்டேன்’’
ஆனால்,அவர் எடுத்த விதம் எனக்கு சந்தேகமாக இருந்தது....

’’அதில் பணம் ஏதும் இருந்ததா?’’என்று கேட்டேன்...
’’பணம் இல்லை...என் பாஸ்போர்ட்,டாக்குமெண்ட் 
எல்லாம் இருந்தது...’’என்றார்.
எனக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது...

கிட்டத்தட்ட 4 கம்பார்ட்மெண்ட்டிலும் பேக்கை தேடியுள்ளார்.
போலீஸிடம் சென்று கம்ளைண்ட் கொடுங்களேன் என்று சொன்னேன்.
போலீஸை தேடி விட்டேன்....இல்லையே என்றார்...

அவர் ஆர்.எஸ்.மங்களம் என்ற ஊரைச்சேர்ந்தவராம்...
எம்.ஏ படித்துவிட்டு டிரைவிங் கற்றுக்கொண்டு லண்டனில் டிரைவராக பணியாற்றுகிறாராம்....அந்த பேக்கில் டிரைவிங் லைசென்ஸ்,டிக்கெட்,பாஸ்போர்ட் இருந்துள்ளது.
அடுத்தநாள் இரவு சென்னையில் இருந்து ஃப்ளைட்டில்
லண்டன் செல்ல வேண்டுமாம்.லீவுக்கு இந்தியா வந்தாராம்...

என்ன கொடுமை இது???
அவர் எத்தனை கனவுகளுடன் வெளிநாடு செல்ல 
திட்டமிட்டு இருப்பார்...
அவர் முகம் இருளடைந்து விட்டது...
எனக்கு அழுகையாக வந்தது....
சே.....பார்த்தும் ஏன் சுதாரிக்காமல் இருந்து விட்டோம்
என வேதனையாக இருந்தது....
உண்மையில் அன்றுதான் திருடனின் கைவரிசைன்னு 
சொல்வாங்களே அதை கண்ணால் பார்த்தேன்....

எனக்கும்,என் அம்மாவுக்கும் தூக்கமே வரவில்லை...
அடுத்த கேபினில் இருந்த எங்க ஊர்க்காரர் பாத்ரூம் 
செல்ல எழுந்திருப்பார் போல.....எங்களை கடந்து சென்றவர்....
இன்னும் தூங்கவில்லையா??
என்று கேட்டார்....
நடந்த விஷயத்தை சொன்னதும்,
’’அட சண்டாளத்தனமே,பேக்கை தலைக்கு வச்சுகிட்டு 
படுக்கணும்னு அவருக்கு தெரியாதே....
போச்சு...எல்லாம் போச்சு....’’என வருத்தப்பட்டு விட்டு போய் விட்டார்...
சற்று நேரத்தில் போலீசார் வந்து என்னிடம் விசாரித்தனர்.

நடந்ததை நான் சொன்னவுடன் அவருக்கு திட்டு விழுந்தது.
ஏன் சார்...பேக்கை தலைக்கு பக்கத்துல வச்சு படுக்க வேணாமா???
மேடம்...நீங்க சப்தம் போட்டிருக்கலாம்ல என்று என்னிடம் வருத்தப்பட்டார்.

சப்தம் கேட்டு விழித்த இன்னொரு மனிதர்,’’நானும் நாளைக்கு நைட் வெளிநாடு போறேன்...ஆனால்,என் லக்கேஜ் எல்லாத்தையும் பூட்டு போட்டு வச்சுருக்கேன்னு!!!” அவர் சாமர்த்தியத்தை வெளிப்படுத்தினார்...
போச்சு...போச்சு..எல்லாம் போச்சு,அவர் லைஃபே போச்சு 
என பரிதாபப் பட்டுபேசினார்...

பாவம் அவர்....நீங்க வேற அவரை 
டென்சனாக்காதீங்க என்று சொன்னேன்.
அவர் வந்து தன் சூட்கேஸை எடுக்கும்போது,’’கவலைப்படாதீங்க....
உங்க பாஸ்போர்ட்டை வச்சு திருடியவனுக்கு ஒரு பயனுமில்லை....
பணம் இல்லையென்றால் பேக்கை தூக்கிப்போட்டு விடு்வான்.....பேக் கண்டிப்பாக கிடைக்கும்....என்று சொல்லி அனுப்பினேன்.
என் அம்மாவோ,’’வெளிநாடு போகும்போது ஏர்போர்ட் வரை துணைக்கு கூட்டிட்டி போங்க....நாங்க அப்படித்தான் ஆள் அனுப்புவோம் என தன் பங்குக்கு ஆறுதல் கூறினார்....

திருச்சி ரயில்வே போலீ்ஸில் கம்ளைண்ட் கொடுத்துட்டு 
அடுத்த ஸ்டேசனில் இறங்கி சென்று விட்டார்....
இதெல்லாம் கஷ்டமான அனுபவம்....
ஆனால்,இந்த சோதனையிலும் இறைவன் ஒரு 
நன்மையை வைத்திருப்பான்.
அவருக்கு அவர் பேக் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை
செய்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தேன்....

வெளிநாடு செல்வோர் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டு்ம்.....

Thursday, November 15, 2012

மக்களாட்சி கிராமம்

திருநந்திக்கரை. கன்னியாகுமரி மாவட்டமும் கேரள எல்லையும் கைகுலுக்குமிடத்தில் இருக்கிற கிராமம். தமிழும் மலையாளமும் கலந்து பேசுகிறார்கள். எங்கெங்கு காணினும் பச்சைப்பசேல் ரப்பர் மரங்கள். தரமான கான்க்ரீட் சாலைகள். கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலுமே கழிப்பறைகள். நூலகம் சுறுசுறுப்பாய் இயங்குகிறது. வசதியான சிறுவர் பூங்கா. பாதுகாக்கப்பட்ட குடிநீர். சொல்லிக்கொண்டே போகலாம். இது நம்மூர்தானா என்று மூக்கின்மேல் விரல் வைத்தபடியே கிராமவலம் வந்தோம்.




முழுக்க முழுக்க மக்கள் கண்காணிப்போடு இங்கே கிராம வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. முறைகேடு நடந்தால் முறையாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துகிறார்கள். ஏதேனும் பணி இழுத்தடிக்கப்பட்டால், துரிதப்படுத்தத் தேவையான முயற்சிகளை முன்னெடுக்கிறார்கள். புறக்கணிக்கப்பட்டால் தெருவுக்கு வந்து போராடுகிறார்கள். நிஜமான, ‘நமக்கு நாமே’ திட்டத்தை திருநந்திக்கரையில் கண்டோம்.



சில காலத்துக்கு முன்பு எங்களுக்கு போடப்பட்ட கான்க்ரீட் சாலை தரமானதாக இல்லை. ஒரு மழைக்குக் கூட தாங்கவில்லை. அதுபோலவே குழந்தைகள் நல மையம் கட்டப்பட்ட போதும் கூட தரமற்றதாக இருந்தது. இம்மாதிரி எந்த வளர்ச்சிப் பணிகளும் முழுமையானதாக இல்லை என்கிற நிலை இருந்தபோது அனைத்து ஊர் மக்களையும் அழைத்து ஒரு கூட்டம் போட்டோம். இனி அரசுப் பணிகளை நாமே நேரடியாகக் கண்காணிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றி, அதன் ஆரம்பமாக, ‘கிராம வளர்ச்சிக்கான மக்கள் இயக்கம்’ என்று ஓர் அமைப்பினை உருவாக்கினோம்" என்கிறார் கவுன்சிலர் சசிக்குமார்.



ஐநூறு குடும்பங்கள் இந்தக் கிராமத்தில் வசிக்கின்றன. கிராம வளர்ச்சிக்கான மக்கள் இயக்கத்தில் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டன. சிறுவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என்று ஒவ்வொரு குழுவிலும் பதினைந்து பேர் இருப்பார்கள். அதிகாரிகளுக்கு புகார் அளித்தல், தேவைப்படும்போது போராட்டம் நடத்துதல், பணிகளைக் கண்காணித்தல், ஒப்பந்தக்காரர்களுக்கு ஆலோசனை அளித்தல் என்று எல்லாப் பணிகளுக்கும் தனித்தனியாக குழுக்கள் இருக்கின்றன.



எங்கள் ஊர் அரசுப்பள்ளியில் முதலாம் வகுப்புக்கு குழந்தைகளை சேர்க்கும்போது குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் சேர்த்து ஊர் மக்கள் பாராட்டு விழா நடத்துகிறார்கள். ஒரு கலாச்சாரமாக உருவெடுத்துவிட்ட இந்த விழா மூலமாக பள்ளிக்கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலமாக இன்று கிராமத்தில் பள்ளிக்கு வராத குழந்தைகளே இல்லை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது" என்று அடுத்த ஆச்சரிய மகிழ்ச்சியை வழங்குகிறார் ஆசிரியர் திவாகரன்.



‘’எங்கள் அமைப்பின் மூலம் கண்காணிப்பதால் பிரச்சினைகளும் வந்திருக்கின்றன. ஒப்பந்தக்காரர்கள் எங்கள் பகுதியை புறக்கணித்தனர். நாங்கள் மிகவும் அழுத்தம் கொடுப்பதாக பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் கூறினார்கள். ஆனால் நாங்கள் எங்கள் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. தற்போது நாங்கள் எதிர்பார்த்த அளவில் கிராமம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது" என்கிறார் சுந்தரேசன்.



மக்களே களமிறங்கி ஊரை முன்னேற்றி இருக்கிறார்கள். இந்த வெற்றி இவர்களை அடுத்தகட்ட திட்டங்களுக்கு நகர்த்தியிருக்கிறது. விரைவில் கிராம வளர்ச்சித் தகவல் மையம், போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம், வீட்டுக்கொரு காய்கறித் தோட்டம் என்று அடுத்தடுத்த புரட்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த யோசித்து வருகிறார்கள்.



‘காந்தி கண்ட கிராம ராஜ்யம்’ என்று வாயளவில் பேசிக்கொண்டிருக்காமல், செயல்பாடுகளுக்கு கொண்டு வந்திருக்கும் திருநந்திக்கரை மக்களை வாழ்த்துவோம்; பின்பற்றுவோம்.


நன்றி-புதியதலைமுறை வார இதழ்